பொது இடத்தில் பெண்ணை கட்டிப்பிடித்த ஆ.ராசா! – வைரல் புகைப்படம் உண்மையா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

பொது இடத்தில் பெண்மணி ஒருவரை முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க எம்.பி-யுமான ஆ.ராசா கட்டிப்பிடித்ததாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

ஆ.ராசா பொது இடத்தில் பெண்மணி ஒருவரை கட்டிப் பிடிப்பது போல் படம் வெளியிட்டுள்ளனர். சுற்றிலும் போலீசார், பொது மக்கள் என்று எல்லோரும் உள்ளனர். நிலைத் தகவலில், “இது திராவிட முன்னேற்றக் கழகமா இல்லை *** முன்னேற்ற கழகமாடா? அட ச்சை என்ன கருமம்டா” என்று மிக மோசமான கமெண்ட் வெளியிட்டுள்ளனர்.

இந்த பதிவை ராஜேஷ் என்பவர் தேசிய முகநூல் திமுக என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் மார்ச் 6, 2020 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வழக்கமாக ஆ.ராசா வேட்டி, சட்டை, சஃபாரி ஆடை அணிவார். ஆனால், ஜிப்பா அணிந்தது போல உள்ளது. மேலும், இந்த புகைப்படம் உண்மையானது போலத் தெரியவில்லை. தலை வெட்டி ஒட்டியது தெளிவாகத் தெரிகிறது. பின்னால் உண்மையான நபரின் தடை தெரிவதை தெளிவாக காண முடிகிறது. இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும்போது இது ஃபோட்டோ மார்ஃபிங் என்பது தெரிகிறது. ஆனாலும், இதை ஏராளமானோர் ஷேர் செய்தும் வருகின்றனர். எனவே, இந்த படம் உண்மையானதுதானா என்று ஆய்வு செய்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, படத்தில் இருப்பது மகாராஷ்டிர மாநில அமைச்சரும், உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்ய தாக்கரே என்பது தெரியவந்தது.

2019ம் ஆண்டு நவம்பர் மாதம் மகாராஷ்டிர சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக வந்தவர்களை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலே வரவேற்றார். அப்போது அவைக்கு வந்த சிவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரேவை கட்டி அனைத்து வரவேற்றார் என்று அப்போது வெளியான செய்திகள் மற்றும் படங்கள் நமக்கு கிடைத்தன. 

outlookindia.comArchived Link 1
news18.comArchived Link 2

இதன்மூலம், ஆதித்ய தாக்கரே, சுப்ரியா சூலே படத்தை எடுத்து எடிட் செய்து ஆ.ராசா படத்தை வைத்து விஷமத்தனமான பதிவை வெளியிட்டிருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பொது இடத்தில் பெண்ணை கட்டிப்பிடித்த ஆ.ராசா! – வைரல் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •