கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மழை, வெள்ளம் நிறுத்தப்படும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொன்னாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் உடனே மழை, வெள்ளம் தடுத்து நிறுத்தப்படும்,’’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொன்னதாகக் கூறி, ஃபேஸ்புக்கில் பரவி வரும் தகவலை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

Rahmath Hameed என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், பொன்.ராதாகிருஷ்ணன் பெயரில் புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ஏங்க, உங்க கட்சியிலே ஒருத்தன்கூட அறிவாளியே கிடையாதா, நீ என்ன ஆண்டவனுக்கு செக்யூரிட்டியா?,’’ என எழுதியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவருக்கு, முதலில் இது எந்த ஆண்டில் வெளியான செய்தி என்ற விவரம் கூட தெரியவில்லை போலும். அவர் பகிர்ந்துள்ள நியூஸ் கார்டை சற்று பெரிதுபடுத்தி பார்த்தால், இது 2018ம் ஆண்டு வெளியான செய்தி என்பது போல குறிப்பிடப்பட்டிருந்தது.

இதில், 14/07/2018 என தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. சரி, ஒருவேளை அந்த தேதியில் பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி ஏதேனும் பேசியுள்ளாரா என்ற சந்தேகத்தில் தகவல் தேடினோம். முதலில், புதிய தலைமுறை அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் நீண்ட நேரம் தேடிப் பார்த்தோம். ஆனால், அப்படி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, குறிப்பிட்ட தேதியில் பொன்.ராதாகிருஷ்ணன் ஊடகங்களுக்கு எதுவும் பேட்டி அளித்துள்ளாரா என தேடினோம். ஆனால், அன்றைய தேதியில் (14/07/2018) பொன்.ராதாகிருஷ்ணன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாக செய்தி விவரம் கிடைத்தது. அதில், கேரள மழை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றுதான் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியிருக்கிறார். இதுபற்றி நக்கீரன் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

எனவே, பொன்.ராதாகிருஷ்ணன் பேசாத ஒரு தகவலை பேசியிருப்பது போல தவறாகச் சித்தரித்து, அரசியல் எதிர்க்கருத்து உள்ளவர்கள் போலியான தகவல் பரப்பியுள்ளனர் என தெரியவருகிறது.

இதையடுத்து, ஃபேஸ்புக்கில் தகவல் விவரம் தேடினோம். அப்போது, 2018ம் ஆண்டிலேயே இந்த தகவலை சிலர் பகிர்ந்திருப்பதாக தகவல் கிடைத்தது.

எங்கேயும் இப்படி செய்தி வெளியாகாத நிலையில், திமுக ஆதரவு மனப்பான்மை உள்ளவர்கள் மட்டும், பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி பேசியுள்ளதாக, 2018ல் தகவல் பகிர்ந்திருப்பது நமது சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. இதையடுத்து, fotoforensics.com இணையதளம் சென்று இந்த நியூஸ் கார்டை பதிவேற்றினோம். அப்போது, இது ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட போலியான ஒரு நியூஸ் கார்டு என்பதற்கான ஆதாரம் கிடைத்தது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களை வைத்து பார்க்கும்போது, பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் புதிய தலை முறை பெயரை தவறாகப் பயன்படுத்தி, எதிர்க்கருத்து கொண்டவர்கள் போலியான நியூஸ் கார்டை தயாரித்து கடந்த 2018ம் ஆண்டில் பரப்பியுள்ளனர். ஆனால், அந்த உண்மை தெரியாமல், தற்போதும் இதனை உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர் என்பது சந்தேகமின்றி தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்தி தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மழை, வெள்ளம் நிறுத்தப்படும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொன்னாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False