
‘’இந்து மதம் அறிவியல் பூர்வமானது என்று அன்னிபெசன்ட் அம்மையார் சொன்னார்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரலான ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Murali Ram என்பவர் கடந்த ஜூலை 17, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், அன்னிபெசன்ட் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’கடந்த நாற்பது வருடங்களாக உலக மதங்கள் அனைத்தையும் ஆய்வு நான் செய்தேன். அதில் இந்து மதம் மட்டுமே ஒரு நிறைவான, தத்துவார்ந்த, அறிவியல் பூர்வமான, ஆன்மீக பூர்வமான மதம் மற்றவை மேற்கூறிய கருத்துகள் எதுவும் இல்லாதவை என்பதை அறிந்தேன்,’’ என்று எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை என நினைத்து வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இருப்பது போல, அன்னிபெசன்ட் புகைப்படம்தான் இதுவா என்ற சந்தேகத்தில் முதலில் கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அதில், குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பவர் அன்னிபெசன்ட்தான் என்ற விவரம் தெரியவந்தது.

புகைப்படத்தில் இருப்பவர் அன்னிபெசன்ட்தான் என்ற விவரம் உறுதியானதோடு, அவர் மதங்களை பற்றி தெரிவித்த கருத்து ஒன்றும் கிடைத்தது. ஆம். எந்த மதமும் உலகத்திற்கு நன்மை செய்யவில்லை என்று அன்னிபெசன்ட் கூறியிருப்பதாக, விவரம் கிடைத்தது.

இதன்படி, கடந்த 1847ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி லண்டனில் பிறந்தவரான அன்னி, ஃபிராங்க் பெசன்ட் என்பவரை 1867ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால், சில ஆண்டுகளிலேயே திருமண வாழ்வில் ஏற்பட்ட கசப்பு காரணமாக, கணவரை விவாகரத்து செய்துவிட்டு, மதச் சீர்திருத்தப் பணிகளில் அன்னி பெசன்ட் ஈடுபட தொடங்கினார். இதற்காக, இந்தியா வந்து இங்குள்ள மதங்களை ஆய்வு செய்ததோடு, சுயராஜ்ஜிய இயக்கம் தொடங்கவும், இந்திய சுதந்திர போராட்டத்தை வலுப்படுத்தவும், தன்னால் முயன்ற பங்களிப்பை அன்னி பெசன்ட் வழங்கியுள்ளார். பெண் உரிமை செயல்பாடுகளுக்கு பெயர் பெற்றவர் ஆவார். அடிப்படையில் கிறிஸ்தவராக இருந்தாலும், அவர் நாத்திகவாதி போலவே செயல்பட்டார்.
அவரது சுய சரிதை உள்பட எந்த இடத்திலும் மதங்களுக்கு ஆதரவாக அவர் கருத்து தெரிவிக்கவில்லை. மாறாக, மதங்களின் பிடியில் இருந்து மக்களை விடுவித்து, சமூக சீர்திருத்தம் செய்வதையே அவர் லட்சியமாகக் கொண்டு செயல்பட்டிருக்கிறார். சென்னையில் உள்ள தியோசோபிக்கல் சொசைட்டி தலைவராக பதவி வகித்து, கடந்த 20, செப்டம்பர் 1933 அன்று உடல்நலக் குறைவால உயிரிழந்தார்.
அவரது சுய சரிதையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுதவிர அன்னிபெசன்ட் அம்மையாரின் புகழ்பெற்ற 100 மேற்கோள்களை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும். இவற்றில் ஒன்றில்கூட அவர் எந்த மதத்தையும் பாராட்டி பேசவில்லை.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த விவரம்,
1) அன்னிபெசன்ட் மத சீர்திருத்த வாதி. மதங்களில் நம்பிக்கை இல்லாதவர். ஒரு நாத்திகவாதி மனப்பான்மையில் இயங்கியவர் ஆவார்.
2) அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்.
3) பெண் உரிமைக்காக போராடியவர்.
4) எந்த மதமும் உலகத்திற்கு நன்மை செய்யவில்லை என்றுதான் அவர் சாடியுள்ளார்.
எனவே, அவரை பற்றி பகிரப்பட்டுள்ள மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு ஒரு தவறான தகவல் என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இந்து மதம் அறிவியல் பூர்வமானது என்று அன்னிபெசன்ட் சொன்னாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
