மதம் மாறிய திரை பிரபலங்கள்; இணையதளத்தில் வெளியான செய்தி உண்மையா?

சமூக ஊடகம் சமூகம் சினிமா

தமிழ் சினிமாவில் இது வரை மதம் மாறிய நடிகர் – நடிகைகளின் அதிர்ச்சி பட்டியல் மற்றும் பின்னணி தெரியவந்துள்ளதாக TNNews24 என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

தமிழ் சினிமாவில் இதுவரை மதம் மாறிய நடிகை நடிகைகளின் பட்டியல் அதிர்ச்சி அளிக்கும் பின்னணி தகவல்கள்.

Archived link 1

Archived link 2

நடிகர்கள் ரஜினி, அஜித், சரத்குமார் உள்ளிட்டவர்கள் அமர்ந்திருக்கும் படத்துடன், மதம் மாறிய நடிகர்கள் பட்டியல், அதிர்ச்சி பின்னணி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மே 1ம் தேதி, TNNews24 என்ற இணையதளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. பிரபல நடிகர்கள் மதம் மாறியதற்கு ஏதோ அதிர்ச்சி பின்னணி உள்ளது என்று நினைத்து பலரும் இந்த பதிவை ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

காதலுக்காக, மதத்தின் மீது உள்ள பற்று காரணமாக, பணத்திற்காக பலரும் மதம் மாறுகின்றனர். அந்த வகையில் மதம் மாறிய சினிமா பிரபலங்கள் யார் யார் என்று சொல்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவில், யார், எந்த மதத்திற்கு மாறினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. தலைப்பில் இருந்தது போன்று பின்னணி, அதிர்ச்சி பின்னணி தகவல் எதையும் அளிக்கவில்லை. ஏதோ ஒரு காரணத்துக்காக தாங்கள் பிறந்து வளர்ந்த இந்து மதத்தினை மதிக்காமல் மாறியவர்கள் என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.

CONVERT 2.png

அதிர்ச்சி பின்னணி தகவலைத்தான் அளிக்கவில்லை, சரி, மதம் மாறியவர்கள் பற்றிய தகவலாவது உண்மையா என்று பரிசோதித்தோம்.

முதலில், குறளரசன், யுவன் ஷங்கர் ராஜா பெயர் இருந்தது. இவர்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாகக் கூறப்பட்டு இருந்து. இது உண்மைதான். இருப்பினும் அதை நிரூபிப்பதற்கான ஆதாரத்தை கூகுளில் தேடினோம். இஸ்லாம் மதத்துக்கு மாறினார் டி.ராஜேந்தர் மகன் என்று புதிய தலைமுறை செய்தி கிடைத்தது. அதேபோல், யுவன் சங்கர் ராஜா ரகசிய திருமணம் என்று இந்து தமிழ் வெளியிட்ட செய்தியும் கிடைத்தது.இவர்கள் இருவர் பற்றிய TNNews24-ன் இந்த தகவல் உண்மைதான்.

அடுத்ததாக நடிகை பிரியா மணி பெயர் இருந்தது. அவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாகக் கூறப்பட்டு இருந்தது. இது பற்றி தேடியபோது, பிரியா மணி இஸ்லாமியரை திருமணம் செய்த தகவல் கிடைத்தது. ஆனால் நான் மதம் மாறவில்லை அதனால் பெயரை மாற்ற மாட்டேன், இந்துவாகத்தான் இருப்பேன், இந்து தெய்வங்களை வழிபடுவேன் என்று அவர் அளித்த செய்தி ஆதாரம் கிடைத்தது. இதன்மூலம் TNNews24-ன் இந்த தகவல் பொய்யானது என்பது தெரிந்தது.

CONVERT 3.png

உமா ரியாஸ் – கிறிஸ்தவராக மதம் மாறினார் என்று உள்ளது. உண்மையில் உமா ரியாஸ் இஸ்லாமியரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவர் மதம் மாறியது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. இஸ்லாமியரைத் திருமணம் செய்துகொண்டாலும் அவர் பெயரைக் கூட மாற்றிக்கொள்ளவில்லை. அடிப்படையில் உமா ரியாஸ், இந்து மதத்தைச் சேர்ந்தவர். அவரது தாயார் பழம்பெரும் நடிகை கமலா காமேஷ். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

நடிகை விஜயலட்சுமி கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது. உண்மையில் நடிகை விஜயலட்சுமி, ஃபெரோஸ் என்ற இஸ்லாமியரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் இந்து முறைப்படிதான் நடந்தது. விஜயலட்சுமி திருமண புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த தகவலில் உண்மை இல்லை என்பது தெரிந்தது.

