
வாராக்கடனுக்குத் தீர்வு சீல் வைப்பதுதான் என்றால் குபேரனிடம் கடன்வாங்கிய வெங்கடேசப்பெருமாளின் ஆலயத்துக்கு சீல் வைக்க முடியுமா என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் கே.அண்ணாமலை புகைப்படத்துடன் பிபிசி தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வாராக்கடனுக்குத் தீர்வு சீல் வைப்பதுதான் என்றால் குபேரனிடம் கடன்வாங்கிய வெங்கடேசப்பெருமாளின் ஆலயத்துக்கு சீல் வைக்க முடியுமா? மதுவந்தியை அவமானப்படுத்துவதற்காகவே வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்” என்று இருந்தது.
நிலைத் தகவலில், “குபேரன் கிட்ட ஆதாரம் இருந்தா வாங்கி என்கிட்ட கொடு, வட்டியோட சேத்து பெருமாள் கிட்ட வசூல் பண்ணித்தர நானாச்சி. டீல்_ஓகேவா?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Chandrasekar Gunaa என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 அக்டோபர் 15 அன்று பகிர்ந்துள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பதிவிட்டு ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பா.ஜ.க பிரமுகர் மதுவந்தி வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால் அவரது வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் சீல் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுவந்திக்கு ஆதரவாக தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்தது போன்று நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
பிபிசி தமிழ் வெளியிடும் நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்டுக்கும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்டுக்கும் வேறுபாடு இருந்தது. எனவே, இந்த நியூஸ் கார்டு உண்மையானதுதானா என்று ஆய்வு செய்தோம்.

முதலில், இந்த நியூஸ் கார்டு பிபிசி வெளியிட்டதா என்பதை அறிய, அதன் சமூக ஊடக பக்கங்களைப் பார்வையிட்டோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற ஒரு நியூஸ் கார்டை பிபிசி வெளியிட்டிருந்தது. ஆனால் அதில், “மாநில தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியினருக்குக் காட்டிய எஜமான விசுவாசம் தமிழக காவல் துறையையே மிஞ்சிவிட்டது. திமுகவின் இந்த தற்காலிக வெற்றி, ஜனநாயகத்தின் தற்காலிக தோல்வி” என்று அண்ணாமலை கூறியதாக இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து போலியாக வெளியிட்டிருப்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: Facebook
மதுவந்தி விவகாரம் தொடர்பாக அண்ணாமலை ஏதும் கருத்து தெரிவித்துள்ளாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் ட்விட்டர் பக்கத்தை பார்வையிட்டோம். அப்போது, இந்த நியூஸ் கார்டு போலியானது என்று அக்கட்சியின் வேறு ஒரு நிர்வாகி வெளியிட்டிருந்த ட்வீட்டை அண்ணாமலை ரீட்வீட் செய்திருந்தார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சீல் வைக்க முடியுமா என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
குபேரனிடம் கடன் வாங்கியதற்காக வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சீல் வைக்க முடியுமா என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு சீல் வைக்க முடியுமா என்று அண்ணாமலை கேட்டாரா?
Fact Check By: Chendur PandianResult: False
