FACT CHECK: மறைந்த ரகோத்தமன் சி.பி.ஐ இயக்குநராக பணியாற்றினாரா?

சமூக ஊடகம் சமூகம் தமிழ்நாடு

மறைந்த சி.பி.ஐ அதிகாரி ரகோத்தமனை பல ஊடகங்களும் முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் என்று குறிப்பிட்டு வருகின்றன. அவர் சி.பி.ஐ இயக்குநராக பணியாற்றினாரா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

Dinamalar – World’s No 1 Tamil News Website ஃபேஸ்புக் பக்கத்தில் ஓய்வு பெற்ற சி.பி.ஐ அதிகாரி ரகோத்தமன் மறைவு பற்றிய செய்தி வெளியாகி இருந்தது. அதில், “சிபிஐ முன்னாள் இயக்குநர் ரகோத்தமன் (வயது 72) கொரோனா தொற்றால் சென்னையில் காலமானார்” என்று இருந்தது. நிலைத் தகவலிலும் அதே தகவல் இருந்தது. இந்த பதிவு 2021 மே 12ம் தேதி வெளியாகி இருந்தது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

அதே போல், சன் நியூஸ் நியூஸ் கார்டு ஒன்றும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை திருமங்கலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிபிஐ முன்னாள் இயக்குநர் ரகோத்தமன் (72) மரணம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை Kathiravan தங்க.கதிரவன் என்பவர் 2021 மே 12ம் தேதி வெளியிட்டிருந்தார். பலரும் இந்த நியூஸ் கார்டை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சி.பி.ஐ அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ரகோத்தமன். இவர் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த குழுவில் இடம் பெற்றிருந்தவர். கொரோனா தொற்று காரணமாக அவர் மே 12, 2021 அன்று உயிரிழந்தார். இந்த சூழலில் அவர் சி.பி.ஐ முன்னாள் இயக்குநர் என்று முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது ஆச்சரியத்தை அளித்தது. அவர் சி.பி.ஐ-ன் இயக்குநராக பணியாற்றினாரா என்று ஆய்வு செய்தோம்.

சன் நியூஸ் தொலைக்காட்சியில் வெளியான நியூஸ் கார்டு உண்மையா என்று பார்த்தோம். அதில் சி.பி.ஐ முன்னாள் அதிகாரி என்று இருந்தது. அதன் எடிட் செய்யப்பட்ட தகவலைப் பார்த்தோம். அப்போது, முதலில் சி.பி.ஐ முன்னாள் இயக்குநர் என்று தவறான தகவலை வெளியிட்டுவிட்டு பிறகு “சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன் மரணம்!” என்று மாற்றியிருப்பது தெரிந்தது. இது தெரியாமல் பழைய நியூஸ் கார்டை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ஆங்கிலத்தில் வெளியான பல செய்திகளில் அவர் சி.பி.ஐ-யில் போலீஸ் சூப்பிரெண்டு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்று குறிப்பிட்டிருந்தனர். இவர் சி.பி.ஐ-ல் 1968ம் ஆண்டு இணைந்தார் என்றும் 2006ம் ஆண்டு ஓய்வு பெற்றார் என்றும் குறிப்பிட்டிருந்தன.

அசல் பதிவைக் காண: timesofindia I Archive

அவர் ஓய்வு பெற்ற 2006ம் ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டுகளில் யார் சி.பி.ஐ இயக்குநர்களாக இருந்தார்கள் என்று சி.பி.ஐ இணையதளத்தில் பார்வையிட்டோம். 2005-08 வரை விஜய் சங்கர் என்பர் சி.பி.ஐ இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்த பட்டியலில் ரகோத்தமன் பெயர் இல்லை. இதன் மூலம் இவர் சி.பி.ஐ இயக்குநராக பணியாற்றியதாகப் பரவும் தகவல் தவறானது என்று உறுதியானது.

அசல் பதிவைக் காண: cbi.gov.in I Archive

தினமலர் ஃபேஸ்புக் பக்கத்தில் ரகோத்தமனை சி.பி.ஐ முன்னாள் இயக்குநர் என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால் இணையதளத்தில் சி.பி.ஐ முன்னாள் அதிகாரி என்று சரியாக குறிப்பிட்டிருந்தனர். இணையதளத்தில் தவறை திருத்தியவர்கள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் திருத்தாமல் விட்டதால் பலரும் தவறான தகவலை பகிர்ந்து வருகின்றனர்.

அசல் பதிவைக் காண: dinamalar.com I Archive

சி.பி.ஐ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதுவரை சி.பி.ஐ இயக்குநர்களாக இருந்தவர்கள் பட்டியலில் ரகோத்தமன் பெயர் இல்லை. அவர் சி.பி.ஐ-யில் எஸ்.பி-யாக பணியாற்றி ஓய்வு பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில், மறைந்த ரகோத்தமன் சி.பி.ஐ இயக்குநராக பணியாற்றியதாக கூறப்படும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

முடிவு:

மறைந்த சி.பி.ஐ அதிகாரி ரகோத்தமன் சி.பி.ஐ இயக்குநராக பதவி வகிக்கவில்லை என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:மறைந்த ரகோத்தமன் சி.பி.ஐ இயக்குநராக பணியாற்றினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False