
‘’பிஜேபிக்கு வாக்களிக்க வேண்டாம்; நாட்டை விற்றுவிடுவார்கள்: அத்வானி உருக்கம்,’’ என்ற தலைப்பில் ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம்.
தகவலின் விவரம்:
தயவு செய்து பிஜேபிக்கு வாக்களிக்க வேண்டாம் …….
நாட்டை விற்று விடுவார்கள் .#அத்வானி_உருக்கம்…..

இதில், அத்வானியின் புகைப்படத்தை பகிர்ந்து, அவர் கூறியதாகச் சில வார்த்தைகளை எழுதியுள்ளனர். ஆனால், இதற்கான ஆதார செய்தி அல்லது வீடியோ இணைப்பு எதையும் தரவில்லை. ஏப்ரல் 16ம் தேதி இந்த பதிவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. அதற்குச் சரியாக 2 நாள் முன்பாக, இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதனை பகிர்ந்தவர்கள் பலரும் மோடி மற்றும் பாஜக எதிர்ப்பு மனநிலையில் உள்ளவர்கள் என, இந்த பதிவில் உள்ள கமெண்ட்களை பார்க்கும்போதே நன்கு புரிகிறது.
பாஜக மூத்த தலைவர் அத்வானி சமீபகாலமாக, கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார். குறிப்பாக, அத்வானியால் வளர்த்துவிடப்பட்டவரான மோடி, அவரையே மதிப்பதில்லை எனவும் கூறப்படுகிறது. இதுபற்றிய ஆதார செய்தி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
Archived Link
மோடி மட்டுமல்ல, பாஜக தலைவராக உள்ள அமித் ஷாவும் புறக்கணிப்பதாக, தகவல் கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் வகையில், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில், அத்வானிக்கு, பாஜக சார்பாக, சீட் எதுவும் தரப்படவில்லை. மேலும், அத்வானியின் விருப்ப தொகுதியான காந்தி நகரில், இந்த முறை அமித் ஷா போட்டியிடுகிறார். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
Archived Link
இத்தகைய சூழலில்தான், பாஜகவுக்கு ஓட்டுப் போட வேண்டாம் என அத்வானி உருக்கமாகக் கேட்டுக் கொண்டார் எனக் கூறி, மேலே உள்ள ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளனர். இதன் உண்மைத்தன்மை பற்றி யோசிக்காமல் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
சில நாட்கள் முன்பாக, இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்திதான் வரவேண்டும் என அத்வானி கூறியதாகக் கூறி, ஒரு ஃபேஸ்புக் பதிவு சர்ச்சையை கிளப்பியது. இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்தி, தவறு என ஏற்கனவே நாம் நிரூபித்துள்ளோம். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதுபோலவே, தற்போதைய தகவலும் தவறான ஒன்றாகவே இருக்கும் என தோன்றியது. இருந்தாலும், அத்வானி ஏதேனும் பாஜக பற்றி சமீபத்தில் கருத்து தெரிவித்தாரா என கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை. இருந்தாலும், அத்வானிக்கும், மோடி மற்றும் அமித் ஷாவிற்கும் இடையே நிலவும் அதிருப்தி தொடர்பாகவும், அத்வானி தொண்டர்களுக்கு எதோ வேண்டுகோள் விடுத்தார் எனவும் கூறி, பல்வேறு செய்தி இணைப்புகள் கிடைத்தன. அவற்றை கிளிக் செய்து பார்த்தோம்.

எனினும், அத்வானி உருக்கமான கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்பட்ட செய்தி வீடியோவை பார்த்தோம். அதில், பாஜக தொடங்கப்பட்டு, 39 ஆண்டுகள் ஆவதையொட்டி, தொண்டர்களை பாராட்டும் வாழ்த்துச் செய்தியை அத்வானி வெளியிட்டதாகக் கூறப்பட்டிருந்தது. மற்றபடி அத்வானி வேறு ஏதேனும் அதிருப்தி தெரிவித்தாரா என்ற தகவல் எதுவும் இடம்பெறவில்லை. அந்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
இதன்பேரில், அத்வானி ஏதேனும் வாழ்த்துச் செய்தி வெளியிட்டாரா என மீண்டும் தேடிப் பார்த்தோம். அப்போது, தனது சொந்த பிளாக்கில் அத்வானி இதுதொடர்பாக, விளக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டதைக் காண நேர்ந்தது. அதில், பாஜக.,வினர் நாட்டின் நலனுக்கே முதலிடம் தரவேண்டும் எனவும், கட்சி நலன் மற்றும் சுயநலனுக்கு 2 மற்றும் கடைசி இடமே தர வேண்டும் எனவும் அத்வானி கேட்டுக் கொண்டுள்ளார். அந்த விரிவான கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இந்த கடிதத்தில், எந்த இடத்திலும் அத்வானி பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறவே இல்லை. அத்வானி, மோடி மற்றும் அமித் ஷா இடையே நிலவும் கருத்து வேறுபாடை காரணமாக வைத்து, சுய அரசியல் லாபத்திற்காக, இப்படியான பதிவை சித்தரித்து வெளியிட்டுள்ளனர் என இதன்மூலம் தெளிவாக தெரியவருகிறது.
இறுதியாக, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்ட Saravanaperumal Perumal என்ற நபரின் பின்னணிய ஆராய தீர்மானித்தோம். அவரது ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டபோது, புரொஃபைல் மற்றும் கவர் புகைப்படமாக, திமுக.,வின் தேர்தல் சின்னமான உதயசூரியன் வைக்கப்பட்டுள்ளதாக, தெரியவந்தது. அவர் வெளியிடும் பதிவுகள் அனைத்தும், பாஜக எதிர்ப்பு மனநிலையிலேயே இருப்பதும் தெளிவானது. எனவே, அவர் கூறிய தகவல் தவறு என உறுதியாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது. நம் வாசகர்கள் யாரும் இதுபோன்ற தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால் உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:பிஜேபிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அத்வானி சொன்னாரா?
Fact Check By: Parthiban SResult: False
