
‘’திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மிகப்பெரிய தோல்வியை சந்திப்பார்,’’ என்று பாலாஜி ஜோசியம் சொன்னதாகக் கூறி ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Vsprabu Susi என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ஜோதிடர் பாலாஜியின் பெயரில் வெளியான பாலிமர் டிவி நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், பாலாஜி மற்றும் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் புகைப்படங்களை பகிர்ந்து, ‘’மிக துல்லியமாக கணிக்கக்கூடிய ஜோசியர் பாலாஜி ஹாசன் அவர்களின் வேலூர் தேர்தல் கணிப்பு, திமுக மிகப்பெரிய தோல்வியடையும், துரைமுருகன் திமுக.,வில் இருந்து விலகுவார்,’’ என எழுதப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலில், திமுக வெற்றி பெற்றுள்ளது. ஆனால், திமுக வெற்றி பெறாது என்று கூறி சில நாட்களாக, பாலாஜி ஹாசன் என்ற ஜோதிடரின் பெயரில் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்தது. அத்துடன், வேலூர் தேர்தல் முடிவுகள் ஆகஸ்ட் 9 அன்று அறிவிக்கப்பட்டது. அதில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்ற நிலையில், ‘’அந்த ஜோசியரை கேட்டதா சொல்லுங்கப்பா,’’ என்று கூறி பலரும் இதே நியூஸ் கார்டை பகிர தொடங்கினர்.

இதன்படியே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவும் பாலாஜியை கிண்டல் செய்யும் நோக்கில் பகிரப்பட்டிருந்தது. ஆனால், பாலாஜி ஹாசன் இதுபற்றி மறுப்பு தெரிவித்துள்ளார். ஆம், உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி பற்றியும், தமிழகம் மற்றும் இந்திய அரசியல் நிலவரம் பற்றியும் துல்லியமான கணிப்புகள் தெரிவித்து பலரையும் வியப்படைய செய்த பாலாஜி, வேலூர் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்றே கூறி வந்தார்.
ஆனால், அவரது பெயரை பயன்படுத்தி யாரோ இப்படி தவறான தகவல் பரப்பியுள்ளனர். இதனை அவரே தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டு, மறுப்பு தெரிவித்துள்ளார்.

தனது பெயரையும், பாலிமர் டிவி பெயரையும் பயன்படுத்தி யாரோ இப்படி தவறான தகவலை போலியாகச் சித்தரித்து பகிர்ந்துள்ளதாக, பாலாஜி குறிப்பிடுகிறார். இதை வைத்துப் பார்க்கும்போது, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான தகவல் என தெரியவருகிறது. இதனை உண்மை என நம்பி சிலரும், காமெடிக்காக பலரும் ஷேர் செய்கிறார்கள். அது தவறு என இதன்மூலமாக, தெளிவுபடுத்தப்படுகிறது.
சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரிப்பதால் நாளுக்கு நாள் உண்மை எது, பொய் எது என்று தெரியாத அளவுக்கு மிக நேர்த்தியாக, முன்னணி ஊடகங்களின் பெயரில் போலியான தகவல் பரப்புவதைச் சிலர் வாடிக்கயாகக் கொண்டுள்ளனர். அத்தகைய நபர்கள் தங்களின் சுய லாபத்திற்காக தயாரித்து வெளியிட்டதே, இந்த பாலாஜி ஹாசன் பற்றிய பாலிமர் நியூஸ் கார்டும், என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி தவறாகச் சித்தரிக்கப்பட்ட ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ எதையும் உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தோல்வி அடைவார் என்று பாலாஜி ஜோசியம் சொன்னாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
