
தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு கடன் வாங்குவதில் முதலிடம் பிடித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் என்று ஒரு இந்திய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ்நாடு முதலிடம் கடன் வாங்கியதில் Credite goes to whom? கடன், தமிழ்நாடு, திமுக அராஜகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை ராம் பிரசாந்த் V T என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 டிசம்பர் 22ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறைவு, தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கு ஆகும் செலவை ஈடுகட்ட என தமிழ்நாடு அரசு அதிக அளவில் கடன் வாங்குகிறது. 2020ம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின்படி 2020-21 நிதியாண்டில் அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது.

அசல் பதிவைக் காண: samayam.com I Archive
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் பல மடங்கு அதிகரித்துவிட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே, கடன் அதிகம் வாங்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது ஆச்சரியம் இல்லை. ஆனால், தி.மு.க ஆட்சியில் முதலிடத்தைப் பிடித்தது போன்று பகிரப்பட்டுள்ளது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.
முதலில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் எப்போது வெளியிடப்பட்டது என்று பார்த்தோம். அதில், “Finshots” என்று இருந்தது. இதன் அடிப்படையில் தேடலைத் தொடங்கினோம். மேலும், “Which Indian states borrow the most?” என்று சமூக ஊடகங்களிலும் தேடினோம். அப்போது Finshots என்ற ட்விட்டர் பக்கத்தில் 2021 மார்ச் 25ம் தேதி இந்த பதிவு வெளியாகி இருப்பது நமக்குக் கிடைத்தது. அதாவது, தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சியில் இருந்த போது, தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான தேர்தல் பிரசாரம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் இந்த பதிவு வெளியாகி இருந்தது.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சியிலிருந்த போது வெளியான தகவலை எடுத்து, தற்போது தி.மு.க ஆட்சியில் அதிக கடன் வாங்கப்பட்டது போல, அந்த பணம் எங்கே சென்றது என்று கேள்வி எழுப்பி பகிர்ந்திருப்பது தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் என்று பகிரப்படும் பதிவு 2021 மார்ச் அ.தி.மு.க ஆட்சியின் போது வெளியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தி.மு.க ஆட்சியில் கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்ததா?
Fact Check By: Chendur PandianResult: False
