
காவிரி ஆற்றில் மிகப்பெரிய அனகோண்டா போன்ற மலைப்பாம்பு ஒன்று வெள்ளத்தில் செல்லும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link I Archived Link 1 I Archived Link 2
ஆற்றில் மிகப்பெரிய அனகோண்டா பாம்பு நீந்தி கடந்து செல்வது போன்று உள்ளது. வீடியோ தெளிவின்றி உள்ளது. வீடியோவில், “கர்நாடகாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் அனகோண்டா போன்ற ஒரு மலைப்பாம்பு மழை வெள்ளத்தில் செல்லும் காட்சி” என்று குறிப்பிட்டுள்ளனர். மொத்தம் இந்த வீடியோ 30 விநாடிகள் மட்டுமே ஓடுகிறது.
இந்த வீடியோவை ரைட் நியூஸ் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஆகஸ்ட் 13ம் தேதி பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியாவில் மலைப்பாம்புகள் பொதுவாக 2.4 முதல் 3 மீட்டர் வரை நீளம் கொண்டவை. ஆனால், இந்த வீடியோவில் ஒரு கரையையும் மறுகரையையும் தொடும் வகையில் மலைப்பாம்பு இருந்தது. பார்க்க கிராஃபிக்ஸ் செய்யப்பட்டது போலத் தெரிந்தது.
இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்திருந்த சிலர், இது பழைய வீடியோ என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த வீடியோவைப் பார்த்ததாகவும் குறிப்பிட்டு இருந்தனர். இதனால், வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி, ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.
அப்போது பிரேசில் நாட்டில் 50 அடி நீள அனகோண்டா பாம்பு ஒன்று ஆற்றைக் கடந்து செல்லும் வீடியோ என்று சமூக ஊடகங்களில் இதே வீடியோ பகிரப்பட்டு வந்தது தெரிந்தது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது.
தொடர்ந்து தேடியபோது, பிரேசில் நாட்டில் 50 அடி நீள அனகோண்டா பாம்பு சிக்கியது உண்மையா என்று உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தப்பட்டதும் நமக்குத் தெரியவந்தது. அந்த ஆய்வுக் கட்டுரையைப் படித்துப் பார்த்தோம்.
அதில், 2018ம் ஆண்டு யூடியூபில் பதிவிடப்பட்ட, ராட்சத மலைப்பாம்பு ஒன்று சாலையைக் கடக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தனர். அந்த வீடியோவைப் பார்க்கும்போது அந்த பாம்பு 10 முதல் 15 அடி நீளம் கொண்டதாக இருந்தது. ஆனால், இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று அதில் குறிப்பிடவில்லை. இந்த வீடியோவை எடிட் செய்து மிகப்பெரிய அனகோண்டா ஆற்றைக் கடப்பது போல வெளியிட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டு இருந்தனர். உண்மையில் சாலையில் தேங்கிக்கிடந்த தண்ணீரில் அந்த பாம்பு செல்வது தெளிவாகத் தெரிந்தது.
உலகில் 50 அடி நீளத்துக்கு மலைப்பாம்பு எங்குமே இல்லை. கின்னஸ் உலக சாதனை புத்தக பதிவின் படி உலகின் மிக நீளமான பாம்பின் அதிகபட்ச நீளமே 25.2 அடிதான். ஆனால், அசல் வீடியோவை கிராஃபிக்ஸ் செய்து மிகப்பெரிய பாம்புபோல காட்டியுள்ளனர். கின்னஸ் சாதனை செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், வெளிநாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவில் “காவிரி ஆற்றைக் கடக்கும் மலைப்பாம்பு” என்று தவறான தகவலிட்டு ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருப்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:காவிரியில் அனகோண்டா போன்ற மலைப்பாம்பு – அதிர்ச்சியைத் தந்த ஃபேஸ்புக் வீடியோ
Fact Check By: Chendur PandianResult: False
