
ரயில் கட்டணம் கி.மீட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
மோடி, அமித்ஷா ஓவியங்களுடன் ஒரு படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “மோடியின் புத்தாண்டு பாிசு… ரயில் கட்டணம் கி.மீ-க்கு ரூ.4 வரை உயர்வு” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, மதவாத எதிர்ப்பு பிரச்சாரம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஜனவரி 1ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஜனவரி 1ம் தேதி முதல் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதுவும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளுக்கு சாதாரண ரயிலில் கிலோ மீட்டருக்கு ஒரு பைசாவும், எக்ஸ்பிரஸ்- மெயில் ரயில்களில் கி.மீ-க்கு 2 பைசாவும், ஏ.சி வகுப்பு பெட்டிகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு நான்கு பைசாவும் உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதாவது, சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு 727 கி.மீ தூரம் என்றால், 727 காசுகள் (ரூ.7.27) உயர்த்தப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ், மெயில் ரயில் என்றால் கட்டண உயர்வு 1454 காசுகள் (ரூ.14.54) வரும். இதுவே ஏ.சி வகுப்பு என்றால் 2908 (ரூ.29.08) உயர்த்தப்பட்டுள்ளது. இது அதிகமா, குறைவா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை.
இந்த பதிவில் கிலோ மீட்டருக்கு ரூ.4 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டது சரியா என்று மட்டுமே ஆய்வு மேற்கொண்டோம். இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையைத் தேடினோம். அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நமக்கு இந்த அறிவிப்பு கிடைத்தது.
Archived Link |
அதில் ரயில்கள் டிக்கெட் கட்டணம் 2014-15ல் உயர்த்தப்பட்டது. பயணிகளுக்கு வசதிகளை அதிகரிக்கவும் உலகத் தரம் வாய்ந்த சேவையை அளிக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தினசரி ரயில்களில் பயணம் செய்பவர்களின் நலனைக் கருதி புறநகர் ரயில் சேவைகளை தவிர்த்து மற்ற ரயில்களின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் பாதிக்காத வகையில் ஏ.சி இல்லாத வகுப்புகளில் பயணம் செய்யும் மக்களின் நன்மைக்காக ஒரு கி.மீட்டர் பயணத்துக்கான கட்டணம் ஒரு பைசா உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு ஜனவரி 1ம் தேதி முதல் அமலாகிறது. 1ம் தேதிக்கு முன்பாக முன்பதிவு செய்தவர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. உயர்த்தப்படும் கட்டணம் விவரம் வருமாறு:
சாதாரண, ஏ.சி இல்லாத வகுப்புகளுக்கு : ஒரு கி.மீ-க்கு ஒரு பைசா
மெயில், எக்ஸ்பிரஸ் ஏ.சி இல்லாத வகுப்புகளுக்கு : கி.மீ-க்கு இரண்டு பைசா
ஏ.சி. வகுப்புகளுக்கு : கி.மீ-க்கு நான்கு பைசா
புறநகர் மற்றும் சீசன் டிக்கெட்களுக்கு – உயர்வு இல்லை
இதன் மூலம் கி.மீ-க்கு அதிகபட்சமாக நான்கு பைசா வரை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது உறுதியானது. நான்கு ரூபாய் உயர்த்தப்பட்டது என்று எந்த இடத்திலும் இல்லை.
வேறு ஏதாவது விதத்தில் கி.மீ-க்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
tamil.indianexpress.com | Archived Link 1 |
dinamani.com | Archived Link 2 |
dinamalar.com | Archived Link 3 |
எல்லா செய்திகளிலும் ரயில்வே துறை வெளியிட்ட அறிக்கையையே செய்தியாக வெளியிட்டிருந்தனர். மேலும், கடந்த வாரம் ரயில் கட்டணம் உயர வாய்ப்புள்ளது என்ற பல செய்திகள் வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. அதில் கூட ஐந்து பைசா முதல் 40 பைசா வரை உயர்த்த திட்டம் என்று குறிப்பிட்டிருந்தனர். அதில் கூட கி.மீ-க்கு நான்கு வரை உயர்த்தப்படும் என்று கூறவில்லை. ரயில்வே அமைச்சகமோ அதிகபட்சமாக 4 பைசாவையே உயர்த்தியுள்ளது உறுதியாகி உள்ளது.
நம்முடைய ஆய்வில்,
ரயில்வே அமைச்சகம் வெளியிட்டிருந்த கட்டண உயர்வு பற்றிய அறிக்கையில் அதிகபட்சமாக 4 பைசா உயர்த்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
எந்த ஒரு ஊடகமும் ரூ.4 வரை கட்டண உயர்வு என்று செய்தி வெளியிடவில்லை.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ரயில் கட்டணம் கி.மீ-க்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
