
“பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோருக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி வழங்கப்பட உள்ளதாக பா.ஜ.க அறிவித்துள்ளது” என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
ராஜ்ய சபா எம்பியாக குமரி மைந்தன் திரு #பொன்னார்அவர்களும் திரு #Hராஜா ஜிஅவர்களும் பாஜக மேலிடம் அறிவிப்பு.
தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பொன் ராதாகிருஷ்ணன், சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த எச்.ராஜா ஆகியோருக்கு மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவி வழங்கப்படுவதாக பா.ஜ.க மேலிடம் அறிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதை, Bjp Painkulam என்ற பக்கம் மே 23ம் தேதி வெளியிட்டுள்ளது. இது உண்மை என்று நம்பி ஏராளமானோர் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
தகவலின் விவரம்:
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இந்திய அளவில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றது. ஆனால், தமிழ்நாட்டில் பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி ஒரே ஒரு தொகுதியில்தான் வெற்றிபெற்றது. பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் , பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை உள்பட ஐந்து பேரும் தோல்வியடைந்தனர்.
இந்த நிலையில், பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகிய இருவருக்கு மட்டும் ராஜ்ய சபா எம்.பி பதவி வழங்க உள்ளதாக பா.ஜ.க தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை நிரூபிக்க எந்த ஒரு ஆதாரத்தையும் அளிக்கவில்லை.
வெற்றி உற்சாகத்தில் இருக்கும் பா.ஜ.க தலைமை, அடுத்து ஆட்சி அமைப்பது தொடர்பான ஆலோசனையில் மூழ்கியுள்ளது. தற்போது ராஜ்யசபா தேர்தல் எதுவும் நடைபெறவில்லை. அப்படி இருக்கையில் ராஜ்யசபா வேட்பாளர்கள் பட்டியலை ஏதும் பா.ஜ.க வெளியிட்டுள்ளதா என்று அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை சென்று பார்த்தோம். அதில், அப்படி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.

ஒருவேளை மூத்த தலைவர்கள் யாராவது பேட்டி அளித்துள்ளார்களா என்று கூகுளில் தேடிப் பார்த்தோம். அதிலும் எதுவும் இல்லை.

இதுதொடர்பாக தமிழக பா.ஜ.க ஊடகப் பிரிவைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர்களும் இந்த தகவலை மறுத்துள்ளனர். பாஜக தலைமை அப்படி எந்த ஒரு முடிவும் எடுத்ததாக தகவல் இல்லை, என்றனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென் தென்னை நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் இல.கணேசன். அவருக்கு மத்திய பிரதேசத்தில் ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
அதேபோல், 2004ம் ஆண்டு அப்போது பா.ஜ.க-வில் இருந்த திருநாவுக்கரசருக்கு மக்களவை சீட் மறுக்கப்பட்டது. அதற்கு பதில் அவருக்கு பிறகு ராஜ்ய சபா சீட் வழங்கப்பட்டது. அதுபோல, எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் ராஜ்ய சபா சீட் வழங்கப்படலாம். இது குறித்து தலைமை முடிவு கூட எடுத்திருக்கலாம். ஆனால், அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இதன் மூலம், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜாவுக்கு மாநிலங்களவை எம்.பி பதவி அறிவிக்கப்பட்டதா?
Fact Check By: Praveen KumarResult: False
