28 பேரின் உயிரைக் காப்பாற்றி உயிரிழந்த பஸ் டிரைவர்… வைரல் படம் உண்மையா?

சமூக ஊடகம்

‘’பேருந்தில் இருந்த 28 பேரின் உயிரைக் காப்பாற்றிவிட்டு இறந்த டிரைவர் மாரிமுத்து. உங்களிடம் ஒரு நிமிடம் இருந்தால் ஆர்.ஐ.பி என்று டைப் செய்யவும்,’’ என்ற தலைப்பில் ஒரு படம் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

பேருந்தில் இருந்த 28 பேரின் உயிரைக் காப்பாற்றி விட்டு இறந்த டிரைவர் மாரிமுத்து .உங்களிடம் ஒரு நிமிடம் டைம் இருந்தால் இவருக்காக Rip என்று கமெண்ட் செய்யவும் .

Driver saves lives of 28 ppl before dying on spot. RIP!

Archived link

வாகனம் ஒன்றில், ஓட்டுநர் ஒருவர் நினைவிழந்த நிலையில் இருக்கிறார். அவர் அருகில் சிறுவன் ஒருவன் தவிப்புடன் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளனர். அதில், பேருந்திலிருந்த 28 பேரின் உயிரைக் காப்பாற்றி உயிரை விட்ட டிரைவர் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், உங்களிடம் ஒரு நிமிடம் இருந்தால் இவருக்காக ஆர்.ஐ.பி என்று கமென்ட் செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். தமிழ் பியூட்டி என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவை, மே 3ம் தேதி வெளியிட்டுள்ளது. 28 பேரின் உயிரைக் காப்பாற்றிவிட்டு உயிர்விட்டார் என்று நினைத்து பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர். 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆர்.ஐ.பி என்று டைப் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

பதிவில் பேருந்தில் இருந்த 28 பேரின் உயிரைக் காப்பாற்றிய டிரைவர் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், படமோ, டாடா ஏஸ் போன்ற சிறிய ரக வாகனம் போல் இருந்தது. மேலும், சிறுவன் ஒருவன் தவிப்புடன் இருக்கிறான். இதனால், இந்த படத்தின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம். படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.

BUS DRIVER 2.png
BUS DRIVER 3.png

இந்த படம் தொடர்பான செய்தி நமக்குக் கிடைத்தது. கர்நாடக மாநிலம் தும்கூரைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் டாடா ஏஸ் வாகனத்தை ஓட்டி வந்தார். மே 1ம் தேதி, டாடா ஏஸ் வாகனத்தை ஓட்டிவந்தபோது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி வந்தது. நிலைதடுமாறி அவர் ஸ்டியரிங் மீது சாய்ந்துவிட்டார்.

அவர் அருகில் இருந்த ஐந்தாம் வகுப்பு படித்துவந்த மகன் புனீத், அந்த இக்கட்டான சூழ்நிலையில் பதற்றம் அடையாமல் ஸ்டியரிங்கை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து வாகனத்தை சாலையின் ஓரத்துக்கு கொண்டுவந்து நிறுத்தியுள்ளான். இதில் சோகம் என்ன என்றால், சிவக்குமார் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார்.

இது தொடர்பாக ஹாலியார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லக்‌ஷ்மிகாந்த் உள்ளிட்டவர்கள் இக்கட்டான சூழ்நிலையிலும் சாதூர்யமாக செயல்பட்ட சிறுவனைப் பாராட்டினர். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

உண்மை இப்படி இருக்க, துளி கூட பொருந்தாத வகையில் பஸ் டிரைவர் என்றும், அவர் பெயர் மாரிமுத்து என்றும், 28 பேர் உயிரைக் காப்பாற்றினார் என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஒரு லைக்ஸ், ஷேருக்காக இந்த அளவுக்கு அநாகரீகமாக நடந்து கொண்டிருப்பது புரிந்தது. உண்மையைச் சொல்லியிருந்தாலே பலரும் அந்த சிறுவனைப் பாராட்டியிருப்பார்கள்.

நமக்குக் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில், உண்மையில் நிகழ்ந்த சோக சம்பவத்தின் படத்துடன் தவறான தகவல் தந்து பகிர்ந்துள்ளது உறுதியாகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:28 பேரின் உயிரைக் காப்பாற்றி உயிரிழந்த பஸ் டிரைவர்… வைரல் படம் உண்மையா?

Fact Check By: Praveen Kumar 

Result: False