பா.ஜ.க நிதி உதவி செய்ததாக கறுப்பர் கூட்டம் கூறியதா?- போலி நியூஸ்கார்டு

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

கடவுள் வழிபாட்டைப் பற்றி தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட பா.ஜ.க உதவி செய்தது என்று கறுப்பர் கூட்டம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜகா நிதி உதவி??… நாத்தீகர்களை வைத்து கடவுள் மற்றும் வழிபாடுகளை தவறாக பேச தவறாக சித்தரிக்க பாஜகா நிதி உதவி வழங்கியதாக கருப்பர் கூட்டம் தகவல்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை இணையதள திமுக என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Karthik Deva Adv‎ என்பவர் 2020 ஜூலை 16ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகினற்னர்.

உண்மை அறிவோம்:

கந்த சஷ்டி கவசத்தின் விளக்கம் என்று அவதூறான தகவலை 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வெளியிட்டதாக மீது பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகி செந்தில் வாசன் கைது செய்யப்பட்டார். நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேந்திரன் நடராஜன் என்பவர் புதுச்சேரியில் சரண் அடைந்தார். அவரை தமிழ்நாடு போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

இந்த நிலையில், தங்களுக்கு ‘பா.ஜ.க நிதி உதவி செய்தது,’ என்று கறுப்பர் கூட்டம் கூறியதாக நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. இது பார்க்க ஓரளவுக்கு அசல் போலத் தெரிவதால் பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். ஏராளமான பிழைகளோடு இந்த நியூஸ் கார்டு உள்ளது. பின்னணி வாட்டர் மார்க் லோகோ இல்லை. மேலும் இது வழக்கமான நியூஸ் 7 தமிழ் ஃபாண்ட் இல்லை. எனவே, இது நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு இல்லை.

இந்த நியூஸ் கார்டில் பா.ஜ.க என்பதற்குப் பதில் பா.ஜ.கா என உள்ளது. பாரதிய ஜனதா கட்சி என்பதால் பா.ஜ.க என்றுதான் குறிப்பிட வேண்டும்.  நாத்திகர்கள் என்பது நாத்தீகர்கள் என்று எழுதப்பட்டுள்ளது. நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து இந்த பதிவை உருவாக்கியிருக்கலாம் என்று தெரிந்தது.

Facebook LinkArchived Link

நியூஸ் 7 தமிழில் வெளியான நியூஸ் கார்டை ஆய்வு செய்தோம். அப்போது 2020 ஜூலை 15ம் தேதி கறுப்பர் கூட்டம் தொடர்பாக அது நியூஸ் கார்டு வெளியிட்டிருந்தது தெரிந்தது. அதில், “கறுப்பர் கூட்டம் எனும் யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை வெளியிட்டதாக வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் கைது” எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்திருப்பது தெரிந்தது. இது போலியானது என்று நியூஸ்7 தமிழ் ஆன்லைன் பிரிவு நிர்வாகியும் உறுதி செய்தார்.

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகிகள் தங்களுக்கு பா.ஜ.க நிதி உதவி செய்வதாக ஏதாவது கருத்து தெரிவித்துள்ளார்களா என்று தேடினோம். அப்படி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

அதே நேரத்தில், அந்த சேனலின் தொகுப்பாளர் சுரேந்திரன் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவில், “கலாச்சாரம், நம்பிக்கை என்ற பெயரில் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும், கல்வியறிவின்மை, அறியாமை ஆகியவற்றை ஒழிப்பதற்காகவும் பல்வேறு தகவல்களை வழங்கி வருவதாக,’’ குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி, ஜனவரி 1-ம் தேதி வெளியிட்ட பதிவு தொடர்பாக 6 மாதத்திற்கு பிறகு ஜூலை 14-ம் தேதி அளித்த புகாரில் தன் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும், வலதுசாரி சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து பணியாற்றி வருவதால் அதை முடக்கும் நோக்கில் தன் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதால், அதில் தான் கைதாவதிலிருந்து தவிர்க்க முன் ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கூறியிருப்பது தெரிந்தது. 

tamil.indianexpress.comArchived Link

தற்போது கறுப்பர் கூட்டம் நிர்வாகிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. அவர்கள் பேட்டி அளிக்கவும் வாய்பில்லை. மேலும் இந்த நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு பா.ஜ.க நிதி உதவி செய்ததாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பா.ஜ.க நிதி உதவி செய்ததாக கறுப்பர் கூட்டம் கூறியதா?- போலி நியூஸ்கார்டு

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply