அப்துல் கலாம் தாயுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா?

சமூக ஊடகம்

‘’ டாக்டர்:திரு அப்துல்கலாம் தன் தாயாருடன் முடிஞ்சா ஷேர் பண்னுங்க,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இது உண்மையா என ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Archived Link

இதில், ஒரு சிறுவன் தனது தாயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். பார்க்கும்போதே இது மிகப் பழைய புகைப்படம் என தெரிகிறது. அப்துல் கலாமின் குடும்ப புகைப்படம் எனக் கூறியிருப்பதால், பலரும் இதனை உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படம் உண்மையா என கண்டறிய, #Yandex இணையதளத்தில் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இதுபோலவே ஏராளமான புகைப்படங்கள் கிடைத்தன. அவை அனைத்திலும், அப்துல் கலாமின் இளம் வயது புகைப்படம் என்றே கூறப்பட்டிருந்தது.

இதுபற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் தமிழ் செய்தித் தளமான சமயம் தமிழ் வெளியிட்ட செய்தி ஆதாரம் இங்கே தரப்பட்டுள்ளது.

இதன்பின், கூகுளில் அப்துல் கலாம் தாயார் பற்றி தேடிப் பார்த்தோம். அதன்போது, இது உண்மையான புகைப்படம்தான் என உறுதி செய்யும்படி, கூகுள் அதிகாரப்பூர்வ ஆதாரம் கிடைத்தது.

அப்துல் கலாம் இறந்தபோது, இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வந்தது. இதுபற்றி ஏற்கனவே, பல்வேறு இணையதளங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது. அப்துல் கலாமின் அரிய புகைப்படங்கள் பற்றிய செய்தித் தொகுப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும். மேலும் ஒரு செய்தி ஆதாரம் இங்கே தரப்பட்டுள்ளது.

இதன்பேரில்தான், மேற்கண்ட புகைப்படம், இந்த ஃபேஸ்புக் பதிவிலும் ஷேர் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை தவறாக இருக்கும்பட்சத்தில், அப்போதே பலரும் இது தவறானதுதான் என குறிப்பிட்டு, செய்தி வெளியிட்டிருப்பார்கள். எனினும், இது வைரலாகப் பரவியதற்கு, யாருமே எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. அப்துல் கலாம் முஸ்லீம், அவரது தாயார் பொட்டு வைத்துள்ளார் எனச் சிலர் சந்தேகம் எழுப்பலாம். சில பெண்கள் முஸ்லீமாக இருந்தாலும், தமிழ் மரபுப்படி, பொட்டு வைப்பதும், புடவை அணிவதும் சாதாரணமான ஒன்றுதான். மஞ்சள், குங்குமம் தவிர்த்து, இதர ஸ்டிக்கர் பொட்டு போன்றவற்றை முஸ்லீம் பெண்கள் வைப்பது ஒன்றும் புதிதல்ல. அத்துடன், அவர்களின் கழுத்தில் தாலிக்குப் பதிலாக, முஸ்லீம் சம்பிரதாயத்திலான அணிகலன்களே இருக்கும். மேற்கண்ட புகைப்படத்திலும் அப்துல் கலாமின் தாயார் அப்படித்தான் உள்ளார். இது தவறான புகைப்படமாக இருந்திருந்தால், கூகுளில் அதிகாரப்பூர்வமாக அனுமதித்திருக்க மாட்டார்கள்.

எனவே, மேற்கண்ட புகைப்படம் உண்மைதான் என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் உண்மையான ஒன்றுதான் என நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்துல் கலாம், போற்றுதலுக்குரிய விஞ்ஞானியாக, தமிழ்ச் சமூகத்தில் மதிக்கப்படுகிறார். இளம் தலைமுறையினருக்கு, அவர் முன்னோடியாக திகழ்கிறார். இதன் அடிப்படையில்தான், அவரது சிறு வயது புகைப்படத்தை பலரும் வைரலாகப் பகிர்ந்து வருகிறார்கள், என புரிந்துகொள்ள முடிகிறது.

Avatar

Title:அப்துல் கலாம் தாயுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Parthiban S 

Result: True

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •