
‘’அதிமுக – பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம்,’’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர்கள் கூறுவது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரின் வேண்டுகோள் என்று பகிரப்பட்டுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தை தாங்கிய அட்டையை பிடிப்பது போல உள்ளது. அதில், ‘தமிழ் சகோதர சகோதரிகளே, அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணிக்கு வாக்களித்து தமிழகத்தை சோமாலியா போல் மாற்றி விடாதீர்கள்’ என்று அதில் இருக்கிறது.
ஏப்ரல் 17ம் தேதி இந்த பதிவை படித்ததில் பிடித்தது என்ற குழுவில் இனியன் என்பவர் பகிர்ந்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய நாள் என்பதால் பலரும் இதை ஷேர் செய்துள்ளனர். தற்போது தமிழகத்தில் நான்கு சட்டமன்ற தொதிகளுக்கு, இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த பதிவு பொய்யானது என பார்க்கும்போதே தெரிந்தது. கடந்த தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தமிழில் எழுதி வாழ்த்து தெரிவித்த புகைப்படம் வைரல் ஆனது. அந்த படத்தை எடுத்து எடிட் செய்திருப்பது போல இருந்தது.
இதனால், கூகுளில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தது தொடர்பாக தேடினோம். அப்போது இது தொடர்பான உண்மை படங்கள், வீடியோ, செய்திகள் கிடைத்தன.

இது தொடர்பாக சி.எஸ்.கே அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம். அப்போது, ஒவ்வொரு வீரர்களும் தங்கள் பெயர், தங்களுக்குப் பிடித்த வார்த்தைகளைத் தமிழில் எழுதும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது கிடைத்தது.
ரெய்னா, ப்ராவோ உள்ளிட்ட வீரர்கள் தமிழில் வாழ்த்து கூறுவது தொடர்பாக நியூஸ்18 தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த பதிவுக்கு பலரும் தவறான தகவல் என்று பதிவிட்டிருந்தனர். அதில், சிவகுமார் எஸ் என்பவர் அசல் படத்தையும் வெளியிட்டிருந்தார். அசல் மற்றும் எடிட் செய்யப்பட்டதை ஒப்பிட்டு காட்டியுள்ளோம். படம் கீழே…
ஒரிஜினல் படம்: | எடிட் செய்யப்பட்ட படம்: |

குறிப்பிட்ட கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று வெளிப்படையாக கூறும் இந்த பதிவு நகைச்சுவைக்காக, கேலி – கிண்டலுக்காக செய்யப்பட்டது என்று கருத முடியாது. பதிவை வெளியிட்ட இனியனின் பின்னணியை ஆய்வு செய்தோம். அவரைப் பற்றி எதையும் குறிப்பிடவில்லை.

ஆனால், காங்கிரஸ். தி.மு.க ஆதரவு பதிவுகள் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அதிகளவில் பகிரப்பட்டு இருந்தது.
நமக்குக் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில், வேண்டுமென்றே, தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது உறுதியாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் எடிட் செய்து மாற்றப்பட்ட தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:அதிமுக – பாஜக கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் என்று சி.எஸ்.கே வீரர்கள் சொன்னார்களா?
Fact Check By: Praveen KumarResult: False
