கும்பகோணம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை கொலை செய்தது யார்?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழகம்

கும்பகோணம் நாச்சியார்கோவிலில் ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் கோபாலை இஸ்லாமியர்கள் கொலை செய்தார்கள் என்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

முகத்தில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடக்கும் முதியவர் படம் மற்றும் வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவில் கொலை செய்தது யார் என்று தெரியவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக மாநாடு நடத்தப்பட்டதால் ஆத்திரத்தில் இப்படி செய்தார்களா என்று தெரியவில்லை என்று ஒருவர் கூறுகிறார்.

நிலைத் தகவலில், “மீண்டும் ஒரு துலுக்க தீவிரவாத தாக்குதல் கும்பகோணத்தில். நாச்சியார் கோவில் R.S.S பொறுப்பாளர் வாசுதேவன் ஜி சமீபத்தில் CAA ஆதரவாக H.ராஜா தலைமையில் போராட்டம் நடத்தினார். அதற்கு பழிவாங்கும் நோக்கில் அவரின் 75 வயதான தந்தை கோபால் #துலுக்க_தீவிரவாதிகளால் நேற்று இரவு 8 மணி அளவில் கும்பகோணம் பெருமாள் கோவில் வாசலிலேயே வெட்டிக்கொல்லப்பட்டார். அமித்ஷாஜி… இன்னும் எத்தனை பேரை தான் காவு கொடுக்கணும்..?” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Karthik என்பவர் 2020 ஜூலை 1ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவிலில் ஓய்வு பெற்ற ஆசிரியரும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியுமான கோபாலன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையை நாச்சியார்கோவில் நகர பா.ஜ.க தலைவர் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். மடம் ஒன்றுக்கு சொந்தமான கடையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், இஸ்லாமிய பயங்கரவாதிகள் கொலை செய்துவிட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் குறிப்பிட்ட மதத்தினரை புண்புடுத்தியும் மற்றொரு மதத்தினரைத் தூண்டும் விதத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம்.

விகடன், இந்து உள்ளிட்ட இதழ்களில் வெளியான செய்தி நமக்கு கிடைத்தது. அனைத்திலும் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டதாக குறிப்பிட்டிருந்தனர்.

vikatan.comArchived Link 1
hindutamil.inArchived Link 2
dinamalar.comArchived Link 3

விகடன் வெளியிட்டிருந்த செய்தியில், ” கோபாலன் நேற்றிரவு 9 மணிக்கு மேல் தனது வீட்டிற்கு வெளியே நின்றுள்ளார். அப்போது போதையில் அங்கு வந்த சரவணன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோபாலன் முகத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் முகம் உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுப்பட்டதால் கோபாலன் அலறியபடி அப்படியே சரிந்து விழுந்தார். இதையடுத்து சரவணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

 கோபாலன் நேற்றிரவு 9 மணிக்கு மேல் தனது வீட்டிற்கு வெளியே நின்றுள்ளார். அப்போது போதையில் அங்கு வந்த சரவணன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோபாலன் முகத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் முகம் உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுப்பட்டதால் கோபாலன் அலறியபடி அப்படியே சரிந்து விழுந்தார். இதையடுத்து சரவணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் நேற்று இரவு மதுபோதையிலிருந்த சரவணன் மாம்பழம் வெட்டுவதற்கு எனக் கூறி புதிய கத்தி ஒன்றை வாங்கி வந்துள்ளார். அப்போது வீட்டிற்கு முன் நின்றுகொண்டிருந்த கோபாலனிடம், ` என் கடையைக் காலி செய்ய வைத்துவிட்டாயே.. உன்னை சும்மா விடமாட்டேன்’ எனக் கூறி கத்தியைக் கொண்டு முகம் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டிக் கொலை செய்துள்ளார். அடுத்த ஒரு மணி நேரத்திலேயே சரவணனைக் கைது செய்துவிட்டோம்” என்றனர் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

செய்திகள் எல்லாம் பா.ஜ.க பிரமுகர் கைது செய்யப்பட்டுவிட்டார் என்றே கூறுகின்றன.

இருப்பினும் இதை உறுதி செய்ய நாச்சியார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டரை தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர், “கொலை தொடர்பாக குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்துவிட்டோம். கொலை நடந்த உடனே யார் கொலை செய்தது என்று தெரியாததால் அப்படி தவறாக போட்டிருக்கலாம். இந்த கொலைக்கும் பயங்கரவாதத்துக்கும் தொடர்பில்லை. முழுக்க முழுக்க முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது” என்றார்.

ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்டது உண்மை, ஆனால் அவரை எந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களும் கைது செய்யவில்லை. கொலை செய்தது பா.ஜ.க நிர்வாகி என்பது உறுதியாகி உள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில், கும்பகோணம் நாச்சியார்கோவிலில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியைக் கொலை செய்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:கும்பகோணம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை கொலை செய்தது யார்?

Fact Check By: Chendur Pandian 

Result: False