
யோகாவும், வேத மருத்துவமும் கைவிட்டதால் எம்.பி.பி.எஸ் டாக்டரிடம் சிகிச்சை பெறும் பிரபல யோகா குருவும் பதஞ்சலி நிறுவனத்தைத் தொடங்கியவருமான ராம்தேவ் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

பிரபல யோகா குரு ராம்தேவ் படுக்கையில் இருக்கிறார். அவரை ஸ்டெதஸ்கோப் வைத்து மருத்துவர் ஒருவர் பரிசோதனை செய்கிறார். இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த தகவலும் இல்லை.
நிலைத்தகவலில், “யோகாவும், வேத மருத்துவமும் கைவிட்டுவிட்டது..! ராமனும் கைவிட்டு விட்டான்! இனி மெக்காலே கல்வி முறையில் ஆங்கில மருத்துவம் படித்த MBBS டாக்டர் தான் என்னை காப்பாத்த முடியும்!” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, தமிழன் டா – Thamilan Da என்ற ஃபேஸ்புக் குழு 2019 ஜூலை 25ம் தேதி வெளியிட்டுள்ளது.
உண்மை அறிவோம்:
யோகா குரு ராம்தேவ் ஆங்கில மருத்துவ சிகிச்சை பெறுகிறார், அவருக்கு வெளிநாட்டில் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது என்று எல்லாம் தொடர்ந்து வதந்தி பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையானது இல்லை என்று நாம் ஏற்கனவே ஆய்வு நடத்தி கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
தற்போது, மீண்டும் ராம்தேவ்வை மருத்துவர் ஒருவர் ஆய்வு செய்யும் பழைய படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த படத்தைப் பார்த்தால் பழைய படம் போலத் தெரிகிறது. ராம்தேவ் படுக்கைக்கு மேல் ஒரு மைக் இருப்பதையும் காண முடிகிறது.

இந்த படம் எப்போது, எங்கே எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. இதனால், படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த படம் பற்றிய முழு விவரமும் கிடைத்தது.

சமூக ஊடகங்களில் இந்த படத்தைப் பயன்படுத்திப் பல மீம்ஸ் உலா வருவது தெரிந்தது.

அதே நேரத்தில் இந்த படம் 2011ம் ஆண்டு ஊழலுக்கு எதிராக பாபா ராம்தேவ் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தபோது எடுக்கப்பட்டது என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்தன.
2011ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி பாபா ராம்தேவ் உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கினார். உண்ணாவிரதம் காரணமாக பாபா ராம் தேவ் உடல்நிலை மோசமானது. இதனால், உத்திரகாண்ட் மாநில அரசு பாபா ராம்தேவ்வை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதித்து டிரிப்ஸ் மூலம் மருந்து செலுத்தியது. ஆனாலும், பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தைக் கைவிடவில்லை. அப்போது எடுக்கப்பட்ட படம் என்று 2011 ஜூன் மாதம் வெளியான செய்தியில் இந்த படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

பாபா ராம்தேவ்-க்கு கட்டாயப்படுத்தி உணவு புகட்டப்பட்டதா என்று என்.டி.டி.வி செய்தி ஒன்று வெளியிட்டிருந்ததும் கிடைத்தது. அதில், ஒரு வீடியோவும் இருந்தது. ராம்தேவ்-க்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மாநில நிர்வாகம் முடிவு செய்ததாக அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் இடத்துக்கு மருத்துவர்கள் வந்து அவர் உடல்நிலையை பரிசோதனை செய்வதையும் காணலாம். அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
டைம்ஸ் நவ் வெளியிட்ட வீடியோவில் இந்த காட்சிகளை மிகத் தெளிவாக காண முடிகிறது.
நம்முடைய ஆய்வில், பல ஊடகங்கள் இந்த படத்தை வெளியிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், யோகா, வேத மருத்துவம் கைவிட்டதால் ஆங்கில மருத்துவ சிகிச்சை எடுக்க வந்த பாபா ராம்தேவ் என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:யோகாவும், வேத மருத்துவமும் கைவிட்டதால் அலோபதி சிகிச்சை பெறும் பாபா ராம்தேவ்! – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
