மிக அரிதான மரபியல் குறைபாட்டுடன் பிறந்த குழந்தை பற்றி சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி!

சமூக ஊடகம் மருத்துவம் I Medical

அஸ்ஸாமில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் உயிரிழந்ததாகவும் தாயின் குடலை கர்ப்பப்பையில் இருந்த சிசு சாப்பிட்டதால்தான் தாய் உயிரிழந்தார் என்று பரிதாபமான பச்சிளம் குழந்தை படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

BABY 2.png
Facebook LinkArchived Link 1Archived Link 2

15 விநாடிகள் மட்டும் ஓடக்கூடிய வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், மிகவும் பயங்கரமான தோற்றத்தில் பச்சிளம் குழந்தை போல ஒன்று அழுகிறது. 

நிலைத் தகவலில், “கலிகால பிரசவம் அஸ்ஸாமில் ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு டாக்டர்கள் வயிற்றில் ஆப்ரேஷன் செய்து குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர் வயிற்றில் அக்குழந்தை தன் தாயின் குடல் முழுவதும் தின்றதால் தாய் உயிரிழப்பு.

அக்குழந்தையை வெளியே எடுத்த நர்ஸ் 3 மணி நேரத்தில் உயிரிழப்பு அக்குழந்தை அகன்ற வாயுடன் கோரை பற்களுடன் பிறந்துள்ளது பிறக்கும் போது 8 கிலோ எடையில் இருந்தது 24 மணி நேரத்தில் அக்குழந்தையின் எடை 13 கிலோவாக அதிகரிக்க மருத்துவர்கள் 17விஷ ஊசி போட்டு குழந்தையை கொன்றனர் இது உண்மையில் நடந்த சம்பவம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Amal Nath என்பவர் 2019 நவம்பர் 25ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். வாட்ஸ்ஆப்பிலும் இந்த வீடியோ மற்றும் தகவல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

உண்மை அறிவோம்:

ஃபேஸ்புக் பதிவில் அஸ்ஸாம் என்று மாநிலத்தைக் குறிப்பிட்டுள்ளனர், எந்த இடம், எப்போது இது நிகழ்ந்தது என்று எந்த ஒரு தகவலும் இல்லை. ஆடுகள் மனித உருவில் குட்டியை ஈன்றதாக அவ்வப்போது செய்திகள் வரும். அதேபோல், ஏதாவது ஒரு கால்நடைக்கு பிறந்த கன்றை இப்படி குறிப்பிட்டுள்ளார்களா என்ற சந்தேகம் எழுந்தது. மருத்துவமனையில் சிசேரியன் மூலம் எடுக்கப்பட்ட குழந்தை என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், பொது வெளியில் குழந்தை கிடக்கிறது. கோரைப் பல்லுடன் குழந்தை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், உற்றுப் பார்த்தால் குழந்தைக்கு பல் இல்லை. இவை எல்லாம் இந்த வீடியோ மற்றும் பதிவு மீதான சந்தேகத்தை அதிகரிக்கச் செய்தது.

வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி அதை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது மிகவும் அரிதான மரபியல் குறைபாட்டால் தடிமனான தோலுடன் பிறக்கும் குழந்தைகள் என்று ஒரு கட்டுரை நமக்கு கிடைத்தது. அந்த கட்டுரையில் உள்ள குழந்தையும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் வீடியோவில் உள்ள குழந்தையும் பார்க்க ஒரே மாதிரியாக இருந்தது.

BABY 3.png
Search Link

தொடர்ந்து தேடியபோது, 2019ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி யூடியூபில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் வீடியோ பதிவிடப்பட்டு இருந்தது கிடைத்தது. அதில், இந்தியில் எழுதப்பட்டு இருந்தது. அதை கூகுள் டிரான்ஸ்லேட்டரில் போட்டு மொழிபெயர்த்துப் பார்த்தோம். சசாராம் மருத்துவமனையில் பிறந்த வித்தியாசமான குழந்தை என்று குறிப்பிட்டு இருந்தனர். வேறு எந்த தகவலும் அந்த யூடியூப் பதிவிலிருந்து கிடைக்கவில்லை.

Archived Link 1Youtube LinkArchived Link 2

மற்றொரு வீடியோவில் மனித மற்றும் விலங்கு பெற்றோருக்கு பிறந்த குழந்தை என்று பதிவிட்டிருந்தனர். இந்த வீடியோ 2019 ஜூலை 21ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. அதில், வேறு எந்த தகவலும் இல்லை.

