“மோடியின் அருமை தெரியாத தமிழர்கள் காட்டுமிராண்டிகள்!” – ரஜினிகாந்த் பெயரில் பரவும் ஃபேஸ்புக் பதிவு

அரசியல் சமூக ஊடகம்

“மோடியின் அருமை தெரியாத தமிழர்கள் காட்டுமிராண்டிகள்” என்று ரஜினிகாந்த் கூறியதாக நியூஸ்7 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

பிழைக்க வந்த நாயின் பேச்சை பார்….
இந்த லூசு பின்னாடியும் ஒரு மதி கெட்ட தமிழ் கூட்டம்த்த்த்தூதூதூ?????

Archived link

நியூஸ்7 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டில், “மோடியின் அருமை தெரியாத தமிழர்கள் காட்டுமிராண்டிகளாக இருக்கிறார்கள்” என்று உள்ளது. அதே படத்தில் மிகச் சிறியதாக, “பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்” என்று உள்ளது. அருகில், பிரதமர் மோடி அருகில் ரஜினிகாந்த் இருக்கும் படம் உள்ளது. படத்தில் இந்த பதிவு மே 28ம் தேதி, பிற்பகல் 12.30க்கு வெளியானது போல குறிப்பிடப்பட்டுள்ளது. பார்க்க அச்சு அசலாக நியூஸ்7 தொலைக்காட்சி நியூஸ் கார்டு போலவே உள்ளது.

இந்த பதிவை, குரு வேங்கை என்பவர் 2019 மே 31ம் தேதி வெளியிட்டுள்ளார். நிலைத் தகவலில், “பிழைக்க வந்த *** பேச்சை பார்… இந்த லூசு பின்னாலும் ஒரு மதி கெட்ட தமிழ் கூட்டம்…” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் உண்மை என்று கருதி ஏராளமானோர் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேலோட்டமாக பார்த்தால் இது நியூஸ்7 போட்டோ கார்டு போல தெரிகிறது. நியூஸ்7 இது போலத்தான் போட்டோ கார்டை வெளியிடுகிறதா என்று ஆய்வு செய்தோம். 2019 ஜூன் 3ம் தேதி வெளியான ஒரு பிக் நியூஸ் பிரேக்கிங் போட்டோ கார்டை எடுத்துப் பார்த்தோம். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஃபாண்ட், நடுவில் இடம் பெரும் நியூஸ்7 லோகோ வாட்டர் மார்க் போன்றவை மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள போட்டோ கார்டில் இடம்பெறவில்லை. இதனால், போலியாக இந்த போட்டோ கார்டு உருவாக்கப்பட்டுள்ளது தெரிந்தது.

RAJINI 2.png

குரு வேங்கை ஃபேஸ்புக் பதிவில் உள்ள போட்டோ கார்டின், அசலை நியூஸ்7 ஃபேஸ்புக் பக்கத்தில் தேடினோம். அந்த போட்டோ கார்டில் குறிப்பிட்டுள்ளது போன்று மே 28ம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு ஏதாவது ரஜினிகாந்த் தொடர்பான போட்டோ கார்டு வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்போது, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போன்ற போட்டோ கார்டு கிடைத்தது.

RAJINI 3.png

அதில், “நேரு, இந்திரா காந்தி, வாஜ்பாய் வரிசையில் நரேந்திர மோடி தலைவராக உருவெடுத்துள்ளார்!” என்று பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Archived link

இந்த போட்டோ கார்டின் பின்னணியில் நியூஸ்7 தமிழ் லோகோ மிகத் தெளிவாக இருந்தது. இந்த போட்டோ கார்டை எடுத்து, விஷமத்தனமான கருத்தை சேர்த்து போட்டோஷாப் செய்திருப்பது இதன் மூலம் உறுதியானது!

நாம் மேற்கொண்ட ஆய்வில், நியூஸ்7 மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்றது போன்ற போட்டோ கார்டை வெளியிடவில்லை.

நியூஸ்7 வெளியிட்ட நியூஸ் கார்டை எடிட் செய்து, விஷமத்தனமான கருத்தைச் சேர்த்து சமூக ஊடகங்களில் பரப்பியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், “பிரதமர் மோடியின் அருமை தெரியாத தமிழர்கள் காட்டுமிராண்டிகள்”என்று ரஜினிகாந்த் கூறியதாக பரப்பப்பட்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது, விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.

இன்றைக்கு பல போலிச் செய்திகள் நியூஸ்7 போன்ற தொலைக்காட்சிகளின் நியூஸ் கார்டுகளைப் பயன்படுத்தியே வெளிவருகின்றன. இவற்றைத் தடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிகளுக்கு உண்டு. தங்கள் தொலைக்காட்சிகளின் பெயரைப் பயன்படுத்தி போலியான பதிவுகளை வெளியிடுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும்போது மட்டுமே பொய்யான செய்திகள் பரவுவதைத் தவிர்க்க முடியும்!

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“மோடியின் அருமை தெரியாத தமிழர்கள் காட்டுமிராண்டிகள்!” – ரஜினிகாந்த் பெயரில் பரவும் ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Praveen Kumar 

Result: False