உ.பி-யில் சேதப்படுத்தப்பட்டு பூட்டப்பட்ட 600 கிறிஸ்தவ ஆலயங்கள்; ஃபேஸ்புக் படம் உண்மையா?

இந்தியா சமூக ஊடகம் சமூகம்

உத்தரப்பிரதேசத்தில் 600 கிறிஸ்தவ ஆலயங்கள் மூடப்பட்டதாகவும், ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கிறிஸ்தவ, சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுவதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

உடைக்கப்பட்ட தேவாலயம் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. மேலும், ஒரு நபரை போலீஸ்காரர்கள் துப்பாக்கியைக் கொண்டு தாக்கும் படம், போலீசார் காலில் விழுந்து பெண் அழும் படம், பெண் ஒருவரின் தலை அருகே துப்பாக்கியை பிடித்தபடி காவலர் நிற்கும் படத்தை பகிர்ந்துள்ளனர்.

நிலைத் தகவலில், “உத்தரப்பிரதேசத்தில் 600 கும் மேற்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் சேதமாக்கி பூட்டப்பட்டு வருகிறது, அதில் பணிபுரிந்த சகோதர சகோதரிகளை துன்புறுத்தி அடித்து பொய் வழக்குகள் போடப்பட்டு குடும்பம் குடும்பமாக கிறிஸதவர்களை சிறையில் அடைக்கின்றார்கள். ராஜஸ்தான், சத்தீஸ்கர், சிறப்பாக உத்தரபிரதேச கிறிஸ்தவ சிறுபான்மை மக்களுக்காக ஜெபியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, David Joseph என்பவர் 2020 ஜனவரி 16ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கிறிஸ்தவர்களுக்கு எதிராக, கிறிஸ்தவ ஆலயங்களுக்கு எதிராக நாடு முழுக்க தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த ஆய்வுக்கட்டுரை எழுதும் நேரத்தில் கூட பெங்களூரு அருகே ஒரு கிறிஸ்தவ தேவாலயம் தாக்கப்பட்டது. ஆனால், இந்த பதிவில் குறிப்பிட்டது போன்று நூற்றுக் கணக்கான தேவாலயங்கள் மூடப்பட்டதாக, கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல், துன்புறுத்தல் தொடர்பாக தகவலை persecutionrelief.org என்ற கிறிஸ்தவ தளம் வெளியிட்டு வருகிறது. அதன் கணக்குப் படி 2019ம் ஆண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியா முழுக்க மொத்தம் 364 துன்புறுத்தல் சம்பவங்கள் நடந்ததுள்ளது தெரிந்தது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 87 சம்பவங்களும், அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 53 சம்பவங்களும் நடைபெற்றதாகக் குறிப்பிட்டுள்ளனர். 2018ம் ஆண்டில் உ.பி-யில் மொத்தம் 129 துன்புறுத்தல் சம்பவம் நடைபெற்றதாக செய்தி கிடைத்தது.

persecutionrelief.orgArchived Link 1 
asianews.itArchived Link 2
advancingnativemissions.comArchived Link 3

துன்புறுத்தல் சம்பவம் என்று எதைக் குறிப்பிடுகிறார்கள் என்று தேடியபோது கிறிஸ்தவ அமைப்பு வெளியிட்ட ஆண்டறிக்கை ஒன்று கிடைத்தது. அதில், கைது, கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல் நடத்துவது, கிறிஸ்தவ ஆலயங்களைத் தீக்கிரையாக்குவது, பொய் பிரசாரம், கடத்தல், கொலை, கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய காயம் ஏற்படுத்துவது, மிரட்டல், கோவிலுக்குள் புகுந்து அடித்து நொறுக்குவது, வழிபாட்டைத் தடை செய்வது என்று குறிப்பிட்டிருந்தனர்.

கிறிஸ்தவ  இணையதளமே துன்புறுத்தல் சம்பவம் பற்றிய புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவோ 600க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் சேதப்படுத்தப்பட்டுப் பூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த தகவலை வெளியிட்டார்களோ தெரியவில்லை. அதற்காக உ.பி-யில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல் நடக்கவில்லை என்று கூறவில்லை. 

