370வது சட்டப் பிரிவு நீக்கத்தைக் கொண்டாடிய இளைஞர் கொலை?- ஃபேஸ்புக்கில் பரவும் செய்தி!

சமூக ஊடகம் சமூகம்

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைக் கொண்டாடிய இளைஞரை இஸ்லாமிய பயங்கரவாதிகள் அடித்துக்கொலை செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Youth 2.png

Facebook Link I Archived Link

இளைஞர் ஒருவரின் உடல் அடக்க புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “370 சட்டப்பிரிவை மத்திய அரசு திரும்பப் பெற்றதைக் கொண்டாடிய இராஜஸ்தான் இளைஞரை அடித்துக்கொன்ற இஸ்லாமிய பயங்கரவாதிகள்… ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, “Guru Krishna” என்பவர் 2019 ஆகஸ்ட் 9ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்பட்டதைக் கொண்டாடிய இளைஞர் அடித்துக் கொலை என்று பகிர்ந்துள்ளனர். ராஜஸ்தானில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், செய்தி இணைப்பு ஆதாரம் எதையும் அளிக்கவில்லை. இதனால், ராஜஸ்தானில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி திங்கட்கிழமை காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவு மற்றும் 35ஏ பிரிவுகளை நீக்க குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறி அதற்கான மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஆகஸ்ட் 5ம் தேதி ராஜஸ்தானில், 370வது பிரிவு நீக்கத்தை கொண்டாடிய இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டாரா என்று தேடினோம்.

நம்முடைய தேடலின்போது, டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியிட்ட செய்திகள் கிடைத்தன. அதில், 370வது சட்டப்பிரிவை நீக்கியதை கொண்டாடிய இளைஞர் அடித்துக்கொலை என்று குறிப்பிடவில்லை.

Youth 3.png

அந்த செய்திகளை படித்துப் பார்த்தோம். இந்த சம்பவம் ஆகஸ்ட் 5ம் தேதி இரவு 10.30-க்கு நடந்துள்ளது தெரிந்தது. அந்த செய்தியில், “ராஜஸ்தான் மாநிலம் பிரவா நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ரிசார்டில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வந்தது. அதிக சப்தத்துடன் பாடல்கள் ஒலிக்கப்பட்டன. மேலும், இரவு 10.30 மணிக்கு மேல் பட்டாசு வெடித்தும் கொண்டாடியுள்ளனர். இதை அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கண்டித்துள்ளனர். அப்போது பிறந்தநாள் கொண்டாடியவர்களுக்கும் இம்ரான் என்பவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால், வீட்டுக்குச் சென்று தன்னிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துவந்த இம்ரான், கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி சுட்டுள்ளார். இதில், ரிஷிராஜின் நெஞ்சில் குண்டு பாய்ந்துள்ளது. சரிந்துவிழுந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இம்ரான் மற்றும் அவனுடைய சகோதரர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது ஐ.பி.சி பிரிவு 302, 147 மற்றும் 149ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இம்ரான் உள்ளிட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கொலை வழக்கில் தண்டனை பெற்ற இம்ரான், இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் சிறை தண்டனை முடிந்து விடுதலையாகி வெளியே வந்தார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ரிஷிராஜ் மீதும் கூட சில கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் காரணமாக பிரவா போலீஸ் நிலையம் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் டயர்களும் எரிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டு இருந்தனர்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி

ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி

இதே செய்தியை வெளியிட்டு, பிறந்த நாள் விழாவுடன் சோத்து காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கத்தையும் கொண்டாடினார்கள் என்று சில வலதுசாரி ஆதரவு தளங்கள் செய்தி வெளியிட்டதும் நமக்கு கிடைத்தன. ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த செய்தி வெளியாகி இருந்தது. அதற்கு ஆதாரமாக ஒருவரின் பேட்டியையும் அளித்திருந்தனர். ஆனால் அவர் யார், சம்பவ இடத்தில் இருந்தாரா, போலீசில் நடந்த சம்பவம் அப்படியே புகாராக அளிக்கப்பட்டுள்ளதா என்று எல்லாம் எந்த ஆதாரமும் அளிக்கவில்லை. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் சட்டத்திருத்தம் திங்கட் கிழமை காலை நாடாளுமன்ற மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்டது. ஆனால், இரவு 10.30 மணிக்கு மேல் பட்டாசு வெடித்துக் கொண்டாடப்பட்டுள்ளது.

ரிசார்டில் கொண்டாட்டம் நடந்தால் அது 370வது பிரிவு நீக்கத்துக்கானது என்று யாரும் நினைக்கமாட்டார்கள். அதிக ஒலியில் பாடலை ஒலிக்கவிட்டது, பட்டாசு வெடித்தது போன்ற செயல் காரணமாகவே சண்டை ஏற்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இம்ரான் துப்பாக்கியால் சுட்டதில்தான் ரிஷிராஜ் இறந்துள்ளார். அவரை அடித்துக் கொலை செய்யவில்லை என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதன் அடிப்படையில், ராஜஸ்தானில் நடந்த உண்மை சம்பவத்தை, காஷ்மீர் 370வது பிரிவு நீக்கத்துடன் தொடர்புப்படுத்தி விஷமத்தனமாக செய்தி வெளியிட்டுள்ளது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையும் பொய்யான தகவலும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:370வது சட்டப் பிரிவு நீக்கத்தைக் கொண்டாடிய இளைஞர் கொலை?- ஃபேஸ்புக்கில் பரவும் செய்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: Mixture

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •