
‘’விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இல்லையாம், பால்ராஜாம்,’’ என்ற கிண்டல் தொனியில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
ஆமைக்கறி சைமன் 3.0 என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதனை பார்க்கும்போதே, சீமானை கிண்டல் செய்கிறேன் பேர்வழி என, வேண்டுமென்றே, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் கீழ் இத்தகைய பதிவை வெளியிட்டுள்ளார்கள் என தெளிவாகிறது. இருந்தாலும், இதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ஃபேஸ்புக் ஐடி, சீமானை கிண்டல் செய்வதற்காக, உருவாக்கப்பட்ட ஒன்று, என தெரிகிறது. இந்நிலையில், அந்த ஐடி, ஜூன் 2ம் தேதி வெளியிட்டுள்ள வீடியோ பதிவையே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளோம்.

மேற்கண்ட வீடியோவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆனையிறவுப் போரின் வீர பிரதாப கதையை, தனது கட்சிக் கூட்டத்தில் விளக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அவர் பேசுகையில், ‘’ஆனையிறவுப் போரில் வெற்றி கிடைத்தாலும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், கேப்டன் பால்ராஜை பாராட்டவில்லை. இதனால், பால்ராஜ் சற்று வருத்தமாக இருந்தார். அதேசமயம், சிங்களவர்கள், பிரபாகரன் தலைமையில் படைகள் வந்தால்கூட சமாளிக்கலாம், கேப்டன் பால்ராஜ் தலைமையில் விடுதலைப் புலிகள் வருகிறார்கள். அவர்களை சமாளிப்பது கடினம் என்று கூறி சிதறியோடினார்கள்,’’ என்று குறிப்பிடுகிறார்.
சுமார் 1 நிமிடத்திற்கு மேல் ஓடும் இந்த வீடியோவில், எந்த இடத்திலும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இல்லை, பால்ராஜ்தான் என சீமான் குறிப்பிடவில்லை. பிரபாகரனை விட ஆக்ரோஷமாக போர் புரியும் கேப்டன் பால்ராஜ் என்றுதான் குறிப்பிடுகிறார். அதாவது, பால்ராஜின் போர்த் திறனை பாராட்டும் வகையில், இதனை பேசுகிறாரே ஒழிய எந்த இடத்திலும் பிரபாகரனை மட்டம் தட்டி, அவர் இப்படி பேசவில்லை. ஆனையிறவுப் போர் வரலாறு பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.
இதுதவிர பிரபாகரனை விட மாவீரர் பால்ராஜ்தான் என்றும் சீமான் இந்த வீடியோவில் பேசவில்லை. பிரபாகரனை விட ஆக்ரோஷமாக தாக்கக்கூடியவர் கேப்டன் பால்ராஜ் என்றுதான் குறிப்பிடுகிறார். பால்ராஜ் விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதியாக பல போர்க்களங்களில் முன் நின்றவர் ஆவார். அவரை விடுதலைப் புலிகளின் கேப்டன் என்றுதான் சீமான் கூறுகிறார். கேப்டன் என்றால் படைத் தளபதி, போர்க்களத்தில் கட்டளையிடும் நபர் என்றுதான் அர்த்தம் வருமே தவிர, இயக்கத்தின் தலைவர் என்று அர்த்தம் கிடையாது.
இவர்கள் குறிப்பிடும் வீடியோ திருநெல்வேலியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும். ஜூன் 1ம் தேதி யூ டியூப்பில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவின் முழு விவரம் கீழே தரப்பட்டுளளது.
அதாவது, சீமானை கீழ்த்தரமாக சித்தரிக்கும் வகையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளனர். அவர் பேசியது ஒன்றாக இருக்க, இவர்களாகவே ஒரு அர்த்தம் கற்பித்துக் கொண்டு, ஃபேஸ்புக்கில் தகவல் பரப்பியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக, ‘’ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இல்லையாம் #பிரபாகரனை விட #பெரியவீரன் பால்ராஜ் தானாம் அடேய் சீமான் யார்டா அந்த #பால்ராஜ்??,’’ என்று இவர்கள் எழுதியுள்ளதை பார்த்தால், அரசியல் உள்நோக்கம் அதிகம் இதில் உள்ளது தெளிவாகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பால்ராஜ் என்று சீமான் பேசியிருந்தால்தான் தவறு; ஆனால், அவர் அப்படி பேசவே இல்லை. வீடியோவை சரியாகக் கேட்காமல், சீமான், பால்ராஜ், பிரபாகரன் என 3 பேரையும் விமர்சிக்கும் வகையில், அரசியல் உள்நோக்கத்துடன் தவறான வகையில் இந்த பதிவை வெளியிட்டுள்ளனர். எனவே, இது தவறான பதிவு என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இல்லையாம்- குதர்க்கமான ஃபேஸ்புக் பதிவு
Fact Check By: Parthiban SResult: False
