அமேதி நாடாளுமன்ற தொகுதிக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தொண்டர்கள் கண்ணீர் மல்க வரவேற்றதாக, ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அமெதி சென்ற ராகுலுக்கு தொண்டர்களின் கண்ணீர் மல்க வரவேற்பு.!!!??

Archived link

வீடியோ ஒன்றில் ராகுல் காந்தியை மக்கள் சூழ்ந்து நிற்கின்றனர். பின்னணியில் சோக இந்தி பாடல் ஒன்று ஒலிக்கிறது. கதறி அழும் அவர்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல் கூறுகிறார். இந்த வீடியோவை மே 28ம் தேதி பகிர்ந்துள்ள Vijhai Shekar என்பவர், “அமேதி சென்ற ராகுல் காந்தியை கண்ணீர் மல்க வரவேற்ற தொண்டர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். எப்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று எந்த தகவலும் இல்லை.

உண்மை அறிவோம்:

நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேசத்தில் அமேதி தொகுதியிலும் கேரளாவில் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். இதில், தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற தொகுதியான அமேதியில் ராகுல் காந்தி தோல்வியைத் தழுவினார். எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத அளவுக்கு காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவியது.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், கட்சித் தலைவர் பதிவியில் இருந்து விலகப்போவதாக ராகுல் கூறியதாக செய்திகள் கூறுகின்றன. டெல்லியில் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த சூழ்நிலையில், “ராகுல் காந்தி அமேதி சென்றார். அவரை கண்ணீர் மல்க வரவேற்ற தொண்டர்கள்” என்று வீடியோ வெளியாகி உள்ளது. ஆனால், வீடியோ மற்றும் நிலைத் தகவலில் எப்போது சென்றார் என்று குறிப்பிடவில்லை. தேர்தல் தோல்விக்குப் பிறகு பதிவு வெளியாகி இருப்பதாலும் கண்ணீர் மல்க வரவேற்ற தொண்டர்கள் என்று குறிப்பிட்டதாலும் மே 23ம் தேதிக்கு பிறகே அவர் சென்றிருப்பதாக மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டி உள்ளது.

தேர்தல் முடிவுக்குப் பிறகு அமேதி சென்றதாக எந்த ஒரு செய்தியும் வெளியாக வில்லை. இந்த சூழ்நிலையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

தேர்தல் தோல்விக்குப் பிறகு ராகுல் காந்தி அமேதிக்கு சென்றாரா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பயண திட்டம் அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் இணையதளத்தில் வெளியாகும். அதில் அமேதி பயணம் பற்றி தகவல் உள்ளதா என்று தேடினோம். கடைசியாக ஏப்ரல் 17ம் தேதி இமாச்சல பிரதேசம் சென்றுவந்துள்ளார் ராகுல் காந்தி. அதன் பிறகு எந்த ஒரு பயணத்தையும் அவர் மேற்கொள்ளவில்லை என்பது உறுதியானது.

Archived link

ராகுல்காந்தியின் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று கண்டுபிடிக்க தேடல் முயற்சியில் இறங்கினோம். வீடியோ மிகவும் அலசலாக இருந்தது. அதில் இருந்து ஒரே ஒரு ஃபிரேமை எடுத்து தேடினோம். ஆனால், படத்தின் தெளிவின்மை காரணமாக தேட முடியவில்லை என்று தகவல் வந்தது.

இதற்கிடையே, ராகுல் காந்தியின் வீடியோ தொடர்பான தகவல் ஒன்று நம்முடைய மராத்தி ஃபேக்ட் கிரஸண்டோவில் (marathi.factcrescendo.com) வெளியாகி இருந்தது. அதில், 2017 நவம்பரில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள என்.டி.பி.சி ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி இறந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல சென்ற ராகுல் காந்தி என்று குறிப்பிட்டு இருந்தனர். மேலும், ராகுல் காந்தி தன்னுடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோவையும் அளித்திருந்தனர். அந்த வீடியோ...

Archived link

என்.டி.பி.சி அனல் மின்நிலையம் அமைந்த பகுதி, அமேதி தொகுதிக்கு உட்பட்டதா என்று தேடினோம். ஆனால், அது ராகுல் காந்தியின் தாயார் சோனியா காந்தி வெற்றிபெற்ற தொகுதியான ரேபரேலி தொகுதிக்குட்பட்ட பகுதி என்பது தெரியவந்தது.

நாம் மேற்கொண்ட ஆய்வில், தேர்தலுக்குப் பிறகு ராகுல் காந்தி அமேதி சென்றதாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

காங்கிரஸ் நிகழ்ச்சி நிரல் அட்டவணையில் ராகுல் காந்தியின் அமேதி பயணம் பற்றிய தகவல் இல்லை.

2017ல் நவம்பரில் நடந்த உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள என்.டி.பி.சி தீவிபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் கூறும் வீடியோவை எடுத்து, அமேதி தொகுதியில் கண்ணீர் மல்க வரவேற்ற மக்கள் என்று பதிவிட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, அமேதி சென்ற ராகுல் காந்தியை கண்ணீர் மல்க வரவேற்ற மக்கள் என்ற வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ராகுல் காந்தியை கண்ணீர் மல்க வரவேற்ற அமேதி வாக்காளர்கள்- வீடியோ உண்மையா?

Fact Check By: Praveen Kumar

Result: False