ஈத் பண்டிகை தொடர்பாக பில்கேட்ஸ் வெளியிட்ட ட்வீட் உண்மையா?

சமூக ஊடகம் சர்வ தேசம்

இஸ்லாமியர்கள் தியாகத் திருநாள் என்று கொண்டாடும் ஈத் பண்டிகையன்று விலங்குகள் பலியிடுவது பற்றி பில் கேட்ஸ் ட்வீட் ஒன்றை வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Bill Gates 2.png

Facebook Link I Archived Link

பில்கேட்ஸ் வெளியிட்ட ட்வீட்டை ஸ்கிரீன் ஷாட் செய்து வெளியிட்டது போன்று ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளனர். படம் தெளிவின்றி உள்ளது. எப்போது இந்த ட்வீட் வெளியானது என்ற தகவலும் இல்லை.

அதில், “பணக்காரர்களுக்கு உணவு அளித்து, இன்னும் அதிக பணம் சம்பாதிக்க ஒவ்வொரு நாளும் 10 லட்சத்துக்கும் அதிகமான விலங்குகள் கே.எஃப்.சி, மெக்டோனல்ஸ், பர்கர் கிங் போன்ற உணவகங்களுக்காக கொல்லப்படும்போது, இஸ்லாமியர்கள் விலங்குகளை பலியிடுவதை விமர்சனம் செய்து வெளியிடப்படும் எந்த ஒரு ட்வீட்டையும் நான் காண விரும்பவில்லை.  ஈத் பண்டிகையின்போது இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கு இலவசமாக அவற்றை வழங்குகின்றனர்… நீங்கள் அனைவரும் உங்கள் நினைவை இழந்துவிட்டீர்கள்!” என்று குறிப்பிட்டு இருந்தது.

இந்த பதிவை, Riswana Ris என்பவர் 2019 ஆகஸ்ட் 17ம் தேதி வெளியிட்டுள்ளார். நிலைத் தகவலில், “ஒவ்வொரு நாளும் KFC,mcDonald,Burger king போன்ற என்னற்ற கம்பெனிகள் ஒரு மில்லியன் அளவு மிருகங்களை கொல்வது உங்களுக்கு தவறாக தெரிவதில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் தங்களுடைய பெருநாளுக்காக மிருகங்களை பலியிட்டு அதனை இல்லாதவர்களுக்கும் ஏழைகளுக்கும் வழங்குவது தவறாக தெரிகறது என்றால் நீங்கள் மூளை இல்லாதவர்களாகத்தான் இருக்குவேண்டும். முட்டாளாகத்தான் இருக்குவேண்டும் – ?☝ பில்கேட்ஸ்” என்று குறிப்பிட்டு இருந்தனர். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பில்கேட்ஸ் இஸ்லாமியராக மதம் மாறிவிட்டார் என்று சில ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. அவ்வப்போது அவர் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த கருத்துக்களைப் பகிர்ந்து வருவதாகவும் வதந்தி பரவி வருகிறது. அந்த வகையில் இந்த ட்வீட் புகைப்படமும் இருக்கலாம் என்று தோன்றியது.

ட்வீட் எப்போது வெளியானது என்று தேதி அதில் இல்லை. மிகவும் பழைய படம் போலத் தெளிவற்று இருந்தது. பில்கேட்ஸ் உண்மையில் அப்படி ஒரு ட்வீட் வெளியிட்டிருந்தால் அந்த லிங்கை கொடுத்திருக்கலாம், அவருடைய ட்வீட்டை ஸ்கிரீன் ஷாட் எடுத்திருந்தால் கூட மிகவும் தெளிவாகவே இருந்திருக்கும்… ஸ்கிரீன் ஷாட் செய்பவர்கள் ட்வீட் வெளியான தேதியுடன் எடுத்திருக்க முடியும். இவை எல்லாம் இந்த ட்வீட் உண்மைதானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.

Bill Gates 3.png

ஈத் பண்டிகை ஆகஸ்ட் 11ம் தேதி மாலை தொடங்கி 12ம் தேதி வரை கொண்டாடப்பட்டதாகத் தகவல் கூறுகிறது. இதன் அடிப்படையில், ஆகஸ்ட் 10ம் தேதிக்குப் பிறகு பில்கேட்ஸ் வெளியிட்ட ட்வீட்களை ஆய்வு செய்தோம். அதில், ஈத் பண்டிகை பற்றி அவர் எந்த ஒரு ட்வீட்டையும் வெளியிடவில்லை என்று தெரிந்தது.

Bill Gates 4.png

பில்கேட்ஸ் பெயரில் வெளியாகி இருக்கும் ட்வீட்டை அப்படியே ட்விட்டர் பக்கத்தில் டைப் செய்து தேடினோம். ஆனால், வேறு சிலர் அந்த ட்வீட்டை வெளியிட்டது தெரிந்தது. நம்முடைய தேடலில், 2019 ஆகஸ்ட் 10ம் தேதி Kurdistani என்ற ட்விட்டர் அக்கவுண்ட் பெயர் கொண்ட நபர் இந்த பதிவை வெளியிட்டிருந்தது தெரிந்தது.

Archived Link

அதைத் தொடர்ந்து பலரும் இந்த பதிவை எடுத்து தங்கள் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்தும் தெரிந்தது.

Bill Gates 5.png

பில்கேட்ஸ் ஈத் பண்டிகை பற்றி ட்வீட் ஏதும் செய்தாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். அப்போது, இந்த தகவல் பொய்யானது என்று வெளியான செய்திகள் நமக்கு கிடைத்தன.

செய்தி 1

செய்தி 2

நம்முடைய ஆய்வில், யாரோ ஒருவர் வெளியிட்ட ட்வீட்டை, பில்கேட்ஸ் கூறியதாக சமூக ஊடகங்களில் பரப்பி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ஈத் பண்டிகை தொடர்பாக பில்கேட்ஸ் வெளியிட்ட ட்வீட் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False