CONVERT 4.png

பாடகர் மனோ, கிறிஸ்தவராக மாறிவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது. உண்மையில் மனோ பிறப்பால் இஸ்லாமியர். அவரது இயற்பெயர் நாகூர் பாபு. அவர் இன்றும் இஸ்லாமியராகவே உள்ளார். கிறிஸ்தவத்துக்கு மதம் மாறியதாக, அவர் பற்றி எந்த செய்தியும் இல்லை. அப்படியே மாறி இருந்தாலும் இந்து மதத்தில் இருந்து மாறியதாகக் கூற முடியாது. இஸ்லாமில் இருந்து கிறிஸ்தவராக மாறியதாகவே கருத முடியும். ஆனால், இதுபற்றி எந்த அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை.

சன் மியூசிக் அஞ்சனா, இஸ்லாமியரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர் மதம் மாறவில்லை. மதம் மாறப்போவதும் இல்லை என்று பேட்டி அளித்துள்ளார்.

நடிகை மோனிகா கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது. உண்மையில் அவர் இஸ்லாமியராக மாறி, திருமணம் செய்துகொண்டார். கிறிஸ்தவராக மதம் மாறவில்லை.

நகைச்சுவை நடிகை மதுமிதா தன்னுடைய உறவினர் ஜோயல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்து முறைப்படியே திருமணம் நடந்துள்ளது. அவருடைய திருமண அழைப்பு படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது…

CONVERT 5.png

நடிகர் ஜெய் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாக இந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தேடியபோது, குடும்பத்தினர் விருப்பம் இல்லாத காரணத்தால் ஜெய் மதம் மாறவில்லை என்று கூறப்பட்டு இருந்தது. மற்றொரு செய்தியில், மதம் மாறவில்லை; ஆனால் பின்பற்றுகிறேன் என்று அவரே கூறியதாக உள்ளது.

இப்படி செய்தியில் உள்ள தகவல் பாதி உண்மை, பாதி பொய்யுமாக இருந்தது. ஒரு செய்தியை வெளியிடும் முன்பு அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். சினிமா பிரபலங்கள் மதம் மாறிவிட்டார்கள் என்ற செய்தியை வெளியிடுவதற்கு முன்பு சம்பந்தப்பட்டவர்களிடம் உண்மை என்ன என்று கேட்ட பின், இந்த செய்தியை Tnnews24 வெளியிட்டிருக்கலாம். அல்லது குறைந்த பட்சம், அவர்கள் பெயரை கூகுளில் டைப் செய்தாலே, அவர்கள் பற்றிய விவரங்கள் கிடைத்திருக்கும். அதையாவது பார்த்து சரி செய்திருக்கலாம். விஷமத்தன்மான செய்தியை வெளியிடுவதில் காட்டிய ஆர்வத்தை, கொஞ்சம் அதன் நம்பகத்தன்மையை சரி பார்க்க காட்டியிருக்கலாம்.

இயக்குநர் டி.ராஜேந்தரின் மகன் குறளரசன் மத மாற்றம் என்பது குடும்பத்தினர் ஒப்புதலுடன் நடந்தது. இது குறித்து டி.ராஜேந்தர் வெளிப்படையாகவே பத்திரிகையாளர்களை அழைத்து அறிவிப்பு செய்தார். நடிகை பிரியாமணி, சன் மியூசிக் அஞ்சனா இஸ்லாமியரை திருமணம் செய்தாலும் மதம் மாறவில்லை என்று பேட்டியே அளித்துள்ளனர். நடிகை விஜய லட்சுமி, மதுமிதா திருமணம் இந்து முறைப்படி நடந்துள்ளது. அப்படி என்றால், இஸ்லாமியரான ஃபெரோஸ், கிறிஸ்தவரான ஜோயல் இந்துவாக மதம் மாறிவிட்டனர் என்று வேண்டுமானால் கூறலாம்.

தங்களுக்குப் பிடித்த கடவுளை வணங்குவது என்பது அவரவர் விருப்பம். இந்த பிரபலங்கள் யாரும் கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டவர்கள் இல்லை. ஆனால், கட்டுரையில் மத மாற்றத் தடை சட்டம் வர வேண்டியது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இப்படி எந்த ஒரு ஆய்வும் இன்றி, மதம் அடிப்படையில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் TNNews24 இணையதளம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது உறுதியாகிறது.

முடிவு:

உண்மையான நிகழ்வுடன், விஷமத்தனமான, பொய்யான செய்தியும் கலந்து வெளியட்டு, இரு தரப்பினர் இடையே கசப்புணர்ச்சியை உண்டாக்க முயன்றுள்ளனர். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:மதம் மாறிய திரை பிரபலங்கள்; இணையதளத்தில் வெளியான செய்தி உண்மையா?

Fact Check By: Praveen Kumar 

Result: Mixture

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •