கேரளாவில் பூஜை செய்த பெண்ணை தாக்கிய கிறிஸ்தவ மிஷனரிகள்? உண்மை இதோ!

இந்தியா சமூக ஊடகம் சமூகம்

கேரளாவில் பரசுராம ஜெயந்தியைக் கொண்டாடிய தலித் பழங்குடியின பெண்ணை கிறிஸ்தவ மிஷனரிகள் தாக்கியதாக படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

மூதாட்டி ஒருவரின் முகத்தில் ரத்தம் வடியும் புகைப்படம், கிருஷ்ணர் சாமி சிலை தரையில் உடைத்து வீசப்பட்டிருக்கும் படங்களைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், கேரளா, தலித் பழங்குடியின மூதாட்டி பரசுராம ஜெயந்தியை முன்னிட்டு இன்று பூஜை செய்த காரணத்தால் கிறிஸ்தவ மிஷனரி குண்டர்களால் தாக்கப்பட்டார். வாழ்க பினராயி, வாழ்க கிறிஸ்தவ மிஷ நரி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை, Siva என்பவர் 2020 ஏப்ரல் 26ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கொரோனா பாதிப்பு காரணமாக நாடே ஊரடங்கு காரணமாக அவதியுற்று வரும் நிலையில் சிலருக்கு மதம் தொடர்பான வதந்திகள் பரப்பி சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதே முக்கியமான பணியாக இருந்து வருகிறது. கிருஷ்ணரின் விக்ரகம் உடைக்கப்பட்டிருப்பது, பெண் தாக்கப்பட்டிருப்பதை பார்த்து பலரும் கொந்தளித்து கருத்துக்களைப் பதிவிட்டு வருவது இதை உறுதி செய்கிறது. 

இந்த சம்பவம் உண்மையா என்று கண்டறிய கூகுளில் கேரளாவில் பரசுராம் ஜெயந்தி கொண்டாடிய பெண் கிறிஸ்தவர்களால் தாக்கப்பட்டாரா என்று டைப் செய்து தேடியபோது அது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. எனவே, மூதாட்டியின் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.

அப்போது, இந்த படத்தை மூன்று, நான்கு ஆண்டுகளாக பலரும் வதந்தியைப் பரப்ப பயன்படுத்தி வருவது தெரிந்தது. இந்த படம் தொடர்பாக சில உண்மை கண்டறியும் ஆய்வுகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருப்பதும் தெரிந்தது. இவற்றுக்கு நடுவே சில ஃபேஸ்புக் பதிவுகளும் நமக்கு கிடைத்தன. அவற்றை ஆய்வு செய்தோம்.  

Facebook LinkArchived Link

2017ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி Chittagong Tuber – সুপ্তদিশা என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த மூதாட்டியின் படம் பகிரப்பட்டு இருந்தது. அதில், இந்த பெண் வங்கதேச நாட்டில் சிட்டகாங் மாவட்டத்தைச் சர்ந்தவர் என்று குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், “இந்த மூதாட்டியின் பெயர் பஞ்சபாலா கர்மாகர். இவர் சிட்டகாங் மாவட்டத்தில் உள்ள பன்சகாளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜல்தி கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த ஏழை மூதாட்டியை அந்த பகுதியில் செல்வாக்கு மிக்க பிரதீப் கோஷ் மற்றும் அவரது மகன் பிஸ்வஜித் கோஷ் ஆகியோர் திட்டமிட்டு அடித்து காயப்படுத்தியதாகவும், உதவி செய்ய யாரும் இன்றி அந்த மூதாட்டி அவதியுறுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

kairalinewsonline.comArchived Link 1
azhimukham.comArchived Link 2

தொடர்ந்து தேடியபோது, 2017, 2018ம் ஆண்டுகளில் இந்த மூதாட்டி மத மாற்றம் தொடர்பாக தாக்கப்பட்டதாக பா.ஜ.க எம்.பி ஒருவர் வதந்தி பரப்பியதாகவும் ஆனால், அது உண்மை இல்லை என்று மலையாளத்தில் வெளியான செய்திகள் சிலவும் கிடைத்தன. 

இதன் மூலம், 2017ம் ஆண்டு சமூக ஊடகத்தில் வெளியான வங்கதேசத்தைச் சேர்ந்த மூதாட்டியின் படத்தை வைத்து கேரளாவில் கிறிஸ்தவ மிஷனரிகளால் தாக்கப்பட்டார் என்று விஷமத்தனமான வதந்தி பரப்பப்பட்டுள்ளது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கேரளாவில் பூஜை செய்த பெண்ணை தாக்கிய கிறிஸ்தவ மிஷனரிகள்? உண்மை இதோ!

Fact Check By: Chendur Pandian 

Result: False

1 thought on “கேரளாவில் பூஜை செய்த பெண்ணை தாக்கிய கிறிஸ்தவ மிஷனரிகள்? உண்மை இதோ!

Comments are closed.