7000 ஆண்டுகளாக நந்தி வாயில் இருந்து வழியும் நீர்: ஃபேஸ்புக் செய்தியால் சர்ச்சை

ஆன்மிகம் சமூக ஊடகம் | Social

‘’7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர்,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஃபேஸ்புக் வீடியோ பதிவு ஒன்றை காண நேரிட்டது. இது உண்மையா எனக் கண்டறியும் சோதனையில் ஈடுபட்டோம். அதில், கிடைத்த விவரங்கள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது.

தகவலின் விவரம்:

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்

நம் முன்னோர்களால் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான கோவில்களில் நம் அறிவிற்கு புலப்படாத ஏதோ ஒரு ஆச்சர்யம் இருந்துகொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் ஆராய்ச்சியாளர்களே குழம்பும் வகையில் விசித்திரமான ஒரு நந்தி சிலை உள்ளது. வாருங்கள் அதை பற்றி விரிவாக பார்ப்போம்.

கர்நாடக மாநிலம், மல்லேஸ்வரம் என்ற ஊரில் உள்ளது “தட்சிண முக நந்தி தீர்த்த கல்யாணி கோவில்”. கிட்டதட்ட 7000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபுள்ள இந்த கோவிலில் உள்ள நந்தி சிலையின் வாயில் இருந்து எப்போதும் நீர் ஊற்றிக்கொண்டே இருக்கிறது.

பொதுவாக எல்லா கோவில்களிலும் நந்தி தேவரின் சிலை சிவ லிங்கத்திற்கு எதிராக இருக்கும். ஆனால் இந்த கோவிலில் நந்தி தேவரின் சிலை சிவனின் தலைக்கு மேல் அமைக்கப்ட்டுள்ளது.

நந்தியின் வாயில் இருந்து ஊற்றும் தண்ணீர் எப்போதும் சிவ லிங்கத்தின் மீது படும்படி மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.

நந்தியின் வாயில் இருந்து ஊற்றும் தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை.
இந்த தீர்த்தத்தில் அபூர்வ சக்தி இருப்பதாவதும், இதை பருகினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். சிவபெருமானை அபிஷேகித்த பிறகு இந்த தீர்த்தம் எதிரில் உள்ள கோவில் குளத்தில் கலக்கிறது.

Archived Link

இந்த பதிவை ஏப்ரல் 27ம் தேதியன்று, Padma Balu என்ற ஃபேஸ்புக் ஐடி வெளியிட்டுள்ளது. இதனை உண்மை என நம்பி, இதுவரையிலும் 9,000க்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:
பொதுவாக, ஆன்மிகம் சார்ந்த செய்திகளில், தலை எது, வால் எது என்றே தெரியாத அளவுக்கு, பலவித திரிபுகள் கலந்திருக்கும். அதன்படிதான் இந்த ஃபேஸ்புக் செய்தியும் உள்ளது. இவர்கள் சொல்வதைப் போல, நிஜமாகவே, 7000 ஆண்டுகளாக, ஒரு கோயில் பயன்பாட்டில் இருக்க முடியுமா, அப்படியே இருந்தாலும் அந்த நந்தியின் வாயில் இருந்து அவ்வளவு காலம் நீர் வழிந்தபடி இருக்குமா என தேடிப் பார்த்தோம்.

இதன்படி, கூகுளில் தேடியபோது, ஸ்ரீ தக்‌ஷிணாமூர்த்தி நந்தி தீர்த்த கல்யாணி ஷேத்ரா என்ற கோயிலின் விவரம் கண்ணில் சிக்கியது. இந்த பதிவில் கூறியுள்ளதைப் போல, இது ஒன்றும் 7000 ஆண்டுகள் பழமையான கோயிலோ, நந்தி சிலையோ அல்ல. இது சுமார் 400 ஆண்டுகள் தொன்மையுடைய ஒன்றாகும். தரைமட்டத்தில் இருந்து தாழ்வாக இந்த நந்தி கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, பல ஆண்டுகள், இந்த கோயில் வெளியில் தெரியாமல், சேற்றில் புதையுண்டு கிடந்துள்ளது. அதனை, 1997ம் ஆண்டு சில தன்னார்வலர்கள் கண்டுபிடித்து, மீட்டெடுத்துள்ளனர்.

பெங்களூருவின் மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள இக்கோயிலின் சிறப்பு, நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர், அதற்கு கீழே அமைக்கப்பட்டுள்ள லிங்கத்திற்கு அபிஷேகம் போல ஊற்றுவதுதான். அதாவது, 2 தளமாக, தரைக்கடியில் இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, 1882ம் ஆண்டு, ராவ் பகதுர் மல்லப்பா ஷெட்டி என்பவர், இந்த கோயிலில் உள்ள நந்தி மற்றும் அதன் வாயில் வழியும் நீர் வடிவமைப்பை ஏற்படுத்தியுள்ளார். பாதாள சாக்கடைத் திட்டம் போல, பூமிக்கடியில் இருந்து நீர் ஊற்றை திசைதிருப்பி, நந்தியின் வாய் வழியே, குழாய் மூலமாகப் பாய்ந்து, பின்னர், நந்திக்கு கீழே உள்ள கல்யாணி தொட்டியில் அது சேர்ந்து, அதில் இருந்து, அதற்கும் கீழே உள்ள லிங்கத்தின் தலையில் வடிவதுபோல, இதனை அவர் வடிவமைத்துள்ளார். லிங்கத்தில் ஊற்றும் தண்ணீர், படிப்படியாக, வெளியேறி, கோயிலின் வெளியே உள்ள குளத்தில் சென்று சேரும்படி, இதனை அவர் மாற்றியமைத்தும் உள்ளார். எனவே, இது மனித முயற்சியால் அமைக்கப்பட்ட ஒன்றுதான். இதில், எந்த ரகசியமும் இல்லை என உறுதி செய்யப்படுகிறது.

செய்தி உண்மைதான். ஆனால், 7000 ஆண்டுகளாக தொடரும் அதிசயம், ஆச்சரியம், கடவுளின் சித்தம் போன்றவை தேவையற்ற வதந்திகள் என்றே முடிவு செய்யப்படுகிறது. எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உண்மை, பொய் கலந்துள்ளதாக, முடிவு செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு, உண்மையும், பொய்யும் கலந்த ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய உறுதி செய்யப்படாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால் உரிய சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:7000 ஆண்டுகளாக நந்தி வாயில் இருந்து வழியும் நீர்: ஃபேஸ்புக் செய்தியால் சர்ச்சை

Fact Check By: Parthiban S 

Result: Mixture