காம படைத்தலைவர் எச்.ராஜா என போஸ்டர் ஒட்டப்பட்டதா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டரில் காம படைத் தலைவர் என எச்.ராஜாவை குறிப்பிட்டிருந்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

எச்.ராஜா கைது கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டரின் படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், கண்டிகின்றோம்! கண்டிகின்றோம்!! காம படைத்தலைவர் H.ராஜா அவர்களை கைது செய்த தமிழக அரசையும், காவல் துறையையும் வன்மையாக கண்டிகின்றோம், கண்டிகின்றோம்! – பாரதிய ஜனதா கட்சி சிவங்ககை மாவட்டம்” என்று இருந்தது.

இந்த பதிவை Kannan Kodai என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 மே 19ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த போஸ்டர் படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

திண்டுக்கல் மாவட்டம், பழநியில் இந்து ஆலய பாதுகாப்புக் குழு சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அனுமதியின்றி கூட்டம் நடைபெறுவதாகக் கூறி கூட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி பங்கேற்கச் சென்ற எச்.ராஜாவை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். எச்.ராஜா கைது செய்யப்பட்டதற்கு பா.ஜ.க தொண்டர்கள் கண்டனம் தெரிவித்தனர். எச்.ராஜா கைதை கண்டித்து அவருடைய சொந்த மாவட்டத்தில் “காம படைத் தலைவர் எச்.ராஜா” என போஸ்டர் ஒட்டப்பட்டதாக விஷமத்தனமான போஸ்டர் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

போஸ்டர்களில் எழுத்துப்பிழை இருக்கலாம், ஆனால் காம படைத் தலைவர் என்று குறிப்பிடும் அளவுக்கு எழுத்துப்பிழை இருக்குமா என்ற சந்தேகம் எழவே, இந்த போஸ்டர் பற்றி ஆய்வு செய்தோம். இந்த சுவரொட்டியில் உள்ள வார்த்தைகளை டைப் செய்து கூகுள், ஃபேஸ்புக்கில் தேடினோம். அப்போது ஃபேஸ்புக்கில் வெளியான சில பதிவுகள் கிடைத்தன. அதில், “காவி படைத்தலைவர்” என்று இருந்தது. இதை காம படைத் தலைவர் என்று விஷமத்தனமாக எடிட் செய்திருக்கலாம் என தெரிந்தது.

தொடர்ந்து தேடிய போது எச்.ராஜா, பா.ஜ.க ஆதரவு யூடியூப் சேனலான தாமரை டி.வி-யில் வெளியான வீடியோ கிடைத்தது. அதில் ஆண், பெண் என இருவர் சுவரில் போஸ்டர் ஒட்டும் காட்சியைக் காண்பித்தனர். அந்த போஸ்டரில் காவி படைத் தலைவர் என்று குறிப்பிட்டிருப்பதைத் தெளிவாகக் காண முடிந்தது. இதன் மூலம் எச்.ராஜாவுக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரில் தவறான முறையில் திருத்தம் செய்து காம படைத் தலைவர் என சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது உறுதியானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பா.ஜ.க-வினர் ஒட்டிய போஸ்டரில் எச்.ராஜாவை காமப்படைத் தலைவர் என்று குறிப்பிட்டதாக பரவும் படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:காம படைத்தலைவர் எச்.ராஜா என போஸ்டர் ஒட்டப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered