கிறிஸ்தவ மத பிரசாரத்தில் பங்கேற்றாரா நடிகர் விஜய்?

அரசியல் சமூக ஊடகம் தமிழகம்

நடிகர் விஜய் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் பங்கேற்றார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

வெறும் 7 விநாடி ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். அதில் இந்திய தேசியக் கொடி இருக்கிறது. நடிகர் விஜய் உடன், வெளிநாட்டைச் சேர்ந்தவர் ஒருவர் அருகில் இருக்கிறார். பின்னணியில் அமெரிக்க தூதரகங்களில் செயல்படும் அமெரிக்கன் சென்டரின் சின்னமும் உள்ளது. வீடியோவில் ஆங்கிலத்தில் “பூமித் தாயே, இதுநாள் வரை எங்களை பாதுகாத்து வருகிறாய்” என்று ஒருவர் சொல்ல அனைவரும் அதை சொல்கிறார்கள்.

இந்த பதிவை, Thiru Brahmma என்பவர் 2019 நவம்பர் 4ம் தேதி வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதாலேயே அவர் மிகப்பெரிய குற்றவாளிபோல காட்டி பல பதிவுகள் வெளியாகி வருகின்றன. பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் எடுக்கப்பட்ட பணத்தை எல்லாம் விஜய் வீட்டில் இருந்து எடுக்கப்பட்டது என்று தவறாக கூறி வருகின்றனர். நடிகர் விஜய் வீட்டில் சோதனை மற்றும் விசாரணை நடத்தியதாக குறிப்பிட்டுள்ள வருமான வரித்துறை, அவர் வீட்டில் இருந்து ரொக்கம், ஆவணங்கள் என அதையும் கைப்பற்றியதாக கூறவில்லை. இந்த நிலையில் நடிகர் விஜய் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் பங்கேற்றார் என்று சில மாதங்களுக்கு முன்பு வெளியான வீடியோ தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

நடிகர் விஜய், கிறிஸ்தவ மத பிரசாரத்தில் பங்கேற்பது மிகப்பெரிய குற்றமா என்று தெரியவில்லை. விஜய் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் பங்கேற்கலாமா, கூடாதா என்ற ஆய்வுக்குள் செல்லவில்லை. இந்த வீடியோ கிறிஸ்தவ மத பிரசாரமா என்று மட்டுமே ஆய்வு செய்தோம்.

அந்த வீடியோவில் அமெரிக்கத் தூதரக அமெரிக்க சென்டர் சின்னம் உள்ளது, மேலும் “பூமித்தாயே இதுநாள் வரை எங்களை பாதுகாத்து வந்துள்ளாய்” என்று மட்டுமே குறிப்பிடப்படுவதால் உண்மை என்ன என்று ஆய்வு நடத்தினோம்.

Search Linktamil.behindtalkies.comArchived Link

வீடியோவில் உள்ள காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, விஜய் கிறிஸ்தவ மதமாற்று நிகழ்ச்சியில் பங்கேற்றாரா என்ற ஒரு செய்தி வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. அதில், “நடிகர் விஜய் மதமாற்றம் செய்வது போன்ற வீடியோ உண்மை அல்ல. அது விஜய்யின் ஜில்லா படம் நேரத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் சிறப்பு விருந்தினராக உலக அவர்கள் அழைத்து இருந்தார்கள். அப்போ இந்த வீடியோவை ஒரு சில பேர் தவறாக பரப்பி உள்ளார்கள்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

உலக சுற்றச் சூழல் தினம், அமெரிக்க துணை தூதரகம், நடிகர் விஜய் ஆகிய கீ வார்த்தைகளை கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது 2013ம் ஆண்டு அமெரிக்க துணை தூதரகம் வெளியிட்ட வீடியோ நமக்கு கிடைத்தது. 

Archived LinkSearch Link

அந்த வீடியோ பற்றி சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் வெளியிட்ட குறிப்பில், “2013 ஜூன் 5ம் தேதி சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரக அலுவலகத்தில் நடந்த உலக சுற்றுச்சூழல் தின விழாவில் நடிகர் விஜய் பங்கேற்று மரக் கன்றை நட்டார்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

அந்த வீடியோவின் 20 விநாடியில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள காட்சிகள் வருகின்றன. அதில் “பூமித் தாயே இதுநாள் வரை எங்களை பாதுகாத்து வருகிறாய்” என்று மட்டுமே உள்ளது. முழு உறுதி மொழியும் அதில் இல்லை. இந்த வீடியோவில் இருந்து 7 விநாடி காட்சியை மட்டும் தனியாக எடுத்து விஜய் மதமாற்றப் பிரசாரம் செய்கிறார் என்று விஷமத்தனமாக வீடியோ வெளியிட்டது உறுதியாகிறது.

நம்முடைய ஆய்வில்,

சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் வெளியிட்ட வீடியோ கிடைத்துள்ளது.

அமெரிக்க துணை தூதரகம் வெளியிட்ட தகவலில் உலக சுற்றுச்சூழல் தின விழா என்று குறிப்பிட்டுள்ளனர்.

வீடியோவில் மத மாற்றம் செய்வது தொடர்பான வார்த்தைகள் இல்லை, பூமித் தாய் என்றே சொல்லப்படுகிறது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் அமெரிக்க துணை தூதரக அலுவலகத்தில் 2013ம் ஆண்டு நடந்த உலக சுற்றுச் சூழல் தின விழா காட்சிகளை எடுத்து கிறிஸ்தவ மத பிரசார நிகழ்ச்சி என்று தவறான தகவலை சேர்த்து பகிர்ந்து வந்திருப்பது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கிறிஸ்தவ மத பிரசாரத்தில் பங்கேற்றாரா நடிகர் விஜய்?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •