நாக்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தமிழ் பேசும் குழந்தை– ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

சமூக ஊடகம் | Social சமூகம்

பெற்றோர் தவறவிட்ட குழந்தை ஒன்று நாக்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் உள்ளதாகவும் அந்த குழந்தைக்கு தமிழ் மட்டுமே தெரியும் என்றும் பெற்றோருடன் சேரும் வரை இந்த வீடியோவை பகிருங்கள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

NAGPUR 2.png
Facebook LinkArchived Link 1Archived Link 2

காவல்துறை அதிகாரி ஒருவரின் கையில் குழந்தை உள்ள வீடியோவை பகிர்ந்துள்ளனர். 1.04 நிமிடங்கள் வீடியோ ஓடுகிறது. வீடியோவில் இந்த குழந்தை தங்களிடம் உள்ளது என்று அவர் கூறுகிறார். 

இந்த பதிவை Durai Sathanan என்பவர் 2019 செப்டம்பர் 23ம் தேதி வெளியிட்டுள்ளார். நிலைத் தகவலில், “தமிழ் மட்டுமே பேசும் இந்த குழந்தை நாக்பூர் ரயில் நிலைய காவல் நிலையத்தில் உள்ளது. பெற்றோருடன் சேரும் வரை தயவு செய்து பகிரவும்” என்று குறிப்பிட்டுள்ளார். குழந்தை தேம்பி தேம்பி அழுவது மனதை கரைக்கும் வகையில் உள்ளது. குழந்தை அதன் பெற்றோரை சென்று அடைய வேண்டுமே என்ற எண்ணத்தில், 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

நாக்பூர் ரயில் நிலைய காவல் நிலையத்தில் உள்ள தமிழ் குழந்தை என்று ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டுள்ளனர். ஆனால் அந்த போலீஸ் அதிகாரியைப் பார்க்கும்போது மகாராஷ்டிர மாநில காவல்துறையைச் சார்ந்தவர் போல இல்லை. அவருடைய சீருடையும் வித்தியாசமாக இருந்தது. பார்க்க பாகிஸ்தான் காவல்துறையை சார்ந்தவர் போல தெரிந்தார்.

வீடியோவின் தொடக்கத்திலேயே அவர், “என்னுடைய பெயர் சர்ப்ராஸ் நவாஸ். வாஜா அஜ்மீர் நகரி தானாவில் இருக்கிறேன். என்னுடைய எண் 03002356906” என்று கூறுகிறார். நாக்பூரில் வாஜா அஜ்மீர் நகரி தானா என்று ஏதும் உள்ளதா என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது, பாகிஸ்தானில் உள்ள வாஜா அஜ்மீர் நகரி போலீஸ் நிலையத்தின் முகவரியை காண்பித்தது. எனவே, இந்த குழந்தை பாகிஸ்தானில் காணாமல் போன குழந்தையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

NAGPUR 3.png
Search Link

வீடியோ காட்சியை படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ கடந்த சில மாதங்களாக சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது என்பது தெரிந்தது. பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருவதால், “Khawaja Ajmer Nagri thana baby missing” என்று கூகுளில் டைப் செய்து தேடியபோது இந்த வீடியோ நமக்கு கிடைத்தது. குழந்தை காணவில்லை என்று 2018 டிசம்பர் 5ம் தேதி பாகிஸ்தானில் பதிவேற்றம் செய்துள்ளனர். அடுத்த ஒரு வாரத்தில் நாக்பூரில் உள்ள தமிழ் பேசும் குழந்தை என்று இந்தியாவில் அதே வீடியோ பதிவேற்றம் செய்து பகிரப்பட்டு வருவது தெரிந்தது.

NAGPUR 4.png
Search Link 1Search Link 2
Youtube LinkArchived Link

காணாமல் போன குழந்தை கராச்சி Khawaja Ajmer Nagri போலீஸ் நிலையத்தில் உள்ளது என்று ஒரு வீடியோ கிடைத்தது. அந்த வீடியோ 2018 டிசம்பர் 5ம் தேதி வீடியோ வெளியிட்டிருப்பது தெரிந்தது. தொடர்ந்து தேடியபோது, இது தொடர்பாக உண்மை கண்டறியும் ஆய்வுகள் வெளியானது தெரிந்தது. குழந்தை பாதுகாப்பாக போலீசாரிடம் உள்ளது. ஆனால் இந்த குழந்தையின் பெற்றோர் கிடைத்தார்களா என்பது பற்றிய தகவல் இல்லை. கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆன நிலையில் நிச்சயம் குழந்தை அதன் பெற்றோரிடம் சேர்ந்திருக்கும் என்று நம்புகிறோம்.

நம்முடைய ஆய்வில்

வீடியோவில் உள்ள அதிகாரி, தன்னை வாஜா அஜ்மீர் நகரி தானாவை (அதாவது உருது மொழியில் போலீஸ் நிலையம்) சார்ந்தவர் என்று குறிப்பிடுகிறார்.

வாஜா அஜ்மீர் நகரி தானா என்பது கராச்சி நகரில் உள்ள போலீஸ் நிலையம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குழந்தை காணவில்லை என்று கராச்சி நகர போலீசார் வெளியிட்ட வீடியோ கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், கராச்சி நகர போலீசாரிடம் இருந்த குழந்தையை தமிழ் குழந்தை என்றும் நாக்பூர் காவல் நிலையத்தில் உள்ளது என்றும் தவறாக குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:நாக்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தமிழ் பேசும் குழந்தை– ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False