உ.பி.யில் இரண்டு மாதங்களில் 729 கொலை, 800 பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளதா?

அரசியல் சமூக ஊடகம்

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு மாதங்கள் 729 கொலையும் 800 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நடந்துள்ளது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

YOGI 2.png

Facebook Link I Archived Link

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இரண்டு மாதங்களில் மட்டும் உ.பியில் 729 கொலை, 800 கற்பழிப்பு #பிபிசி_செய்தி” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டு மாதங்களில் என்று சொல்லியுள்ளார்கள்… ஆனால் எந்த இரண்டு மாதம் என்று குறிப்பிடவில்லை. பி.பி.சி செய்தி இணைப்பும் கொடுக்கப்படவில்லை.

இந்த பதிவை, WORLD LOVE MARKETPLACE என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Syed Nasurudeen என்பவர் ஜூலை 31, 2019 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இந்த தகவல் எப்போது வெளியானது என்று குறிப்பிடவில்லை. பிபிசி செய்தி என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். இதனால், பி.பி.சி-யில் இது தொடர்பாக ஏதாவது செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியையும் பி.பி.சி வெளியிடவில்லை.

YOGI 3.png

சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் கொலை, பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஏதேனும் அறிவிப்பு, செய்தி வெளியானதா என்று இதைத் தொடர்ந்து கூகுளில் தேடினோம். தமிழில் தேடியபோது அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

YOGI 4.png

இதையே ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அப்போது 2017ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி வெளியான செய்தி ஒன்று கிடைத்தது. பிடிஐ வெளியிட்ட செய்தியை பிசினஸ் ஸ்டாண்டர்டு வெளியிட்டது நமக்குக் கிடைத்தது. அதில், “உத்தரப்பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த இரண்டு மாதங்களில் 729 கொலைகளும் 803 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நடந்துள்ளது” என்று அம்மாநில அமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். மேலும், சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க யோகி ஆதித்யநாத் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகத் தெரிவித்திருந்தார். அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

தற்போது, உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை எப்படி உள்ளது, இது தொடர்பாக சமீபத்திய செய்தி ஏதேனும் உள்ளதா என்று தேடினோம். அப்போது, கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவருவதாக அம்மாநில டிஜிபி தெரிவித்திருந்தது கிடைத்தது. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

நம்முடைய ஆய்வில்,

உ.பி-யில் இரண்டு மாதங்களில் 729 கொலை, 800 பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்ததாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

உ.பி-யில் ஆட்சிக்கு வந்த முதல் இரண்டு மாதத்தில் உ.பி-யில் நடந்த குற்ற சம்பவங்களை அம்மாநில அமைச்சர் பட்டியலிட்ட செய்தி நமக்குக் கிடைத்துள்ளது.

அந்த செய்தி, 2017ம் ஆண்டு ஜூலையில் வெளியிடப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக உ.பி-யில் குற்றச்சம்பவங்கள் பெருமளவு குறைந்துவருவதாக அம்மாநில டி.ஜி.பி அளித்திருந்த பேட்டி நமக்குக் கிடைத்துள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், 2017ம் ஆண்டு வெளியான செய்தியை, தற்போது வெளியிட்டு, உ.பி-யில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்பது போன்ற தோற்றத்தை சித்தரிக்க முயன்றது உறுதியாகி உள்ளது.

பி.பி.சி-யில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது போன்று எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. பழைய சம்பவத்தை, பிபிசி பெயரில், தற்போது நடந்தது போலப் பகிர்ந்துள்ளனர். இதனால் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:உ.பி.யில் இரண்டு மாதங்களில் 729 கொலை, 800 பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False