டெல்லி கலவரத்தில் போலீசை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சாரூக்கானந்தா கைது- ஃபேஸ்புக் விஷமம்

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

டெல்லி கலவரத்தில் துப்பாக்கியால் சுட்ட ஆர்.எஸ்.எஸ் கைக்கூலி சாரூக்கானந்தா கைது என்று நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

டெல்லியில் கைது செய்யப்பட்ட ஷாரூக்கின் படத்தை நிலைத் தகவலில், டெல்லி கலவரத்தில் துப்பாக்கியால் சுட்ட RSS கைக்கூலி சாரூக்கானந்த ஐயங்கார் கைது. சட்டையை கழட்டியபோது பூணூல் இருந்தது அம்பலம் – டெல்லியிலிருந்து @news7tamil புலனாய்வுதுறை ” என்று குறிப்பிட்டுள்ளனர். 

இந்த பதிவை, Mahalaxmi என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 மார்ச் 4ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இந்த பதிவை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

டெல்லி கலவரத்தில் போலீசாரைப் பார்த்து துப்பாக்கியை நீட்டிய நபர் எந்த மதம் என்ற சர்ச்சை தொடக்கத்தில் இருந்தது. துப்பாக்கியை நீட்டிய நபரின் பெயர் ஷாரூக் என்று டெல்லி போலீஸ் அறிவித்தது. அதைத் தொடர்ந்து டெல்லி போலீஸ் வெளியிட்ட தகவல் தவறானது. அவனது உண்மையான பெயர் அனுராக் டி. மிஸ்ரா என்று ஃபேஸ்புக் ஐ.டி ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.

அனுராக் மிஸ்ரா என்பவர் மும்பையில் பாலிவுட்டில் நடித்து வருகிறார் என்றும் உண்மையில் டெல்லியில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய ஷாரூக் வேறு ஒருவர் என்றும் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் வெளியிட்ட செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த நிலையில் துப்பாக்கி காட்டி மிரட்டிய ஷாரூக்கை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது. உத்தரப்பிரதேசம் பரேலியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் பிடித்து, அதுதொடர்பான படத்தையும் வெளியிட்டிருந்தனர். 

Archived Link 1timesnownews.comArchived Link 2

உண்மை இப்படி இருக்க, ‘நியூஸ் 7 தமிழ் புலனாய்வுப் பிரிவு கைது செய்யப்பட்ட நபர் ஷாரூக்கானந்தா ஐயர்,’ என்று கண்டறிந்தது என்று பதிவிட்டு வருகின்றனர். 

இந்த தகவல் உண்மையா என்று கண்டறிய நியூஸ் 7 தமிழ் இணையதள பக்கத்தை ஆய்வு செய்தோம். அதில் அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

நியூஸ் 7 தமிழ் இணைய செய்திப் பிரிவைத் தொடர்புகொண்டு கேட்டோம். “இது வழக்கமான பொய்யான தகவல். கிண்டல் செய்யும் நோக்கத்தில் எங்களை டேக் செய்திருக்கிறார்கள். எங்களுக்கு டெல்லியில் புலனாய்வுக் குழு எதுவும் இல்லை” என்றனர்.

சமூக ஊடகத்தில் வேறு யாராவது இது போல் பதிவிட்டுள்ளார்களா என்று தேடியபோது இந்த பதிவை, Vechu Senjing என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 மார்ச் 3ம் தேதி வெளியிட்டிருப்பது தெரியவந்தது. கிண்டலான பதிவு போல இந்த பதிவை இவர்கள் உருவாக்கியிருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், இந்த பதிவு கிண்டல் வகையைச் சார்ந்தது என்று எங்கேயும் குறிப்பிடவில்லை.

கமெண்ட் பகுதியில் “போஸ்டை டெலீட் செய்யவும், மூளை இல்லாதவனுக இதை உண்மை என்று நம்பி சேர் பண்ணுவாங்க அதுக்கு 5000 லைக் போடும் ஒரு கூட்டம்” என்று ஒருவர் பதிவிட்டிருந்தார்.  ஆனாலும் இந்த பதிவை நீக்கவோ, இது ஆதங்கம், வதந்தி, கிண்டல் பதிவு என்று எச்சரிக்கை குறிப்பு வெளியிடாமலேயே இருந்தனர். எதிர் தரப்பினர் இந்த கிண்டல் பதிவையே உண்மையானது போல பகிர்ந்திருப்பது தெரிந்தது.

நம்முடைய ஆய்வில் தெரியவந்த உண்மையின் விவரம்,

1) டெல்லியில் கைது செய்யப்பட்ட நபர் ஷாரூக்தான் என்று டெல்லி போலீஸ் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.

2) ‘நியூஸ்7 தமிழ் புலனாய்வுக் குழு அவர் ஷாருக்கானந்தா ஐயர் என உண்மை கண்டறிந்துள்ளது,’ என்று வெளியான தகவல் தவறானது.

3) கைது செய்யப்பட்ட ஷாருக் ஒரு முஸ்லீம், அவர் ஐயர் கிடையாது. நியூஸ்7 தமிழ் டிவி சிறுபான்மையினருக்கு ஆதரவாகச் செய்தி வெளியிடுவதால், அந்த டிவியை கிண்டல் செய்யும் நோக்கில் தயாரிக்கப்பட்ட வதந்திதான் மேற்கண்ட செய்தி. ஆனால், சேம் சைடு கோல் போடுவது போல, இதனைப் பலர் உண்மை என நம்பி பகிர தொடங்கியுள்ளனர்.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:டெல்லி கலவரத்தில் போலீசை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சாரூக்கானந்தா கைது- ஃபேஸ்புக் விஷமம்

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •