அதிமுக அரசின் பொங்கல் பரிசை திமுகவினர் வாங்கக்கூடாது: ஸ்டாலின் பெயரில் வதந்தி

அரசியல் தமிழகம்

‘’அதிமுக அரசின் பொங்கல் பரிசை திமுகவினர் வாங்கக்கூடாது,’’ என்று மு.க.ஸ்டாலின் சொன்னதாக, சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

அமாவாச – Naga Raja Chozhan MA

எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை பகிர்ந்துள்ளது. இதில், பாலிமர் தொலைக்காட்சி லோகாவுடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன் மேலே, ‘’மானமுள்ள திமுகவினர் அதிமுக அரசின் பொங்கல் பரிசான 1000 ரூபாயை வாங்கவே கூடாது… மு.க.ஸ்டாலின் அறிக்கை,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, மு.க.ஸ்டாலின் பேசியிருக்க வாய்ப்பில்லை. எப்படி எனக் கேட்கிறீர்களா, திமுக, அதிமுக என அனைத்து கட்சியினருக்கும் பொதுவானதுதான் அரசு நிர்வாகம். எதிர்க்கட்சி ஆட்சியில் இருந்தாலும், அரசு நிர்வாகம் தரும் சலுகைகளை அனைத்து தரப்பு மக்களும் ஏற்பதே ஜனநாயக நடைமுறை. திமுகவும் அப்படித்தான் செயல்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நிவாரண நிதி அறிவித்தார். அதனை திமுக உள்பட எதிர்க்கட்சியினர் யாருமே நிராகரிக்கவில்லை.

அரசின் சலுகைகளில் அதிருப்தி இருந்தால் மட்டுமே அதனை புறக்கணிப்பதாக அறிவிப்பார்கள். மற்றபடி, பொங்கல் பரிசு என்பது அதிமுக, திமுக என எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் மக்களுக்கு தரும் வழக்கமான சலுகையாகவே சமீபகாலமாக தொடர்கிறது. கடந்த 2019 ஜனவரியில் தரப்பட்ட பொங்கல் பரிசுத் தொகையில் முறைகேடு நடந்துள்ளதாக திமுகவினர் கேள்வி கேட்டதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஆனால், அப்போது கூட யாரும் பொங்கல் பரிசை நிராகரிக்கும்படி கட்சித் தொண்டர்களை கோரவில்லை.

Maalaimalar News Link

அதேசமயம், ‘மானமுள்ள திமுகவினர், மானமில்லாத திமுகவினர்,’ என பாகுபாடு பார்த்து மு.க.ஸ்டாலின் பேசியது இல்லை. இன்னும் சொல்லப் போனால் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதலில் தொடங்கி வைத்ததே திமுக ஆட்சிதான். கடந்த 2006-11 காலகட்டத்தில் திமுக அரசு பொங்கல் பண்டிகையின்போது, தமிழக மக்களுக்கு, பச்சரிசி, வெல்லம், பாசிப்பயிறு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் அடங்கிய இலவச பை வழங்கியது.

எனினும், 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் 2 ஆண்டுகளுக்கு நிறுத்தப்பட்டு, பிறகு 2013ம் ஆண்டில் மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது, பொங்கல் பரிசுப் பையுடன் ரூ.100 ரொக்கம் தருவதாகவும் அதிமுக அரசு அறிவித்தது. அது தற்போது ரூ.1000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவ்வளவுதான் வித்தியாசம். 

Dinakaran News Link

உண்மை இப்படியிருக்க, பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை திமுக.,வினர் நிராகரிக்க வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாகக் கூறி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பகிரப்படுவது பலரையும் குழப்புவதாக உள்ளது. இதன்பேரில், Polimer News அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் தேடினோம்.

நீண்ட நேரம் தேடியதில், கடந்த 48 மணிநேரத்தில் மு.க.ஸ்டாலின் இப்படி எதுவும் பேசவில்லை என உறுதியானது. அவர் பற்றி கடந்த 2 நாட்களில் பாலிமர் டிவி வெளியிட்ட செய்திகள் சிலவற்றின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

Polimer News FB link 1Polimer News FB Link 2Polimer News FB Link 3

இதற்கு அடுத்தப்படியாக, மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் சென்று இப்படி ஏதேனும் செய்தி வெளியானதா என விவரம் தேடினோம். கடைசியாக நவம்பர் 27ம் தேதி மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதுதவிர்த்து, நவம்பர் 28ம் தேதி அவர் மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுவிட்டார். அதன்பிறகு, நவம்பர் 29 காலைதான் சென்னை திரும்பியுள்ளார் என தெரியவருகிறது. 

எனவே, கடந்த 48 மணிநேரத்தில் தமிழகத்தில் இல்லாத மு.க.ஸ்டாலின் பற்றி தேவையற்ற வதந்தியை சித்தரித்து, உண்மையான செய்தி போல தகவல் பகிர்ந்துள்ளனர். 

Fotoforensics Link

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறாகச் சித்தரிக்கப்பட்ட ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:அதிமுக அரசின் பொங்கல் பரிசை திமுகவினர் வாங்கக்கூடாது: ஸ்டாலின் பெயரில் வதந்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •