
‘’ராகுல்காந்தி பிரதமராக வர வேண்டும்,’’ என்று பா.ஜ.க மூத்த தலைவர்களுள் ஒருவரான எல்.கே.அத்வானி தெரிவித்ததாகச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு:
தகவலின் விவரம்:
ராகுல் காந்திதான் இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி…
உண்மை அறிவோம்:
பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், அவர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என தன்னுடைய விருப்பத்தை எல்.ஏ.அத்வானி வெளிப்படுத்தியுள்ளார், என்ற தகவல் வைரலாகி வருகிறது.
புதிய தலைமுறை லோகோவுடன் இந்த படம் இருப்பதால், புதிய தலைமுறை வெளியிட்ட செய்தி என்று நம்பி பலரும் ஷேர் செய்துள்ளனர். இதுதவிர, மோடி, பா.ஜ.க எதிர்ப்பாளர்களால் இந்த படம் வைரல் ஆக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க நிறுவனத் தலைவர்களில் முக்கியமானவர் எல்.கே.அத்வானி. ரத யாத்திரை, பாபர் மசூதி இடிப்பு என்று பல சர்ச்சைகள் இருந்தாலும் பா.ஜ.க-வை இந்தியா முழுக்க பிரபலப்படுத்திய பெருமை இவரையே சேரும். வாஜ்பாய் இந்திய பிரதமராக இருந்தபோது, அத்வானி துணைப் பிரதமராக இருந்தார். 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது, பா.ஜ.க பிரதமர் வேட்பாளராக அத்வானி அறிவிக்கப்பட்டார்.
இருப்பினும், அந்த தேர்தலில் பா.ஜ.க-வால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி முன்னிலைப்படுத்தப்பட்டார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் மோடி வெற்றிபெற்றதும், 75 வயதை கடந்த மூத்த தலைவர்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட மூத்த தலைவர்களின் முக்கியத்துவம் குறைந்துகொண்டே சென்றது.
இது தவிர, தனிப்பட்ட முறையில் அத்வானியை, பிரதமர் மோடி மதிப்பதில்லை என அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த ஆண்டு நடந்த திரிபுரா புதிய முதல்வர் பதவியேற்பு விழாவின்போது, மேடையில் இருந்த அத்வானி, பிரதமர் மோடிக்கு வணக்கம் தெரிவித்தார். ஆனால், அத்வானிக்கு வணக்கம் செலுத்துவதற்கு பதில், அவருக்கு அருகில் இருந்த திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்காருக்கு வணக்கம் செலுத்தி பேசினார் மோடி. அவர்கள் பேசி முடிக்கும் வரை கைகூப்பிய நிலையிலேயே அத்வானி நின்றிருந்தார். இது அப்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்நிலையில், தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் அத்வானிக்கு சீட் வழங்கப்படவில்லை. அவர் தொடர்ந்து போட்டியிட்டு வந்த காந்தி நகர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க தலைவர் அமித்ஷா, இந்த முறை போட்டியிடுகிறார். இதனால், அத்வானி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இத்தகைய சூழலில்தான் ராகுல் காந்தி பிரதமர் ஆக வர வேண்டும் என்று அத்வானி தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்ததாக, இந்த பதிவு வெளியாகி இருக்கிறது. இதுதொடர்பாக கூகுளில் தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.

புதியதலைமுறை பிரேக்கிங் கார்டில் இந்த தகவல் உள்ளதால், இதுதொடர்பாக, புதிய தலைமுறையில் செய்தி, போட்டோ கார்டு ஏதேனும் வந்துள்ளதா என்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தேடினோம்.

கடந்த ஏப்ரல் 4ம் தேதிதான் அத்வானி, தன்னுடைய பிளாக்கில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். பா.ஜ.க தொடங்கி 39 ஆண்டுகள் ஆவதையொட்டி வாழ்த்துச் செய்தியாக அது இருந்தது. அதில், தன்னை இத்தனை ஆண்டுகாலம் வாக்களித்து வெற்றிபெறச் செய்திருந்த காந்தி நகர் மக்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
மேலும், பா.ஜ.க-வை எதிர்ப்பவர்கள் எல்லோருமே தேச விரோதிகள் போலச் சித்தரிக்கப்படும் சூழலுக்கு எதிராக தன்னுடைய கருத்துக்களையும் பதிவு செய்திருந்தார். இதுபற்றிய செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
அத்வானி தன்னுடைய பிளாக் பக்கத்தில் எழுதியதை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
அத்வானியின் இந்த பதிவு தேசிய அளவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அத்வானிக்கு உடனடியாக நன்றி தெரிவித்து பதில் அளித்தார் பிரதமர் மோடி. அத்வானிக்கு அவமரியாதை நடந்துவிட்டதாக, காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. இதுபற்றிய செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதைத் தொடர்ந்து அத்வானியை சமாதானம் செய்ய பா.ஜ.க தலைவர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் அவரை நேரில் சந்தித்துள்ளனர். இதுதொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
அத்வானியின் பிளாக் பதிவு, அதைத் தொடர்ந்து எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்தே ராகுல் காந்தி பிரதமர் ஆக அத்வானி ஆதரவு என்று போலியாக போட்டோ கார்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டோ கார்டை வெளியிட்ட Unofficial:பிஜேபி தொண்டர்கள் பின்னணியை ஆய்வு செய்தோம். நக்கல், நையாண்டி பதிவுகளை வெளியிடும் பக்கமாக இது இருந்தது. அதிலும் பெரும்பாலும் பா.ஜ.க-வை கேலி, கிண்டல் செய்யும் வகையிலேயே பதிவுகள் இருந்தன.
இதுவரை நமக்குக் கிடைத்த ஆதாரங்களின்படி இந்த தகவல் பொய்யானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்று அத்வானி கூறியதாக, வெளியாகியுள்ள பதிவு பொய்யானது, என நிரூபிக்கப்படுகிறது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ என எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
