சிஏஏவுக்குப் பிறகு பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டதா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவந்த பிறகு நடத்தப்பட்ட ஆய்வில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக 79 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே கருத்துக் கணிப்பு வெளியிட்டது என்று ஒரு பதிவ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

இந்தியா டுடே சிஒட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆங்கிலத்தில் “நாட்டின் மனநிலை, மோடி மீண்டும் பிரதமராக நீங்கள் வாக்களிப்பீரகளா?” என்று உள்ளது. ஆம் என்று 79 சதவிகிதம் பேரும், இல்லை என்று 21 சதவிகிதம் பேரும் கூறியதாக அதில் உள்ளது.

நிலைத் தகவலில், “MOOD OF NATION & INDIA TODAY & C- VOTER இனைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் மீண்டும் மோடி பிரதமராக வாக்களிப்பீர்களா என்ற கேள்விக்கு 79 % மக்கள் ஆதரவு தெரிவித்தது உள்ளனர். பாரத் மாதா கி ஜே 🇮🇳💪🏼” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, RN Krishnan Yayati Bjp என்பவர் 2020 பிப்ரவரி 7ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாடாளுமன்றத் தேர்தல் வர இன்னும் நான்கே கால் ஆண்டுகள் உள்ளன. அப்படி இருக்கும்போது மீண்டும் பிரதமராக ஆதரவு, என கருத்துக் கணிப்பு நடத்தியிருப்பது சந்தேகத்தை கிளப்பியது. மேலும், இந்தியா டுடே தமிழில் நியூஸ் கார்டு வெளியிடுவது இல்லை. அப்படி இருக்கும்போது தமிழில் வெளியான நியூஸ் கார்டு சந்தேகத்தை ஏற்படுத்தியது. நியூஸ் கார்டில், ‘பிரதமராக’ என்று குறிப்பிடுவதற்கு பதில் ‘பிரமதராக’ என்று குறிப்பிட்டுள்ளனர். ‘வாக்களிப்பீர்களா’ என்று குறிப்பிடுவதற்குப் பதில், ‘வாக்களிப்பீரகளா’ என்று எழுத்துப் பிழையோடு உள்ளது. மேலும் ‘நோ’ என்ற இடத்தில் எடிட் செய்யப்பட்டது போன்ற பகுதி தெளிவாக உள்ளது. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தன.

இருப்பினும், இந்தியா டுடே வெளியிட்ட செய்தி அடிப்படையில் இவர்கள் தமிழில் நியூஸ் கார்டை உருவாக்கியுள்ளார்களா என்று ஆய்வு செய்தோம். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்குப் பிறகு கருத்துக் கணிப்பு என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது இந்தியா டுடேவும் – சீவோட்டர்ஸ் இணைந்து கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால், ஏ.பி.பி நியூஸ் மற்றும் சீவோட்டரும் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தியதாக தெரியவந்தது. 

news.abplive.comArchived Link

ஏ.பி.பி நியூஸ் மற்றும் சீ வோட்டர்ஸ் இணைந்து நடத்திய ஆய்வில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு 62 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று இருந்தது. ஆனால் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவிலோ 79 சதவிகிதம் என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், மோடி பிரதமர் ஆக என்று கேள்வி கேட்கப்படவில்லை, சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவு என்றே குறிப்பிட்டிருந்தனர்.

இந்தியா டுடே வெளியிடும் மூட் ஆஃப் தி நேஷன் கருத்துக் கணிப்பில் சி.ஏ.ஏ-வுக்குப் பிறகு மோடியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்று ஏதேனும் செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம். இப்போது தேர்தல் வைத்தாலும் பா.ஜ.க 50 இடங்களை இழந்துவிடும் என்று கருத்துக் கணிப்பு வெளியாகி இருந்தது. மற்றபடி 79 சதவிகித மக்கள் ஆதரவு அளித்துள்ளதாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. மக்களின் பிரச்னைகளை திசை திரும்பும் விஷயமாகவே பெரும்பாலான மக்கள் கருதுவதாக சிஏஏ-வுக்கு பல கருத்துக் கணிப்புகளே நமக்கு கிடைத்தன.

indiatoday.inArchived Link

இந்தியா டுடே, சீவோட்டர்ஸ் இணைந்து வெளியிட்ட கருத்துக் கணிப்புகளை ஆய்வு செய்தோம். அப்போது, 2013ம் ஆண்டு இந்த நியூஸ்கார்டை இந்தியா டுடே வெளியிட்டது தெரியவந்தது. அதில், மோடி பிரதமர் வேட்பாளராக இருந்தால் வாக்களிப்பீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு 33 சதவிகிதம் பேர் ஆம் என்றும், 25 சதவிகிதம் பேர் இல்லை என்றும் கூறியதாக குறிப்பிட்டிருந்தனர். 

indiatoday.inArchived Link

2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் இதேபோன்று ஒரு நியூஸ் கார்டு வைரல் ஆனது. அதில் மோடி பிரதமர் ஆக 21 சதவிகிதம் பேரும், எதிராக 79 சதவிகிதம் பேரும் வாக்களித்ததாக குறிப்பிட்டிருந்தனர். அதுவும் போலியான நியூஸ் கார்டு என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள். இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் சுற்றி வருவது தெரிந்தது.

நம்முடைய ஆய்வில்,

இந்த நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா டுடே சீவோட்டருடன் இணைந்து குடியுரிமை திருத்தச் சட்டத்துக்குப் பிறகு கருத்துக் கணிப்பு நடத்தவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

ஏபிபி நியூஸ் என்ற ஊடகமும் சிவோட்டரும் இணைந்து நடத்திய ஆய்வில் 62  சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்ததாகக் குறிப்பிட்டிருந்தனர்.

வேறு ஒரு நிறுவனத்துடன் இணைந்து இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் பா.ஜ.க-வுக்கு இழப்பு என்று குறிப்பிட்டிருந்தது தெரிந்தது.

2014ம் ஆண்டு இந்தியா டுடே மற்றும் சீவோட்டர்ஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பின் அசல் நியூஸ் கார்டு கிடைத்துள்ளது. 

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்குப் பிறகு மோடியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்று இந்தியா டுடே – சீவோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவிப்பதாக வெளியான பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சிஏஏவுக்குப் பிறகு பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False

1 thought on “சிஏஏவுக்குப் பிறகு பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டதா?

  1. அடுத்த முறையும் மோடி தான் பிரதமராக வர போகிறார், எதுக்கு இந்த வெத்து சீனு

Comments are closed.