
எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு பதில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தின் முன் பக்கத்தில் நரேந்திர மோடியின் புகைப்படம் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “முழு பிஜேபியா மாறிய அதிமுக கட்சி ~ பிரச்சார வாகனத்தில் ஜெயலலிதா படத்திற்கு பதில் மோடி படம் .
~பெரிய மோடி படத்திற்கு பக்கத்தில் குட்டியா சின்னதா ஓரமா ஜெயலலிதா MGR படம் இருப்பது போல தெரிகிறது ஆனால் கண்ணுக்கு தெரியவில்லை 🙄 எம்ஜிஆர் விசுவாசிகள் அதிமுகவிற்கு ஓட்டு போடுவது ஒரு பக்கம் ஜெயலலிதா விசுவாசிகள் இனிமேலும் அதிமுகவிற்கு ஓட்டு போட வேண்டுமா சிந்தியுங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் அ.தி.மு.க, பாஜக-வுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. பாஜக-வுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துவிட்டு மீண்டும் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்த அ.தி.மு.க-வை பலரும் விமர்சித்து வருகின்றனர். கட்சியின் கொள்கை, கோட்பாடு எல்லாவற்றையும் பாஜக-வுக்காக விட்டுக்கொடுத்து வருவதாக மற்ற கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அந்த வகையில் கட்சியின் தலைவியாக இருந்த ஜெயலலிதாவின் புகைப்படத்தை பிரசார வாகனத்தில் பயன்படுத்துவதற்கு பதில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என்று புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மார்ச் 25ம் தேதி எடப்பாடி பழனிசாமி மயிலாப்பூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அவரது பிரசார வாகனத்தின் முகப்பு பகுதியில் ஜெயலலிதாவின் புகைப்படம்தான் இருந்தது. ஆனால், மோடியின் புகைப்படம் இருப்பதாக பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது எடிட் செய்யப்பட்ட புகைப்படமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
மயிலாப்பூரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் தொடங்கிய வீடியோ காட்சிகளை அதிமுக-வின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலிருந்து எடுத்து பார்த்தோம். எடப்பாடி பழனிசாமியின் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த பிரசார நிகழ்வு நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டிருந்தது. அதில், ஜெயலலிதாவின் புகைப்படம்தான் இருந்தது. அது தானாகவே மற்ற தலைவர்களின் புகைப்படங்களை மாற்றும் எல்இடி திரை போல இல்லை. ஜெயலலிதாவின் புகைப்படத்தை பிரிண்ட் செய்து வைத்தது போல இருந்தது.

உண்மைப் பதிவைக் காண: dtnext.in I Archive
அந்த வீடியோவில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்திலிருந்த இடத்திற்கு பழனிசாமி வந்த காட்சியைக் கண்டோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்பட காட்சி அதிமுக யூடியூப் பக்கத்தில் வெளியாகி இருந்த பிரசார வீடியோவில் சரியாக 1 மணி நேரம் 7 நிமிடம் ஐந்தாவது விநாடியில் வருவதை காண முடிந்தது.

அது மட்டுமின்றி, வீடியோவின் எந்த இடத்திலும் பிரசார வாகனத்தின் முகப்பு பகுதியில் மோடியின் புகைப்படம் இடம்பெறவில்லை. செய்தி ஊடகங்களிலும் கூட இந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தனர். எல்லாவற்றிலும் ஜெயலலிதாவின் புகைப்படம் மட்டுமே இருந்தது. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியானது.
முடிவு:
எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு பதில் மோடியின் புகைப்படம் இருந்ததாக பரவும் படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


