
‘’ டாக்டர்:திரு அப்துல்கலாம் தன் தாயாருடன் முடிஞ்சா ஷேர் பண்னுங்க,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இது உண்மையா என ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
இதில், ஒரு சிறுவன் தனது தாயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். பார்க்கும்போதே இது மிகப் பழைய புகைப்படம் என தெரிகிறது. அப்துல் கலாமின் குடும்ப புகைப்படம் எனக் கூறியிருப்பதால், பலரும் இதனை உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படம் உண்மையா என கண்டறிய, #Yandex இணையதளத்தில் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இதுபோலவே ஏராளமான புகைப்படங்கள் கிடைத்தன. அவை அனைத்திலும், அப்துல் கலாமின் இளம் வயது புகைப்படம் என்றே கூறப்பட்டிருந்தது.
இதுபற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் தமிழ் செய்தித் தளமான சமயம் தமிழ் வெளியிட்ட செய்தி ஆதாரம் இங்கே தரப்பட்டுள்ளது.
இதன்பின், கூகுளில் அப்துல் கலாம் தாயார் பற்றி தேடிப் பார்த்தோம். அதன்போது, இது உண்மையான புகைப்படம்தான் என உறுதி செய்யும்படி, கூகுள் ஆதாரம் கிடைத்தது.
அப்துல் கலாம் இறந்தபோது, இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வந்தது. இதுபற்றி ஏற்கனவே, பல்வேறு இணையதளங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது. அப்துல் கலாமின் அரிய புகைப்படங்கள் பற்றிய செய்தித் தொகுப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும். மேலும் ஒரு செய்தி ஆதாரம் இங்கே தரப்பட்டுள்ளது.

ஆனால், கூகுளில் இப்படி தகவல் உள்ள நிலையில், இது உண்மையானதல்ல, என்று அப்துல் கலாம் அவர்களின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி ஊடகங்களுக்கு, சற்று தாமதமாக விளக்கம் அளித்துள்ள அப்துல் கலாம் உறவினரும், அப்துல் கலாம் இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் நிர்வாகியுமான ஷெய்க் சலீம், ‘’இதில், இருப்பவர்கள் கலாம், அவரது தாயார் இல்லை. அப்துல் கலாமின் சிறு வயது புகைப்படம் எதுவும் எங்களிடம் இல்லை. குறிப்பாக, இந்த புகைப்படம் தவறான ஒன்று,’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, அவரது தந்தை பற்றிய ஓவியம் ஒன்று கிடைத்துள்ளது. அதனை ஒப்பீடு செய்தால், நாம் ஆய்வு செய்யும் புகைப்படத்தில் இருக்கும் நபர் வேறு ஒருவராக உள்ளார். எனவே, அவரும் அப்துல் கலாம் தந்தை இல்லை என்று தெளிவாகிறது.
எனவே, அப்துல் கலாமின் சிறு வயது புகைப்படம் என்று கூறி பகிரப்படும் தகவல் நம்பகமானது இல்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம், வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
