பீகார் மக்களுக்கு சாலை நடுவே குடிசை கட்டி தந்த மோடி- வதந்தியை நம்பாதீர்!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’பீகார் மக்களுக்கு சாலை நடுவே குடிசை கட்டி தந்த மோடி,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

ஆகஸ்ட் 6, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், சாலை நடுவே குடிசைகள் அமைத்து வாழும் மக்களின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் கீழே, ‘’பீகாரில் மதுபானி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை 57ல் நடுவில் வீடு கட்டி கொடுத்த நம் பாரத பிரதமரை பாராட்ட வார்த்தைகளே இல்லை. Digital india ஹே,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
கடந்த 2014ம் ஆண்டில் இந்திய பிரதமராக மோடி பதவியேற்ற நாள் முதலாகவே, அவரை மையப்படுத்தி வித விதமான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில், பெரும்பாலான தகவல்கள், ‘மோடி எதிர்ப்பு’ என்ற உணர்ச்சியின் அடிப்படையில் கண்மூடித்தனமாக பகிரப்படும் வதந்திகளாகவே உள்ளன. இவற்றை பற்றி அவ்வப்போது நாமும் ஆய்வு செய்து, செய்தி வெளியிட்டு வருகிறோம். 

அதுபோலவே, மேலே இடம்பெற்றுள்ள புகைப்படம் பற்றிய தகவலும் தவறாகும். இதற்கும், மோடிக்கும் எந்த தொடர்பும் இல்லை. வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்தில் அவரது பெயரை சேர்த்து, இதில் பகிர்ந்துள்ளனர். 

ஆம். கடந்த 2019ம் ஆண்டில் பீகார் மாநிலத்தில் ஓடும் கம்லா ஆற்றில் (Kamla river) கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள ஜான்ஜஹார்பூர்- முசாஃபர்பூர் பகுதியில் குடியிருப்பின் உள்ளே வெள்ளநீர் புகுந்து, வீடுகளை அடித்துச் சென்றது. இதனால், வீடுகளை இழந்து வாடிய மக்கள், அருகில் உள்ள மேட்டுப்பாங்கான இடத்தில் தஞ்சமடைந்தனர். அதில் ஒன்றுதான் மேலே இடம்பெற்றுள்ள புகைப்படத்தில் நாம் பார்க்கும் காட்சி. 

DNAIndia LinkHindustanTimes Link 

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், தேசிய நெடுஞ்சாலை என்றும் பாராமல், அதன் நடுவே குடிசை அமைத்து வாழ தொடங்கினர். இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய ஒன்றாகும். 

இதுபற்றி ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தன்னிச்சையாக இவ்வாறு குடிசை அமைத்து தங்கியுள்ளனர். இதனை பீகார் அரசோ அல்லது மத்திய அரசோ செய்துதரவில்லை. நெடுஞ்சாலையின் இருபுறமும் வெள்ளநீர் சூழ்ந்திருப்பதை கீழே உள்ள செய்தியில் தெளிவாகக் காண முடிகிறது. 

Bhaskar News LinkArchived Link 

இது ஆண்டுதோறும், ஜூன், ஜூலை, செப்டம்பர் மாதங்களின்போது அப்பகுதியில் வழக்கமாக நடைபெறும் விசயமாக உள்ளது. இம்மக்களுக்கு சம்பந்தப்பட்ட உரிய வசிப்பிடம் ஏற்படுத்தித் தருவது அம்மாநில அரசின் கடமையாகும். தற்சமயம், பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (பாஜக – ஐக்கிய ஜனதா தளம்) ஆட்சியில் உள்ளது.

எனினும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எந்த ‘நேரடி’ தொடர்பும் இல்லை. மக்கள் தன்னிச்சையாக வெள்ளப் பெருக்கை சமாளிக்க, சாலையின் நடுவே குடிசை போட்டுள்ளனர்; இதனை மோடியோ அல்லது டிஜிட்டல் இந்தியா திட்டமோ கட்டித் தரவில்லை.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:பீகார் மக்களுக்கு சாலை நடுவே குடிசை கட்டி தந்த மோடி- வதந்தியை நம்பாதீர்!

Fact Check By: Pankaj Iyer 

Result: False