சசாராம் மருத்துவமனை மற்றும் மிக அரிதான சரும பிரச்னையுடன் பிறக்கும் குழந்தைகள் என்பதன் ஆங்கில வார்த்தையை கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது உத்தரப்பிரதேசத்தில் இந்த குறைபாட்டுடன் கூடிய குழந்தை பிறந்து இறந்தது என்ற செய்தி நமக்கு கிடைத்தது. மேலும், மருத்துவர் ஒருவர் குழந்தையை தூக்கி வைத்திருக்கும் படமும் கிடைத்தது. 

BABY 4.png
Search LinkIndia TodayArchived Link

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள குழந்தை எங்கே பிறந்தது என்பதை கண்டறிய முடியவில்லை. ஆனால், குழந்தை பேய்க் குழந்தை இல்லை, பிறவி மரபியல் குறைபாடு காரணமாக அந்த குழந்தை அவ்வாறு பிறந்துள்ளது என்பது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது.

குழந்தைக்கு ஏற்பட்ட Harlequin-type ichthyosis பாதிப்பு பற்றி தேடினோம். இது மிகவும் அரிதான பிறவி மரபியல் குறைபாடு. குழந்தை கருத்தரிக்கும்போது மரபணுவில் ஏற்படும் மாற்றம் காரணமாக இந்த பாதிப்பு வரும். இந்த குழந்தைகளுக்கு சருமம் மிகவும் தடிமனாக பிளவுடன் இருக்கும், கண் இமை, மூக்கு, வாய், காது உள்ளிட்ட உறுப்புகளின் வடிவமே மாறியிருக்கும். கை, கால்களை அதிகம் அசைக்க முடியாது. குறை பிரசவம், ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கை குறைந்துவிடுவது, நோய்த் தொற்று, உடலின் வெப்பநிலை மாறுபாடு உள்ளிட்ட காரணங்களால் இந்த குழந்தைகளால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியாது. இந்த குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளுக்கு போதிய சிகிச்சை அளித்தால், அவர்களும் நம்மைப்போல இயல்பான மனிதர்களாக வாழலாம். அப்படி பிறந்த பலரும் இயல்பாக வாழ்ந்து வருகின்றனர்;. 1992ம் ஆண்டு ஹாங்காங்கில் இப்படி பிறந்த குழந்தை தற்போது ரக்பி விளையாட்டின் ரெஃப்ரியாக உள்ளார்.

இந்தியாவில் 2016ம் ஆண்டு நாக்பூரில் இப்படி ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த இரண்டே நாளில் அந்த குழந்தை இறந்துவிட்டது. அதன் பிறகு 2017ம் ஆண்டு பாட்னாவில் பிறந்தது. அதன் பிறகு டெல்லியில் 20 வயது பெண்ணுக்கு இப்படி குழந்தை பிறந்தது. மூச்சுத்திணறல் பிரச்னை காரணமாக அந்த குழந்தை இறந்தது. இப்படி இதுவரை மூன்றே மூன்று சம்பவங்கள்தான் இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்த குழந்தை அதில் எந்த இடத்தைச் சார்ந்தது என்று தெரியவில்லை. ஆனால், இதுபோன்ற பிறவி மரபணு குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளை எல்லாம் சாத்தானின் குழந்தைகள் என்று சமூக ஊடகங்களில் குறிப்பிட்டு வைரலாக்கப்பட்டதும் தெரிந்தது.

இப்படி Harlequin-type ichthyosis பாதிப்புடன் பிறந்த குழந்தை தாயின் குடலை தின்றுவிட்டது என்றோ, குழந்தையை தூக்கிய செவிலியர் சில மணி நேரங்களில் இறந்துவிட்டார் என்றோ, விஷ ஊசி போட்டு குழந்தை கொல்லப்பட்டது என்றோ எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடியபோது, மேற்கொண்ட வீடியோவை அடிப்படையாகக் கொண்டு உண்மை கண்டறியும் ஆய்வுகள் நடத்தப்பட்டது தெரியவந்தது. அதிலும் கூட, இந்த சம்பவம் எங்கு நடந்தது என்று குறிப்பிடவில்லை. குழந்தைக்கு உள்ள நோய் தன்மையைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டிருந்தனர். 

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், Harlequin-type ichthyosis என்ற மரபியல் பிறவி குறைபாடு காரணமாக பிறந்த குழந்தை வீடியோவை பகிர்ந்து, 17 விஷ ஊசி போட்டு கொல்லப்பட்ட குழந்தை என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மிக அரிதான மரபியல் குறைபாட்டுடன் பிறந்த குழந்தை பற்றி சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False