தனியார் நிலத்தில் உரிய அனுமதியுடன் நடந்துவந்த கிறிஸ்தவ ஆலய கட்டுமானப் பணியை புல்டோசர் வைத்து இடித்தார்கள் என்றும், ஞாயிறு ஆராதனை நடத்தபோது பிரார்த்தனை கூடத்தை தாக்கினார்கள் என்று பல செய்திகள் நமக்கு கிடைத்தன.  எனவே, நடைபெறும் தாக்குதல் சம்பவத்தை மிகைப்படுத்தி உண்மையுடன் தவறான தகவலையும் சேர்த்து கூறியுள்ளார்கள் என்பது தெரிந்தது.

சரி, இந்த பதிவில் பயன்படுத்தப்பட்ட படங்கள் உத்தரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு மேற்கொண்டோம். பல ஆண்டுகளாக இந்த புகைப்படம் சமூக ஊடகங்கள், செய்தி ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிந்தது. இந்தோனேஷியா, எத்தியோப்பியா என்று பல பதிவுகள் குழப்பத்தை ஏற்படுத்தின. 2011ம் ஆண்டு பகிரப்பட்ட மிகப் பழைய பதிவு ஒன்று எகிப்தில் நடந்த தாக்குதல் என்று கூறியது. இதன் மூலம் இந்த படம் எகிப்தில் எடுக்கப்பட்டது என்பது உறுதியானது.

religiousfreedomcoalition.orgArchived Link

இரண்டாவதாக காவலர் ஒருவர்  துப்பாக்கியைத் திருப்பி ஒருவரை அடிக்கும் படத்தை பற்றி ஆய்வு செய்தோம். அப்போது அதுவும் பல ஆண்டுகளாக காஷ்மீரில் தாக்கப்படும் இஸ்லாமியர்கள் என்று பகிரப்பட்டு வருவது தெரிந்தது. அந்த படத்துக்கும் உ.பி-யில் தாக்கப்படும் கிறிஸ்தவர்களுக்கும் தொடர்பில்லை என்பது தெரிந்தது.

maktoobmedia.comArchived Link

பெண் ஒருவர் போலீஸ் காலிஸ் காலைத் தொட்டுக் கெஞ்சும் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அந்த படத்தை Shutterstock நிறுவனம் விற்பனைக்கு வைத்திருந்ததையும், தற்போது அதை மற்றவர்கள் பார்ப்பது தடுக்கப்பட்டுள்ளதும் தெரிந்தது. இருப்பினும் அந்த படம் 2004ம் ஆண்டு எடுக்கப்பட்டதாக கூகுளில் தகவல் கிடைத்தது.

indiatoday.inShutterstock Link

கடைசியாக பெண்ணின் தலைக்கு அருகே குறிபார்த்தபடி துப்பாக்கியுடன் காவலர் நிற்கும் புகைப்படத்தை ஆய்வு செய்தோம். அதுவும் காஷ்மீரில் எடுக்கப்பட்டதாக பல பதிவுகள் நமக்கு கிடைத்தன. 

sunatimes.comArchived Link

காஷ்மீரில் எடுக்கப்பட்ட பழைய படங்களை எடுத்து, உ.பி உள்ளிட்ட வட இந்தியாவில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று செய்தி வெளியிடப்பட்டு இருந்தது தெரிந்தது.

நம்முடைய ஆய்வில்,

600 கிறிஸ்தவ ஆலயங்கள் மூடப்பட்டதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

உ.பி-யில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிக அளவில் பதிவாகியிருந்தாலும், மேற்கண்ட பதிவில் கூறிய அளவுக்கு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த பதிவில் பகிரப்பட்ட படங்கள் எல்லாம் உ.பி-யில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீர் படங்களை எடுத்து உ.பி-யில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக தாக்குதல் என்று பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் உத்தரப்பிரதேசத்தில் 600க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் சேதப்படுத்தி,  பூட்டப்பட்டு வருகிறது. அதில் பணிபுரிந்த சகோதர சகோதரிகளை துன்புறுத்தி அடித்து பொய் வழக்குகள் போடப்பட்டு குடும்பம் குடும்பமாக கிறிஸதவர்களை சிறையில் அடைக்கின்றார்கள் என்று பகிரப்பட்ட தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:உ.பி-யில் சேதப்படுத்தப்பட்டு பூட்டப்பட்ட 600 கிறிஸ்தவ ஆலயங்கள்; ஃபேஸ்புக் படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False