பிஎஸ்என்எல் நிறுவனம் 54,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்?

சமூக ஊடகம் வர்த்தகம்

‘’பிஎஸ்என்எல் நிறுவனம் 54 ஆயிரம் ஊழியர்களை நீக்க ஒப்புதல்,’’ என்ற பெயரில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பெயரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம்.

தகவலின் விவரம்:

C:\Users\parthiban\Desktop\bsnl 2.png

Archived Link

சேகுவேரா போராளி என்ற ஃபேஸ்புக் ஐடி கடந்த ஏப்ரல் 3ம் தேதியன்று இந்த பதிவை நக்கல் மன்னன் கவுண்டமணி என்ற பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதில், பிரதமர் மோடியின் புகைப்படத்தையும், பத்திரிகையாளர் அருண் ஷோரியின் புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’54 ஊழியர்களை நீக்க BSNL ஒப்புதல் – மூடுவதற்கு திட்டம், போச்சா? மங்கிபாத் சேட்டையை காண்பித்து விட்டதா? அம்பானி கம்பெனி ஜியோவுக்கு குத்து விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, Airtel, Vodafone நிறுவனங்களை தொடர்ந்து அரசு நிறுவனமான BSNLக்கும் சங்க ஊத போறாங்க! அடுத்த முறை குடும்பம் மற்றும் குடும்பங்களின் வலி புரிந்த ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுங்கள், மீண்டும் இதுபோன்ற முட்டாளை தேர்ந்தெடுத்து விடாதீர்கள்… journalist arun Shourie,’’ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட பதிவில் உள்ளது போல முதலில் அருண் ஷோரி எதுவும் பிஎஸ்என்எல் நிறுவனம் பற்றியும், மோடி பற்றியும் விமர்சித்துள்ளாரா என்ற கோணத்தில் ஆய்வு செய்தோம். ஆனால், அருண் ஷோரி பத்திரிகையாளர் என்பதைவிடவும், அவர் பாஜக.,வைச் சேர்ந்த நபர் ஆவார். பாஜக ஆட்சியில், 2003 முதல் 2004 வரை மத்திய அமைச்சராகவும், 2004 முதல் 2010 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் அவர் பதவி வகித்துள்ளார். அவர் மோடி பற்றி இப்படி அப்பட்டமாக விமர்சித்திருக்க வாய்ப்பில்லை. அதேசமயம், மோடி மீது அதிருப்தியில் உள்ள பாஜக மூத்த தலைவர்களில் அருண் ஷோரியும் ஒருவர் ஆவார். எனினும், அவர் இப்படி சொன்னதற்கான ஆதாரம் எதுவும் சிக்கவில்லை.

இதையடுத்து, பிஎஸ்என்எல் நிறுவனம், இதில் கூறியுள்ளதன்படி, ஆட்குறைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளதா என விவரம் தேடினோம். அப்போது, இதுதொடர்பாக, பிசினஸ் டுடே வெளியிட்ட செய்தி மற்றும் பிஎஸ்என்எல் சிஎம்டியின் மறுப்பு உள்ளிட்ட ஆதாரங்கள் கிடைத்தன.

இதன்படி, கடந்த ஏப்ரல் 4ம் தேதி, அதாவது நாம் ஆய்வு செய்யும் பதிவு வெளியானதற்கு அடுத்த நாளில் பிசினஸ் டுடே செய்தி வெளியாகியுள்ளது. அதில், 54,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கு பிஎஸ்என்எல் நிர்வாகக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுதவிர ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 58 ஆக குறைப்பது, விஆர்எஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட விசயங்கள் தொடர்பாகவும் முக்கிய முடிவுகளை பிஎஸ்என்எல் நிர்வாகக் குழு எடுத்துள்ளதாகவும், அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்குப் பின் இந்த நடவடிக்கை அமலுக்கு வரலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

அதேசமயம், அதே நாளில் பிசினஸ் டுடே வெளியிட்ட மற்றொரு செய்தியில், ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதாகக் கூறப்படும் தகவலை பிஎஸ்என்எல் சிஎம்டி அனுபம் ஸ்ரீவஸ்தவா மறுத்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில் அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவுகளையும் ஆதாரமாக அதில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

அனுபம் ஸ்ரீவஸ்தவா வெளியிட்ட ட்விட்டர் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவில், ஆட்குறைப்பு செய்ய நிர்வாகக் குழு கூட்டத்தில் எந்த ஆலோசனையும் செய்யப்படவில்லை என்றும், விருப்பம் உள்ள ஊழியர்களுக்கு சலுகைகளுடன் கூடிய விஆர்எஸ் தருவது பற்றியே அதிக ஆலோசனை செய்யப்பட்டது என்றும் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். மேலும், பிஎஸ்என்எல் சார்பாக, ஆட்குறைப்பு செய்யப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகளை முற்றிலும் மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் பார்த்தால், பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடவும், 54 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவும் அதன் நிர்வாகக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படும் தகவல் தவறான ஒன்று என உறுதியாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல் தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பிஎஸ்என்எல் நிறுவனம் 54,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்?

Fact Check By: Parthiban S 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •