‘மாமன்னன் படக்குழுவினர் மீது வழக்கு தொடர்வேன்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?
சேலம் மாவட்டச் செயலாளராக இருந்த தன்னைக் குறிப்பிடும் வகையில் கதை இருப்பதால் மாமன்னன் படக்குழுவினர் மீது அவதூறு வழக்குத் தொடரப் போகிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
எடப்பாடி பழனிசாமி படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "சேலம் மாவட்ட செயலாளராக இருந்த என்னைக் குறிப்பிடும் வகையில் கதை இருப்பதால் மாமன்னன் படக்குழுவினர் மீது அவதூறு வழக்கு தொடுப்பேன் - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை Dmk Vicky என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூலை 5ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான மாமன்னன் படம் பற்றி சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அந்த படத்தில் மாவட்டச் செயலாளராக வருபவரின் கதாபாத்திரம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று பலரும் சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் படக் குழுவினர் மீது வழக்கு தொடருவேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது.
2023 ஜூலை 5ம் தேதி, அந்த படம் பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பிய போது. அந்த படம் ஓடினால் என்ன? ஓடாவிட்டால் என்ன? என்று எடப்பாடி பதில் அளித்திருந்தார். வழக்கு தொடரப்போகிறேன் என்று அவர் கூறியதாக எந்த செய்தியும் இல்லை. அவரது பேட்டியைப் பார்த்த போது அவர் அப்படிக் கூறவில்லை என்பது தெளிவானது.
இந்த சூழலில் இந்த நியூஸ் கார்டு உண்மையில்லை என்பது தெளிவாகவே, ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வு செய்தோம். புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டு அதில் இருந்தது. ஆனால் அதில், "மாமன்னன் படம் ஓடுனா என்ன, இல்லனா என்ன? இதுவா நாட்டு மக்களுக்கு தேவை; இதுவா வயிற்றுப் பசியை போக்க போகுது? - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி" என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்த வதந்தி பரப்பியிருப்பது தெளிவானது.
இதை மேலும் உறுதி செய்துகொள்ள, புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவுக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி உண்மையா என்று கேட்டோம். அவர்களும் இது போலியானது என்று உறுதி செய்தனர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மேற்கண்ட நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:‘மாமன்னன் படக்குழுவினர் மீது வழக்கு தொடர்வேன்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?
Written By: Chendur PandianResult: False