
மக்கள் வரிப் பணத்ததை மேக்அப் போட ஊதாரித்தனமாக செலவு செய்த பிரதமர் மோடி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
மேடம் டுசாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் மோடியின் மெழுகு சிலை வைக்க அளவு எடுத்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எனக்கு தெரிந்து இந்த உலகத்திலேயே நாட்டு மக்களின் பணத்தை இப்படி ஊதாரி தனமாக வீண் செலவு செய்த ஒரு பிரதமரை பார்த்ததே இல்லை மேக்கப்_அலப்பறை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை பாலியல் ஜல்சா பார்ட்டி Unofficial என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 மே 30 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடி தன்னுடைய மேக்அப் கலைஞருக்கு மாதம் 15 லட்ச ரூபாய் வழங்குவதாக புகைப்படம் ஒன்று வைரல் ஆனது. அப்போது இது தொடர்பாக நம் ஆய்வு மேற்கொண்டு அது மோடியின் மேக்அப் கலைஞர் இல்லை, மேடம் டுசாட்ஸ் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் மோடியின் மெழுகு சிலையை அமைப்பதற்காக நடத்தப்பட்ட அளவீடு படம் என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில், தற்போது வீடியோவை வெளியிட்டு மோடிக்கு மேக்அப் போடும் வீடியோ என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோ மேடம் டுசாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்துக்காக எடுக்கப்பட்ட வீடியோ என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரங்களைத் தேடினோம். அப்போது 2016ம் ஆண்டு ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் வெளியிட்ட வீடியோ கிடைத்தது. மேலும், பல ஊடகங்கள் இந்த வீடியோவை தங்கள் யூடியூப் சேனல், ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது.
மேடம் டுசாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ வீடியோ கிடைக்கிறதா என்று தேடினோம். 2016 மார்ச் 16ம் தேதி மேடம் டுசாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகம் தன்னுடைய யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோ நமக்கு கிடைத்தது. அதில், “இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதுடெல்லியில் உள்ள இந்தியப் பிரதமர் மோடியின் இல்லத்தில் மேடம் டுசாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியக கலைஞர்கள் மோடியின் மெழுகு சிலை தயாரிப்புக்கான உருவத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
மோடி உண்மையில் தன்னுடைய மேக்அப்புக்காக அதிக அளவில் செலவு செய்கிறாரா என்று ஆய்வு செய்தோம். அப்போது, மேடம் டுசாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்துக்காக மோடியின் இல்லத்தில் அளவீடு எடுத்த படத்தை அடிப்படையாக கொண்ட காங்கிரஸ் தலைவர் ஒருவர் பதிவிட்டதாகவும், அதன் பிறகு அவர் நீக்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது தெரிந்தது. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவு நடத்திய ஆய்வுக் கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேடம் டுசாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்துக்காக எடுக்கப்பட்ட வீடியோவை மோடியின் மேக்அப் வீடியோ என்று தவறாக வெளியிட்டிருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
