
மோடி மீண்டும் பிரதமராக நீங்கள் வாக்களிப்பீர்களா, என்று இந்தியா டுடே மற்றும் சிவோட்டர் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தியதாகவும், அதில் இல்லை என்று 79 சதவிகிதம் பேர் சொன்னதாகவும் கூறி ஒரு நியூஸ் போட்டோ கார்டு வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு…
தகவலின் விவரம்:
மோடி மீண்டும் பிரமதராக நீங்கள் வாக்களிப்பீரகளா?

இந்தியாடுடே மற்றும் சிவோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு போல, இது உள்ளது. மோடி மீண்டும் பிரதமராக நீங்கள் வாக்களிப்பீர்களா என்று மக்களிடம் கேட்டபோது, 21 சதவிகிதம் பேர் ஆம் என்றும், 79 சதவிகிதம் பேர் இல்லை என்றும் சொன்னது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2ம் தேதி இதனை பதிவிட்டுள்ளனர்.
இந்தியா டுடே நடத்திய உண்மையான கருத்துக்கணிப்பு என்றெண்ணி, 2,400-க்கும் மேற்பட்டோர் இதை ஷேர் செய்துள்ளனர். மேலும், 2000-க்கும் மேற்பட்டோர் கமென்ட்டும் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
பொதுவாக, இந்தியாடுடே கருத்துக் கணிப்புகளை தமிழில் வெளியிட்டது இல்லை. இந்த நியூஸ் கார்டில் எழுத்துகள் அனைத்தும் தமிழில் இருந்தன. அதுவும் எழுத்துப் பிழையோடு இருந்தன. ‘பிரதமர்’ என்ற சொல் ‘பிரமதர்’ என்று இருந்தது. ஒருவேளை இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பை தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதன் அடிப்படையில் ஆய்வை தொடங்கினோம்.
முதலில், படத்தின் நம்பகத்தன்மையை, உண்மையான படத்தைக் கண்டறிய முயற்சித்தோம். இந்த படத்தை, கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம்.


நாம் தேடிய போட்டோ கார்டின் உண்மையான படம் நமக்குக் கிடைத்தது. படத்தில், கருத்துக் கணிப்பு பகுதி தவிர்த்து மற்ற அனைத்தும் அப்படியே இருந்தது. இதன் மூலம் இந்த பதிவில் பயன்படுத்தப்பட்ட படமானது, போட்டோஷாப் செய்யப்பட்டது என்பது தெளிவாகிறது. ஆதார படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலே பதிவில் இடம் பெற்ற போட்டோஷாப் செய்யப்பட்ட படம். கீழே இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பு படம்.

(பதிவில் இடம் பெற்ற போலி படம்.)

(இந்தியா டுடேவில் வெளியான உண்மையான படம்.)
ஆனால், இந்தியா டுடே இணைய பக்கத்தில் இருந்து உண்மையான நியூஸ்கார்டு கிடைக்கவில்லை. இந்தியா டுடே வெளியிட்ட கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு தனி நபர் ஒருவர் தன்னுடைய பிளாக்கில் கட்டுரை வெளியிட்டுள்ளார். அதற்கு, இந்தியாடுடே வெளியிட்ட படத்தை ஆதாரமாக அவர் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. அந்த கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்தியாடுடே வெளியிட்ட உண்மை படத்தைக் கண்டறிய நம்முடைய சோதனையைத் தொடர்ந்தோம். இந்த முறை, Yandex-ல் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்து தேடினோம். இப்போது, இந்தியா டுடே வெளியிட்ட செய்தி மற்றும் படம் நமக்குக் கிடைத்தது.


2013ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16ம் தேதி வெளியான கட்டுரையில் இந்த படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மோடியின் செல்வாக்கு குறைந்தாலும் சிறந்த பிரதமருக்கான தேர்வில் முன்னணியில் இருக்கிறார் என்ற கட்டுரையை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. அப்போது மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பை விளக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
சமீபத்தில், மீண்டும் பிரதமராக மோடிக்கு வாக்களிப்பீர்களா என்று இந்தியாடுடே ஏதேனும் கருத்துக்கணிப்பு நடத்தியதா என்று தேடினோம். கடந்த மார்ச் 26ம் தேதி வெளியான கருத்துக்கணிப்பு நமக்குக் கிடைத்தது. அதில், பெரும்பாலான மாநிலங்களில் பிரதமர் மோடி இன்னும் செல்வாக்கான பிரதமராகவே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நாம் நடத்திய ஆய்வின்படி நமக்குத் தெரியவந்த உண்மை விவரம்:
1) இந்தியாடுடே -சிவோட்டர் தமிழில் கருத்துக்கணிப்பை வெளியிடவில்லை.
2) இந்தியாடுடே வெளியிட்ட உண்மை படம் கிடைத்துள்ளது.
3) பதிவில் பயன்படுத்தப்பட்ட நியூஸ்கார்டு, போட்டோஷாப் செய்யப்பட்ட ஒன்றாகும்.
4) மோடிக்கு வாக்களிக்கமாட்டோம் என்று பெரும்பான்மை மக்கள் கூறியதாக சமீபத்தில் எந்த ஒரு கருத்துக் கணிப்பையும் இந்தியா டுடே வெளியிடவில்லை.
மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில், இந்த பதிவு அரசியல் காரணங்களுக்காகத் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு
இந்தியாடுடே வெளியிட்டதாகப் பரப்பப்பட்ட கருத்துக்கணிப்பு படம் போலியானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய தவறான, போலி புகைப்படங்கள், வீடியோ, செய்திகள் போன்றவற்றை நமது வாசகர்கள் யாரும் பகிர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால், உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கைக்கு நீங்கள் ஆளாக நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Title:இந்தியா டுடே – சிவோட்டர் கருத்துக் கணிப்பு உண்மையா?
Fact Check By: Praveen KumarResult: False

Modi cannot come again. BJP is finished.