பகத் சிங்கின் சகோதரி கடந்த மே 30ம் தேதி மரணம் அடைந்ததாகவும் அது பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிடாமல் மறைத்துவிட்டதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

பகத் சிங்கின் சகோதரி படம் என்று ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதனுடன், "சுதந்திரத்திற்கு உயிர் நீத்த பகத் சிங்கின் சகோதரி பிரகாஷ் கயுர் 30-5-2020 இயற்கை எய்தினார். துரதிஷ்டவசமாக இந்த தேசிய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் மரணம் குறித்த செய்தி சேனல்கள் மூச்சு விடவில்லை. விடுதலைப் போராட்ட வீரரின் சகோதரியின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்" என்று போட்டோஷாப் முறையில் எழுதப்பட்டுள்ளது.

இந்த புகைப்பட பதிவை 2020 ஜூன் 1ம் தேதி இந்து மதத்தை பற்றி அறிவோம். என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Murali Krishnan என்பவர் பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பகத் சிங் நூற்றாண்டு விழா கொண்டாடியே 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவருடைய சகோதரி 2020 வரை உயிரோடு இருந்தாரா என்பதே ஆச்சரியமாக இருந்தது. உண்மையில் பகத் சிங் சகோதரி பர்காஷ் கவுர், 2020 மே 30ம் தேதி இறந்தாரா? இது பற்றி எந்த ஊடகமாவது செய்தி வெளியிட்டுள்ளதா என்று கூகுளில் டைப் செய்து தேடினோம்.

indiatoday.inArchived Link 1
hindustantimes.comArchived Link 2
thehindu.comArchived Link 3
sikhsiyasat.netArchived Link 4

அப்போது, பர்காஷ் கவுர் 2014ம் ஆண்டு உயிரிழந்ததாக செய்தி நமக்கு கிடைத்தது. தி ஹிந்து, இந்தியா டுடே, ஹிந்துஸ்தான் டைம்ஸ் என அனைத்து முன்னணி ஊடகங்களும் 2014ம் ஆண்டு வெளியிட்ட செய்திகள் நமக்கு கிடைத்தன. அந்த செய்திகளில் பகத் சிங்கின் உயிரோடு இருந்த சகோதரியும் கடைசியில் உயிரிழந்தார் என்று குறிப்பிட்டிருந்தனர்.

dinakaran.comArchived Link

தமிழில் தினகரன் உள்ளிட்ட ஊடகங்களில் இது தொடர்பான செய்தி 2014ம் ஆண்டு வெளியாகி இருந்தது. அந்த செய்தியில், "பகத்சிங்கின் இளைய சகோதரி பர்காஷ் கவுர் (96) கனடாவில் டொரன்டோ நகரில் வசித்து வந்தார். பகத்சிங்கை தூக்கில் போடும்போது, அவரது தங்கையான பர்காஷ் கவுருக்கு 12 வயதுதான். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்பான்ஸ் சிங் மால்ஹியை திருமணம் செய்து கொண்ட கவுர், கடந்த 1980ம் ஆண்டு முதல் கனடாவில் தனது மூத்த மகன் ரூபிந்தர்சிங் மால்ஹியுடன் வசித்து வந்தார். அவரது கணவரும் அதே வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த 15 வருடங்களுக்கு முன் கவுரின் கணவர் மரணமடைந்தார். கவுர், கடந்த 6 ஆண்டுகளாக பக்கவாத நோயால் படுத்த படுக்கையாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அவர் பகத்சிங்கின் பிறந்த நாளான செப்டம்பர் 28ம் தேதி மரணமடைந்ததாக, கவுரின் மகன் ரூபிந்தர் சிங் கூறினார். கவுர் மரணமடைந்ததை பஞ்சாபில் உள்ள ஹாசியாப்பூரில் வசித்து வரும் கவுரின் உறவினர் ஹர்பஜன் சிங் தத் என்பவர் உறுதிப்படுத்தியுள்ளார்" எனக் கூறியிருந்தனர்.

இதன் மூலம் 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறந்த பர்காஷ் கவுர் 2020 மே 30ம் தேதி இறந்ததாகவும் அவரது மறைவு பற்றி ஊடகங்களில் செய்தி வெளியிடாமல் மறைத்துவிட்டதாகவும் தவறான தகவல் பரப்பியது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் கலந்துள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பகத் சிங் சகோதரியின் மரண செய்தியை மறைத்த ஊடகங்கள்!- ஃபேஸ்புக் வதந்தி

Fact Check By: Chendur Pandian

Result: Partly False