
இந்திய அளவில் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய, பாஜக.,வும், தேர்தல் ஆணையமும் மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டியுள்ளதாகக் கூறி, ஒரு பரபரப்பு வீடியோ ஃபேஸ்புக்கில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை பரிசோதித்தோம்.
வதந்தியின் விவரம்:
இந்த பதிவில், Tricolour News Network என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சியின் செய்தி வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதில் ஒரு வெள்ளைக்காரப் பெண் பேசுகிறார். அவர், இந்திய தேர்தல் பற்றியும், வாக்குப் பதிவு இயந்திரங்களில் பல மோசடிகளை செய்ய, பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் சதித்திட்டம் பற்றியும் பக்கம் பக்கமாக விவரிக்கிறார். ஆனால், அவரது பேச்சுக்கு எந்த ஆதார விளக்கமும் தரப்படவில்லை.
உண்மை அறிவோம்:
எந்த ஆதாரத்தையும் முன் வைக்காமல், எடுத்த எடுப்பில், யூ டியூப் சினிமா விமர்சகர் போல, மேற்கண்ட வீடியோவில் உள்ள வெள்ளைக்காரப் பெண் பேசுகிறார். ஆனால், அவர் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. ஆம். வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதாகக் கூறி, ஏற்கனவே தேர்தல் ஆணையம் விரிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

வீண் வதந்திகள் பரவுவதால், அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த விளக்கத்தை, தேர்தல் ஆணையம் கடந்த மே 21ம் தேதி வெளியிட்டது. இந்நிலையில், இந்திய மக்களிடையே பீதியை கிளப்பும் வகையில், வெளிநாட்டில் இருந்து அதிர்ச்சி தகவல் என்று கூறி, குறிப்பிட்ட வீடியோவை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வீடியோவில், TNN என்று குறிப்பிடுகின்றனர். ஆனால், அப்படிப்பட்ட பெயர் இந்தியாவில், Times News Network என்பதைத்தான் குறிக்கும். இந்நிலையில், Tricolour News Network என்று கம்பெனி எதுவும் உள்ளதா, என முதலில் தேடினோம்.
இதில், அந்த நிறுவனம் லண்டனில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தெரியவந்தது.

எனினும், இது நம்பிக்கையான நிறுவனமாகத் தெரியவில்லை. இதன் உரிமையாளர் உள்ளிட்ட விவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும். எந்த ஆதாரமும் குறிப்பிடாமல் இஷ்டத்திற்கு ஒரு கட்டுக்கதை கூறி, அதனை வீடியோவாக பதிவேற்றம் செய்துள்ளனர்.
இந்த வீடியோ பற்றி ஏற்கனவே டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் விரிவான ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை சமர்ப்பித்துள்ளது. அதில், இந்த நிறுவனம் முதலில் ஊடக நிறுவனமா என்பதே சந்தேகமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், உரிய ஆதாரங்கள் இன்றி, சாதாரண யூ டியூப் சேனல் போல, ஒரு செய்தியை விஷமத்தனமாகப் பரப்பியுள்ளனர் என்றும், இவர்கள் சொல்வது நம்பகத்தன்மையாக இல்லை என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா மேற்கோள் காட்டியுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதேபோல, இந்தியா டுடே ஊடக நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
தேர்தல் ஆணையமே உரிய விளக்கம் அளித்துவிட்ட நிலையில், ஒரு மூன்றாம் தர வீடியோவை அடிப்படையாக வைத்து பரப்பப்படும் இத்தகைய வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்பதே நமது இறுதி முடிவாக உள்ளது. எனவே, இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் உள்ள தகவல் தவறு என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான தகவல் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய பாஜக, தேர்தல் ஆணையம் சதித்திட்டம்: சர்ச்சை கிளப்பும் வீடியோ
Fact Check By: Parthiban SResult: False
