
விளம்பரம் ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள் நேயர்களிடம் கட்டணம் வசூலிக்கவும் கட்டண சேனல்களில் விளம்பரம் ஒளிபரப்பவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தடை விதித்துள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்…
தகவலின் விவரம்:
அனைத்து கட்டண சேனல்களுக்கும் டெல்லி அரசு அதிரடி உத்தரவு… கட்டண சேனல்களில் விளம்பரம் இருக்கக் கூடாது. விளம்பரம் வெளியிடும் தொலைக்காட்சிகள் மக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது. கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் சேனல்களுக்கு கட்டணம் கிடையாது என்று கெஜ்ரிவால் அறிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், நாமும் இதை வரவேற்போம். அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் செய்வோம் என்று கூறப்பட்டுள்ளது. Fame & Famous என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. கட்டண சேனல்களை அடித்து விரட்டுவோம், அதிகம் பகிருங்கள் என்று கூறப்பட்டுள்ளது. கட்டண சேனல்களை அடித்துவிரட்டுவோம் என்பது மக்களை அதிக அளவில் ஷேர் செய்ய தூண்டியுள்ளது. இதனால், 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதை ஷேர் செய்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
விரும்பிய சேனல்களை மட்டும் பார்க்கும் வகையில், கேபிள் டி.வி-க்கான புதிய கட்டண விதிமுறையை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தியது. பிப்ரவரி 1ம் தேதி அமலாகும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
டிராயின் புதிய கட்டண விதிமுறையைத் தொடர்ந்து. கேபிள் டி.வி-க்கான குறைந்தபட்ச மாதாந்திர கட்டணம் ரூ.153.40 ஆனது. இதில், 100 இலவச சேனல்கள் வரை பார்த்துக்கொள்ளலாம். கட்டண சேனல்கள் பார்க்க வேண்டும் என்றால் அதற்குத் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம் நிலவியதாலும் வழக்குகள் தொடரப்பட்டதாலும் அமல் படுத்துவதற்கான காலக்கெடுவை மார்ச் 31ம் தேதி வரை டிராய் நீட்டித்து, பின்னர் அமல்படுத்தியது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த நிலையில், “விளம்பரம் ஒளிபரப்பக் கூடாது என்று அனைத்து கட்டண சேனல்களுக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி உத்தரவு” என்று மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது. டிராயின் புதிய உத்தரவு நடைமுறைக்கு வந்த 2019 பிப்ரவரி காலக்கட்டத்தில் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பதிவில், கட்டணம் வசூலிக்கும் தொலைக்காட்சிகள் தங்கள் டி.வி-யில் விளம்பரங்களை ஒளிபரப்பக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது உண்மையா, இது தொடர்பான அறிவிப்பு ஏதேனும் வெளிவந்துள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.

தொலைக்காட்சி ஒளிபரப்பு எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. தொலைதொடர்பு, தொலைக்காட்சியின் கட்டணங்களை நிர்ணயிக்க, கட்டணத்தை மாற்றி அமைக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் என்ற டிராய் உள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் என்பது தன்னாட்சி அதிகாரம் கொண்டது. இதற்கு மாநில அரசு உத்தரவு பிறப்பிக்க முடியாது. டிராய் உத்தரவை எதிர்த்து டிடிஎஸ்ஏடி என்ற மேல்முறையீட்டு அமைப்பிடம் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும்.

டெல்லி என்பது தேசிய தலைநகர ஆட்சிப் பகுதி என்ற வரையரைக்குள் வருகிறது. சட்டப்பேரவை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இருந்தாலும் கூட அதற்கு மாநில அந்தஸ்து கிடையாது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ்தான் டெல்லி மாநிலம் உள்ளது. இதனால், யாருக்கு அதிக அதிகாரம் என்று டெல்லி முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே பனிப்போரே நடந்து வருகிறது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
அப்படி ஒரு மாநில முதல்வருக்கான அதிகாரத்தை பெறுவதற்கே, சட்ட போராட்டம் நடத்தும் டெல்லி முதல்வர், மத்திய அரசின், தன்னாட்சி அதிகாரம் கொண்ட டிராய்க்கோ, தொலைக்காட்சி நிறுவனங்களுக்கோ கட்டணம் மற்றும் விளம்பரம் பெறுவது தொடர்பாக எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று தெரியவில்லை.
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், தொலைபேசி, தொலைக்காட்சி நிறுவனங்கள் கட்டணம், சந்தா போன்றவற்றை எல்லாம் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்தான் கட்டுப்படுத்துகிறது. கட்டண விகிதங்கள் எல்லாம் டிராய் உத்தரவுபடியே நிர்ணயிக்கப்படுகிறது. அப்படி இருக்கையில் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார் என்பது தவறான தகவல் என்பது உரிய ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
முடிவு
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில், தொலைக்காட்சிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த அரவிந்த் கெஜ்ரிவால் என்ற மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:கட்டண சேனல்களுக்கு கட்டுப்பாடு விதித்தாரா கெஜ்ரிவால்?
Fact Check By: Praveen KumarResult: False
