
உலக பணக்காரர்களுள் ஒருவரும் மைக்ரோ சாஃப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
பில்கேட்ஸ் இஸ்லாத்தை தழுவும் போது கண்ணீர் விடும் காட்சி மாஷா அல்லாஹ்
Basheer Khan என்பவர், 2018 செப்டம்பர் 12 அன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த ஒருவர், அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை. முகமது நபி இறைத்தூதர் என்று இஸ்லாம் பற்றி தன்னுடைய சாட்சியத்தைக் கூறுகிறார். இதை சொல்லும்போதே, அவரது கண்ணில் இருந்து கண்ணீர் துளிகள் வர, அதை துடைக்கிறார். அவரை அருகில் உள்ளவர்கள் அவரை தட்டிக்கொடுத்து உற்சாகம் செய்கின்றனர்.
வீடியோவில் அவர் யார் என்று குறிப்பிடவில்லை. ஆனால், நிலைத் தகவலில் அந்த நபரை பில்கேஸ் என்று குறிப்பிட்டுள்ளனர். பார்க்க அவர் பில்கேட்ஸ் போல இல்லை. இருந்தாலும், ஆயிரக் கணக்கானோர் இது உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வீடியோவில் இருப்பவர் பில்கேட்ஸ் இல்லை. பார்க்க அமெரிக்கர் போல இருக்கிறார். ஆனால், இருவருக்கும் எந்தவித உருவ ஒற்றுமையும் இல்லை. மேலும், இந்த வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த ஒரு தகவலும் இல்லை.

இது தொடர்பான வீடியோ ஏதேனும் உள்ளதா என்று யூ டியூப்பில் தேடினோம். அப்போது, அமெரிக்க அதிகாரி ஒருவர் இஸ்லாம் மதம் ஏற்றார் என்று ஒரு வீடியோ கிடைத்தது. ஆனால், அதில் கூட யார் அவர் என்று கூறவில்லை. இந்த வீடியோ, 2018 ஏப்ரல் 7ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பில்கேட்ஸ் இஸ்லாம் மதம் தழுவினாரா என்று கூகுளில் தேடியபோது, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள வீடியோ தொடர்பான பல உண்மை கண்டறியும் கட்டுரைகள் வெளியாகி இருந்தது தெரிந்தது. அவை அனைத்திலும் இது பொய்யான செய்தி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

பில்கேட்ஸ் பின்பற்றும் மதம் தொடர்பாக ஒரு பதிவு கிடைத்தது. அதில், தன்னை ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர் என்று பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நமக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், மேற்கண்ட வீடியோவில் இருப்பவர் பில் கேட்ஸ் இல்லை. பில்கேட்ஸ் மதம் மாறினார் என்று பகிரப்படும் வீடியோ பொய்யானது என்று நிரூபித்து பல செய்திகள் வெளியாகி உள்ளன. பில்கேட்ஸ் தன்னை கத்தோலிக்க கிறிஸ்தவர் என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட வீடியோ பொய்யானது, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒருவரின் வீடியோவை வெளியிட்டு அது மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் என்று விஷமப் பிரசாரம் செய்யப்பட்டுள்ளது என்று நிரூபிக்கப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கண்ணீர் மல்க இஸ்லாம் மதத்திற்கு மாறிய பில்கேட்ஸ்– வைரல் வீடியோ உண்மையா?
Fact Check By: Praveen KumarResult: False
