ஃபானி புயல் ஒடிசாவை தாக்க பாஜக.,தான் காரணம் என்று ராகுல் காந்தி சொன்னாரா?

அரசியல் சமூக ஊடகம்

‘’பானி புயல் ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா போன்ற மாநிலங்களை தாக்குவதற்கு, பாஜக.,வின் சதிதான் காரணம்,’’ என்று ராகுல் காந்தி சொன்னதாகக் கூறி, பலரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்து வருகிறார்கள். இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:
குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவை எம்பெட் செய்ய முடியவில்லை என்பதால், அதனை ஸ்கிரின்ஷாட் எடுத்து இங்கே பகிர்ந்துள்ளோம்.

Nagarajan Sai என்பவர் பகிர்ந்துள்ள இந்த பதிவு உண்மையா, பொய்யா என பரிசோதிக்கும்படி, நமது வாசகர் தரப்பில் இருந்து வேண்டுகோள் வந்தது. அதன்பேரில், இதனை ஆய்வு செய்து, முடிவுகளை வெளியிட்டுள்ளோம்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவை பார்க்கும்போதே, சார்காஸ்டிக் என்பதை கடந்து, தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காக வெளியிடப்பட்ட பதிவு என உறுதியாகிறது. அதை வெளியிட்ட நாகராஜன் சாய் என்ற நபர், Tamil Iyers என்ற ஃபேஸ்புக் குழுவுடன் இணைந்து பகிர்ந்துள்ளார்.

ஃபானி புயல், 2013ம் ஆண்டுக்குப் பின், இந்தியா சந்தித்துள்ள பெரும் புயலாகும். வங்கக் கடலை கடந்து, சுமத்ரா தீவுகளுக்கு அருகே உருவான இந்த புயல், படிப்படியாக, வங்கக் கடலை தாண்டி, தமிழகக் கடலோரத்தை ஒட்டி, ஆந்திராவை கடந்து, ஒடிசா வழியாக, தரையிறங்கியுள்ளது. தற்சமயம், ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்களில் கடும் நாசத்தை ஃபானி புயல் ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இந்த சூழலில், ஃபானி புயல், பாஜக ஆட்சியில் இல்லாத ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரா மாநிலங்களை தாக்கிவிட்டதாகவும், இதன் பின்னணியில் எதோ பெரிய சதி உள்ளதாகவும், ராகுல் காந்தி கூறியதாகக் கூறி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளனர்.

அதாவது, பாஜக.,வின் சதியால் ஃபானி புயல் ஏற்பட்டுவிட்டதாகவும், அந்தளவுக்கு சிறுபிள்ளைத்தனமாக ராகுல் காந்தி உள்ளார் எனவும் தெரிவிக்கவே, இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ராகுலை பப்பு என்று கூறியுள்ளதோடு, தமிழ் ஐயர்ஸ் என்ற ஃபேஸ்புக் குழுவில் இதனை பகிர்ந்துள்ளதால், இதைச் செய்தவர்கள் காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள் என தீர்மானிக்கப்படுகிறது.

ஒருவேளை ராகுல் காந்தி சமீபத்தில், ஃபானி புயல் பற்றி ஏதேனும் கருத்து தெரிவித்தாரா என கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்போது, புயல் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள், தேவையான உதவிகளைச் செய்யும்படி, கோரிக்கை விடுத்துள்ள ஒரு செய்தியின் ஆதாரம் கிடைத்தது. அதனை மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு, முற்றிலும் தவறான ஒன்று எனவும், தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக, கேலி செய்கிறேன் என்ற பெயரில், விஷமத்தனமாக வெளியிடப்பட்ட ஒன்று எனவும் உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி நீங்கள் ஒருவேளை பகிர்ந்தால், அதுபற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:ஃபானி புயல் ஒடிசாவை தாக்க பாஜக.,தான் காரணம் என்று ராகுல் காந்தி சொன்னாரா?

Fact Check By: Parthiban S 

Result: False