
‘’அர்னாப் கோஸ்வாமி பேண்ட்டில் சிறுநீர் கழித்துவிட்டார்,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் ஒரு புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதே புகைப்படத்தை மேலும் பலர் பகிர்ந்துள்ளதைக் காண முடிகிறது.
Facebook Claim Link 1 | Archived Link |
Facebook Claim Link 2 | Archived Link |
Facebook Claim Link 3 | Archived Link |
இது பார்க்க விளையாட்டான பதிவாக இருந்தாலும், அரசியல் உள்நோக்கத்துடன் பகிரப்படுவதாக தெரியவருகிறது. எனவே, இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி நமது வாசகர் ஒருவர் நம்மிடம் கேட்டுக் கொண்டார்.
உண்மை அறிவோம்:
ரிபப்ளிக் டிவி செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலம், பால்கரில் நிகழ்ந்த இந்து மத துறவிகள் கொலை வழக்கு பற்றி மத துவேஷத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இதன்பேரில் அவர் மீது நாக்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
இந்த வழக்கு விசாரணைக்காக ஏப்ரல் 27ம் தேதி அர்னாப் கோஸ்வாமி நேரில் ஆஜரானார். சுமார் 12 மணிநேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது. இதன்பின் வெளியே வந்த அவர் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார்.
விசாரணை முடிந்து ஊடகத்தினருக்கு அர்னாப் பேட்டி அளித்தபோது எடுத்த புகைப்படத்தை எடிட் செய்து, பலரும் சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்பி வருகின்றனர்.
ஆனால், அர்னாப் கோஸ்வாமி பேண்ட்டில் சிறுநீர் கழிக்கவும் இல்லை அல்லது அவரது பேண்ட் விசாரணை முடிந்து வெளியே வந்தபோது ஈரமாகவும் இல்லை. அந்த புகைப்படத்தின் உண்மை ஆதாரத்தை கீழே இணைத்துள்ளோம்.

இது மட்டுமின்றி போலீஸ் விசாரணை முடிந்ததும் அர்னாப் கோஸ்வாமி அளித்த பேட்டி தொடர்பான வீடியோ ஒன்றை ரிபப்ளிக் டிவி வெளியிட்டிருக்கிறது. அந்த வீடியோவை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். அதனை பார்த்தாலே தெளிவாக தெரியும், அர்னாப் பற்றி பகிரப்படும் தகவலில் உண்மை இல்லை என்று…
எனவே, அர்னாப் கோஸ்வாமியின் புகைப்படத்தை எடிட் செய்து, ‘அவர் போலீஸ் விசாரணையில் பயந்து உச்சா போய்விட்டார்,’ என அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் வதந்தி பரப்புகிறார்கள் என்று தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:அர்னாப் கோஸ்வாமி பேண்ட்டில் சிறுநீர் கழித்ததாகப் பரவும் வதந்தி!
Fact Check By: Pankaj IyerResult: False
