
10 டன் தேங்காய் ஏற்றிய லாரியை பா.ஜ.க நிர்வாகிகள் கடத்தியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், இளைஞர் ஒருவரின் படம் உள்ளது. போட்டோஷாப் மூலம், “லாரியில் ஜிபிஎஸ் கருவி இருப்பதை அறியாமல் 10 டன் தேங்காய் கொண்ட லாரியை கடத்திய பொள்ளாச்சி நகர பா.ஜ.க செயலாளர் மணிகண்டன், கோகுல் உள்பட 6 பேர் கைது” என்று உள்ளது. அதன் கீழே, “தேங்காய் திருடிய பா.ஜ.க செயலாளர்” என்று போட்டோஷாப்பில் எழுதப்பட்டுள்ளது.
இந்த பதிவை, Maruppu – மறுப்பு என்ற ஃபேஸ்புக் பக்கம் ஆகஸ்ட் 4, 2019 அன்று பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சில தினங்களுக்கு முன்பு, பொள்ளாச்சியில் இருந்து தேங்காய் ஏற்றிக்கொண்டு வந்த லாரியை கடத்தியவர்கள் தி.மு.க-வைச் சார்ந்தவர்கள் என்று ஒரு செய்தி பலராலும் பகிரப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஃபேஸ்புக் பதிவில், சம்பந்தப்பட்டவர்கள் பா.ஜ.க நிர்வாகிகள், பொள்ளாச்சி நகர பா.ஜ.க செயலாளர் என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே, இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியைத் தேடினோம். அப்போது 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது. அப்போது, தினமலர், தந்தி டி.வி, மாலைமலர் என்று முன்னணி நாளிதழ்கள் அனைத்திலும் இந்த செய்தி வெளியாகி உள்ளது. ஆனால், இவர்களின் அரசியல் பின்னணி பற்றி யாரும் எதுவும் கூறவில்லை.
2018 நவம்பர் மாதத்தில் வெளியான பழைய செய்தியை அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான நியூஸ் ஜெ 2019 ஆகஸ்ட் 3ம் தேதி புதிய செய்தி போல வெளியிட்டிருந்தது. லாரி கடத்தல் சமீபத்தில் இந்த சம்பவம் நடந்தது போன்ற ஒரு தோற்றத்தை செய்தியின் தலைப்பு உருவாக்கி இருந்தது.
அந்த செய்தியைப் படித்துப் பார்த்தபோது, இந்த சம்பவம் தொடர்பாக 2018ம் ஆண்டு நவம்பர் மாதமே, கோவில்பாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ்குமார், ஹரிபிரசாத், பொள்ளாச்சியை சேர்ந்த கோகுல், திவான்சாபுதூர் மணிகண்டன், மீனாட்சிபுரத்தை சேர்ந்த அப்துல்ரகுமான், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு பொள்ளாச்சி துணை நீதிமன்றத்தில் நடந்து வருவது தெரிந்தது. இதில் புதிய செய்தியாக, கைது செய்யப்பட்டவர்கள் தி.மு.க-வைச் சார்ந்தவர்கள் என்றும் மு.க.ஸ்டாலினுடன் இவர்கள் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அந்த செய்தியில் மு.க.ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படத்தை அவர்கள் வெளியிடவில்லை. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதனால், நியூஸ் ஜெ-வின் யூடியூப் பக்கத்தில் இது தொடர்பாக வீடியோ பதிவு உள்ளதா என்று தேடினோம். அப்போது, அந்த செய்தி கிடைத்தது. அதில், தேங்காய் லாரியை கடத்திய குற்றவாளிகள் என்று ஆறு பேர் புகைப்படத்தை முதலில் காட்டினர். பின்னர், அதில் கோகுல்ராஜ், மணிகண்டன் இருவரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படத்தையும் காட்டியுள்ளனர். இதன் மூலம், இவர்கள், பா.ஜ.க-வைச் சார்ந்தவர்கள் இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. அதேசமயம், திமுக.,வைச் சார்ந்தவர்களா, இல்லையா என்பது பற்றி அக்கட்சி இதுவரை தெளிவுபடுத்தவில்லை.
நம்முடைய ஆய்வில், தேங்காய் லாரி கடத்தப்பட்ட சம்பவம் 2018 நவம்பரில் நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், தேங்காய் கடத்தலில் ஈடுபட்டவர்கள் பா.ஜ.க-வினர் என்று கூறியிருப்பது தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தேங்காய் லாரியை கடத்திய பாஜக நிர்வாகிகள்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
