
நடிகர் கவுண்ட மணி மரணம் அடைந்தார் என்று பல ஆண்டுகளாக ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
“சற்று முன் மாரடைப்பால் மரணமடைந்தார் காமெடி நடிகர் கவுண்ட மணி. நல்ல ஒரு நடிகரை இழந்துவிட்டோம்” என்று குறிப்பிட்டு திரை உலகினர் அஞ்சலி செலுத்தும் படத்தைப் பகிர்ந்துள்ளனர்.
Sri Raja என்பவர் 2016 செப்டம்பர் 20ம் தேதி ஷேர் செய்த பதிவை, மூன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் இப்போது 2020 ஜனவரி 18ம் தேதி Baskaran Partheeban என்பவர் உள்பட நிறைய பேர் ஷேர் செய்து வருகின்றனர்.

Facebook Link | Archived Link |
அதற்கு சிலர் ஆர்.ஐ.பி பதிவிட்டிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த பதிவு உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
உண்மை அறிவோம்:
பிரபல நடிகர்கள், அரசியல் தலைவர்கள் இறந்துவிட்டதாகக் காலங் காலமாக வதந்தி பரப்புவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. அந்த வகையில் நடிகர் கவுண்ட மணி மரணமடைந்தார் என்று 10 ஆண்டுகளுக்கும் மேலாக வதந்திகள் பரவிக்கொண்டேதான் இருக்கின்றன.
சில மாதங்களுக்கு முன்பு பிரபல நகைச்சுவை கதாசிரியர், நடிகர் கிரேஸி மோகன் மறைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்த கவுண்ட மணி வந்திருந்தார்.
அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் தன்னுடைய அனுமதி இன்றி தன்னுடைய படம் மற்றும் வசனத்தைப் பயன்படுத்தியதாக சிக்ஸர் படக் குழுவுக்கு நடிகர் கவுண்ட மணி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இப்படி கவுண்ட மணி பற்றி அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அதனால், இந்த பதிவு உண்மையில்லை என்பது நமக்குத் தெரிந்தாலும், இது உண்மை என்று நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். எனவே, அது பற்றி ஆய்வு நடத்த வேண்டியது அவசியமானது.
tamil.news18.com | Archived Link |
முதலில் இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பிரபல நடிகை மஞ்சுளா விஜயகுமார் மறைந்தபோது இது எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. மஞ்சுளாவின் உடலுக்கு நடிகை ரம்யா கிருஷ்ணன் அஞ்சலி செலுத்தும் வீடியோவும் நமக்கு கிடைத்தது.

Search Link | Youtube Link |
இந்த பதிவை 2016ம் ஆண்டு வெளியிட்டிருந்ததால் அப்போது ஏதேனும் அறிவிப்பு வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போது கவுண்ட மணி தரப்பில் இருந்து அறிக்கை வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதில், “இப்படி புரளியைக் கிளப்பிவிடும் அந்த நல்ல மனிதர்கள் யார் என்று தெரியவில்லை. இதனால் அவர்களுக்கு என்ன லாபம் என்றும் தெரியவில்லை. சற்று முன்புதான் அவரை சந்தித்தேன். உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கிறேன். புதிய படம் ஒன்றின் கதையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில் நான் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளிவரும். அந்தப் படத்தின் துவக்க விழாவில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன் என்று கூறினார். எனவே, அவரது ரசிகர்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். அவர் மிகவும் நலமாக இருக்கிறார்” என்று கூறியிருந்தனர்.
cineulagam.com | Archived Link |
தற்போது கவுண்ட மணி எப்படி இருக்கிறார் என்பதை அறிய அவருக்கு நெருக்கமான ஊடக நண்பர்கள் மூலம் பேசினோம். அப்போது அவர்கள், “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்த வதந்திக்கு அப்போதே பதில் கொடுத்துவிட்டார். கவுண்ட மணி. தினமும் காலையில் வாக்கிங் செல்கிறார். உலக சினிமா பார்க்கிறார். அவருக்கென்ன நன்றாக ஹெல்த்தியாகத்தான் இருக்கிறார்” என்றனர்.
2016ல் பரவிய வதந்தியை தற்போது வரை சிலர் பரப்பிக்கொண்டே வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் நலமாக இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்களிடம் பேசி உறுதி செய்துள்ளோம். இதன் அடிப்படையில் நடிகர் கவுண்ட மணி இறந்துவிட்டார் என்று பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:நடிகர் கவுண்ட மணி மரணம்; பல ஆண்டுகளாக பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
